Published : 17 Oct 2020 07:28 AM
Last Updated : 17 Oct 2020 07:28 AM
நியாய விலைக் கடைகளில் சர்வர் பிரச்சினை காரணமாக பயோமெட்ரிக் முறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது, பழைய முறைப்படி பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.
திருவாரூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் 2 கோடியே 2 லட்சம் பேருக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டன. ஸ்மார்ட் கார்டு அறிமுகம் செய்யப்பட்டபோதே பல்வேறு பிரச்சினைகள் இருந்து வந்தன. பின்னர் குறைபாடுகள் சரிசெய்யப்பட்டன. பெரிய திட்டங்களை செயல்படுத்தும்போது நடைமுறை சிக்கல்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான்.
அந்த வகையில் கிராமப்புறங்களில் செயல்படும் நியாயவிலைக் கடைகளில் ஏற்படும் சர்வர் பிரச்சினையால் பயோமெட்ரிக் கருவி உதவியுடன் பொருட்களை வாங்குவதில் பிரச்சினை உள்ளதாக பொதுமக்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். எனவே, பயோமெட்ரிக் முறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.
பழைய முறைப்படி ஸ்மார்ட் கார்டு அடிப்படையிலேயே பொதுமக்கள் நியாயவிலைக் கடைகளில் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.
வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் நியாயவிலைக் கடைகளுக்கு வழங்குவதற்கு 3 மாதங்களுக்கு தேவையான அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கையிருப்பில் உள்ளன.
அக்.1-ம் தேதி அன்று தொடங்கிய இந்த ஆண்டுக்கான காரிப் பருவத்தில் இதுவரை ஒரு லட்சத்து 50 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 816 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டு அதன் மூலம் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது என்றார்.
புகார்கள் மீது நடவடிக்கை...
தொடர்ந்து, மன்னார்குடி அருகே கண்ணாரப்பேட்டை நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தியது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “உணவுத் துறையின் புலனாய்வு அமைப்புக்கும், லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் புகார் வரும்பட்சத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலில் முறைகேடு நடப்பதாக விவசாயிகள் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். முறைகேட்டுக்கு தமிழக அரசு ஒருபோதும் இடமளிக்காது” என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT