Published : 14 Sep 2015 04:44 PM
Last Updated : 14 Sep 2015 04:44 PM

கோவை அருகே மலைவாழ் மக்களுக்காக மொபட்டில் நடமாடும் மளிகைக் கடை

கோவையின் கடைகோடியில் வாழும் மலைப்பகுதி மக்களுக்காக தினசரி தனது மொபட்டில் மளிகைப் பொருட்களை கொண்டு சென்று, திறந்த வெளியில் கடைவிரித்து விற்று வருகிறார் அன்னக்கிளி என்ற கிராமத்து பெண்மணி.

கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்டது பூண்டி அருகே உள்ள தாணிக்கண்டி, மடக்காடு, முட்டத்துவயல், பட்டியார்பதி போன்ற கிராமங்கள். பூண்டிக்கு செல்லும் ஒரு சில பேருந்துகள் முட்டத்துவயல் வழியே சென்றாலும் தாணிக்கண்டி, மடக்காடு, பட்டியார் கோவில்பதி ஆகிய கிராமங்களுக்கு பேருந்து வசதிகள் இல்லை. ஒரு காலத்தில் மலைப்பகுதிகளில் வசித்த இந்த கிராம மக்கள் அவரவர் கிராமங்களுக்கு கீழ்புறம் உள்ள அடிவாரப் பகுதிகளுக்கு வசிப்பிடம் மாறி வந்து விட்டாலும், இவர்கள் இப்போது வசிக்கும் பகுதிகளுக்கு செல்ல வாகன வசதிகள் இல்லை.

எனவே மலைக்குன்றுகளுக்கிடையே நடந்து, முட்டத்து வயல் வந்து மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் வாங்கிச் செல்ல வேண்டிய சூழல். அதுவும் கோவையிலிருந்து (20 கிமீ தொலைவு) பொருட்கள் வாங்கிச் சென்று விற்கும் சிறு மளிகைக் கடைகளே இங்கு உள்ளன.

முட்டத்துவயல் கிராமத்துக்கு மலைக்குன்றுகள் வழியே நடந்து சென்றால் சுமார் 2 அல்லது 3 கிமீ ஆகும். அதுவே முட்டத்துவயலுக்கு பூண்டி-கோவை வழித்தடத்தில் செல்லும் பேருந்தில் செல்வதனால் 1.5 கிமீ தூரம் ஈஷா யோகா மையம் வரை நடந்து, அங்குள்ள நிறுத்தத்தில் பேருந்து ஏறி மேலும் 3 கிமீ தூரம் செல்ல வேண்டும்.

அப்படித்தான் மளிகை உள்ளிட்ட பொருட்களை காலங்காலமாக வாங்கிச் சென்று வந்தனர் இந்த பகுதி மலை மக்கள். ‘அவர்கள் கஷ்டப்பட்டு எதற்கு முட்டத்துவயல் வரவேண்டும். நாமே நேரில் சென்று பொருட்களை கொடுக்கலாமே’ என்று சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பணியை தொடங்கி இருக்கிறார், முட்டத்துவயல்ல சிறு கடை வைத்து நடத்தி வரும் அன்னக்கிளி.

இவர் தாணிக்கண்டியில் கடைவிரித்திருந்தபோது, ‘தி இந்து’விடம் கூறியதாவது: இங்கே தாணிக்கண்டியில் 65 மலைவாசி குடும்பங்களும், மடக்காட்டில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களும் வசிக்கின்றன. அதற்கு அடுத்த பட்டியார் கோவில்பதியில் சிறிய கடைகள் இருந்தாலும், எல்லா மளிகைப் பொருட்களும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. அவர்கள் எல்லோரும் முட்டத்துவயலுக்கு வந்து மளிகை வாங்கிச் செல்வதைப் பார்க்கவே கஷ்டமாக இருக்கும்.

அதற்குப்பிறகுதான், நாமே நேரில் போய் அவர்களுக்கு பொருட்களை கொடுத்தால் என்ன என்று தோன்றியது. காய்கறி, துணிமணிகள், பேன்சி பொருட்களை சைக்கிளிலோ, மொபட்டிலோ கொண்டு போய் விற்பது மிகவும் எளிது. ஆனால் அரிசி, பருப்பு, மிளகு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் வரைக்கும் மளிகைப் பொருட்களை கொண்டு போய் கொடுப்பது சிரமமான காரியம் என்றார்கள். அதையும்தான் செய்வோமே என்று மொபட்டில் எடுத்துக் கொண்டு கொடுக்க ஆரம்பித்தேன். ஒருநாள் தாணிக்கண்டியில் என்றால், அடுத்தநாள் மடக்காடு, பட்டியார் கோவில்பதி என்று அடுத்தடுத்த இடங்களுக்குச் சென்று விடுவேன்.

காலை 7 மணிக்கு வந்தால் 11 மணி வரை இங்குள்ள ரேஷன் கடை திண்ணையிலேயே கடை விரித்துவிடுவேன். வியாபாரம்னு பெரிசா இதை சொல்ல முடியாது. ஏதோ ஒரு நாளைக்கு நூறு, இருநூறு ரூபாய்க்கு பொருட்கள் விற்கும். சில நாள் அதுகூட விற்காது. நான் வராவிட்டாலும் இந்த ஜனங்க முட்டத்துவயல்ல இருக்கிற எங்க கடைக்கு வந்து வாங்கிக்குவாங்கதான். ஆனால் அவங்க அங்கே வரைக்கும் நடந்து வந்து பொருட்களை வாங்கிறதை பார்த்தா கஷ்டமா இருக்கும் பாருங்க. அதுதான் தொடர்ந்து இங்கே வந்து இப்படி கடை போட்டுட்டு இருக்கேன். இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து இங்குள்ளவர்கள் கூறும்போது, ‘தாணிக்கண்டியிலேயே கொஞ்ச காலம் ஒரு சில்லறைக் கடை இருந்தது. அதில் வியாபாரம் இல்லை என்பதால் அதை நடத்தியவர்கள் மூடிவிட்டனர். இந்த நிலையில் இப்பெண்மணி இதனை செய்து கொண்டிருக்கிறார். இவர் செய்வது வியாபாரம் அல்ல; சேவை என்றே சொல்ல வேண்டும்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x