Published : 17 Oct 2020 12:08 PM
Last Updated : 17 Oct 2020 12:08 PM

வெள்ள அபாயத்தில் குமரி அணைகள்; 3,192 கன அடி தண்ணீர் திறப்பால் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு: மண்டலக் குழுக்கள் தீவிர கண்காணிப்பு

பெருஞ்சாணி அணையில் இருந்து நேற்று 3,192 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

நாகர்கோவில்/ தென்காசி/ திருநெல்வேலி

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை பரவலாக பெய்தது.மாவட்டம் முழுவதும் உள்ள 2,040பொதுப்பணித்துறை குளங்களில் 1,800 குளங்கள் நிரம்பி மறுகால் பாய்கின்றன. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44.50 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 2,885 கனஅடி தண்ணீர் வரத்தாகிறது.

இதைப்போல், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் நேற்று 75 அடியாக உயர்ந்தது. அணைக்கு2,308 கனஅடி தண்ணீர் வருகிறது. இதனால், அணையில் இருந்து நேற்று காலை விநாடிக்கு 3,192 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பரளியாற்றில திறந்து விடப்பட்ட தண்ணீர் வலியாற்றுமுகம், அருவிக்கரை, திருவட்டாறு, மூவாற்றுமுகம், குழித்துறை தாமிரபரணி ஆறுவழியாக தேங்காய்பட்டினம் கடலில்கலக்கிறது. தற்போது பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, மாம்பழத்துறையாறு ஆகிய அணைகள் வெள்ள அபாய எச்சரிக்கையில் உள்ளன.

தாமிரபரணி ஆற்றில் தண்ணீர்கரைபுரண்டு ஓடுவதால் பொதுப்பணித்துறையினர், வருவாய்த் துறையினர், தீயணைப்பு துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பரளியாற்றில் இருந்து தேங்காய்பட்டினம் வரை கரையோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும்மக்களை, தற்காலிக முகாம்களுக்கு எந்நேரத்திலும் மாற்றுவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.

வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்ள மண்டல அளவிலான 9 கண்காணிப்பு குழுக்களும், வட்டாட்சியர்களும் தயார் நிலையில் உள்ளனர். பழுதடைந்த நிலையிலுள்ள அரசு கட்டிடங்கள், அங்கன்வாடி மையங்கள் குறித்த விவரங்களை மாவட்ட அவசரகால செயல்மைய இலவச தொலைபேசி எண்ணான1077-ல் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சியர் பிரசாந் மு.வடநேரே வலியுறுத்தியுள்ளார்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் குண்டாறு அணையில் 29 மி.மீ. மழை பதிவானது. அடவிநயினார் அணையில் 25 மி.மீ., தென்காசியில் 20.20 மி.மீ., கடனாநதி அணை, ராமநதிஅணையில் தலா 10 மி.மீ., செங்கோட்டையில் 6 மி.மீ., ஆய்க்குடியில் 4.60 மி.மீ., கருப்பாநதி அணையில் 1.50 மி.மீ. மழை பதிவானது.

குண்டாறு அணை, அடவிநயினார் அணை, ராமநதி அணை ஆகியவை ஏற்கெனவே நிரம்பிவிட்டதால் இந்த அணைகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில், 72 அடி உயரம் உள்ள கருப்பாநதி அணையும் நிரம்பியது. பாதுகாப்பு கருதி இந்த அணையின் நீர்மட்டம் 69.23 அடியில் நிலைநிறுத்தப்பட்டு, உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. 85 அடி உயரம் உள்ள கடனாநதி அணை நீர்மட்டம் 81.40 அடியாக இருந்தது. குற்றாலம் அருவிகளில் கடந்த 4 நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று வெள்ளப்பெருக்கு குறைந்தது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அணைப்பகுதியில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 30 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. இதுபோல் சேர்வலாறு அணையில் 15 மி.மீ., மணிமுத்தாறு அணையில் 2.8 மி.மீ., கொடுமுடியாறு அணையில் 14 மி.மீ. மழை பெய்திருந்தது. 143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 101 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நேற்று நீர்மட்டம் 4 அடி உயர்ந்து, 105.90 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 3,600 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 373 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 118 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 70.90 அடியாக இருந்தது. நேற்று நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்ந்து 72.80 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,404 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 122.64 அடியிலிருந்து 125.65 அடியாக உயர்ந்திருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x