Last Updated : 17 Oct, 2020 12:30 PM

11  

Published : 17 Oct 2020 12:30 PM
Last Updated : 17 Oct 2020 12:30 PM

தாய்மொழி பாடத்திட்டத்தின் மூலம் புரிந்து படித்தால் எந்தத் தேர்வையும் எதிர்கொள்ளலாம்: நீட்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர் ஜீவித்குமார் பேட்டி

பெரியகுளம்

தாய்மொழி பாடத்திட்டத்தின் மூலம் புரிந்து படித்தால் எந்தத் தேர்வையும் எதிர்கொள்ளலாம் என்று நீட்தேர்வில், அரசுப் பள்ளிகள் பிரிவில் தேனி மாணவர் ஜீவித்குமார் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்ற மாணவர் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே டி.வாடிப்பட்டியைச் சேர்ந்த மாணவர் ஜீவித்குமார். இவர் உள்ளூரில் 8-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்தார். பின்பு சில்வார்பட்டியில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் பிளஸ் 2 வரை படிப்பைத் தொடர்ந்துள்ளார்.

கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் 548 மதிப்பெண் பெற்று முதல் மாணவராக வெற்றி பெற்றார். படிப்பில் சிறந்து விளங்கியதால் இவரை நீட் தேர்வு எழுத பள்ளி தலைமையாசிரியர் மோகன் உள்ளிட்ட ஆசிரியர்கள் வலியுறுத்தினர். பள்ளியிலேயே பயிற்சியும் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நீட்தேர்வு எழுதினார். இதில் 720-க்கு 190 மதிப்பெண் பெற்றார். இருப்பினும் இரண்டாம் முறையாக தற்போது இத்தேர்வை எழுதி 664 மதிப்பெண் பெற்றுள்ளார். அரசுப்பள்ளி பிரிவில் இவர் தேசிய அளவில் முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்திய அளவில் 1823வது இடத்தைப் பெற்றுள்ளார்.

இவரது தந்தை நாராயணசாமி சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கரோனா ஊரடங்கினால் வேலைஇழந்ததால் சொந்த ஊருக்கு வந்து ஆடு வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளார். தாய் மகேஸ்வரி நூறு நாள் வேலைத்திட்டம் மற்றும் தையல் தொழிலையும் செய்து வருகிறார்.

சாதனை படைத்த மாணவர் ஜீவித்குமார் கூறுகையில், "தாய் மொழி வழியிலான படிப்பு எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது. முதல் முறை தோற்ற போதும், இத்தேர்வில் அடுத்த முறை வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.

பாடத்திட்டத்தில் இருந்தே கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததுதான் இதற்குக் காரணம். எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியில் இம்முறை ராசிபுரத்தில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்தேன். ரூ.1.10லட்சம் செலுத்தி 10 மாதம் அங்கேயே தங்கிப்படித்தேன். தேர்வு குறித்து அங்கு நிறைய விஷயங்கள் தெரிந்தது. வாரம் இரண்டு முறை தேர்வு, தினமும் 10 மணி நேர படிப்பு போன்றவை தேர்வை எளிதாக்கியது.

தேர்வு நெருங்கிய போது தினமும் மாதிரித்தேர்வு எழுதி பயிற்சி பெற்றேன். சிபிஎஸ்இ பாடப்புத்தகங்களை தமிழில் மொழி பெயர்த்து படித்தேன். அது எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது.

அரசுப் பள்ளியில் படித்து நீட்தேர்வில் வெற்றி பெற்றுள்ளதைக் கண்டு பலரும் பாராட்டி வருகின்றனர். தாய்மொழி பாடத்திட்டத்தின் மூலம் புரிந்து படித்தவர்கள் எந்தத் தேர்வையும் தைரியமாக எதிர்கொள்ளலாம். பள்ளி நிர்வாகம்தான் என் மேல் நம்பிக்கை வைத்து உற்சாகப்படுத்தியது. இந்த வெற்றிக்கு அதுதான் மூலகாரணம்" இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x