Published : 16 Oct 2020 05:29 PM
Last Updated : 16 Oct 2020 05:29 PM

புதிதாகப் பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு தேர்தல் அதிகாரிகள் அறிவிப்பு: மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை

புதிதாகப் பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்களில் மாவட்டத் தேர்தல் அலுவலகச் செயல்பாடுகளை அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், மாவட்ட ஆட்சியர்களை தேர்தல் அதிகாரிகளாக அறிவித்து உத்தரவிட்டுள்ளதாக மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் நிர்வாக வசதிக்காக விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இதேபோன்று காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு எனவும், வேலூர் மாவட்டம் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் எனவும், திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி, தென்காசி எனவும் பிரிக்கப்பட்டன. இதனால் மாவட்டங்களின் எண்ணிக்கை 37 ஆனது.

ஏற்கெனவே உள்ள 32 மாவட்டங்களுக்குத் தேர்தல் அதிகாரிகள் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்குத் தேர்தல் அதிகாரி அறிவிக்கப்பட்டுள்ளனர். புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டம் இதில் சேர்க்கப்படவில்லை.

இதுகுறித்து மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

“விழுப்புரம், திருநெல்வேலி, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்டங்களின் பிரிக்கப்படுதல்/ தனியாக்கப்படுதல் காரணமாக ஐந்து புதிய மாவட்டங்கள், அதாவது கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்கள், எபிக் (EPIC data base) ஈபிஐசி தரவுத்தளத்தைப் பராமரிப்பதற்காக தேர்தல் நிர்வாகத்திற்கான தனி உள்கட்டமைப்பு இம்மாவட்டங்களில் நிறுவப்பட்டுள்ளது.

இது தவிர புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் தனித் தேர்தல் பிரிவு நிறுவப்பட்டுள்ளது. எனவே, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 இன் பிரிவு 13 ஏஏ படி (Section 13AA of the Representation of the People Act, 1950) கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களின் ஆட்சியர்கள் சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் மாவட்டத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத் தேர்தல் அதிகாரிகளின் பதவி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது”.

இவ்வாறு சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x