Published : 16 Oct 2020 03:47 PM
Last Updated : 16 Oct 2020 03:47 PM
இரண்டு திராவிட கட்சித் தலைவர்களும் எதைச் செய்தாவது ரஜினியின் அரசியல் பிரவேசத்தைத் தடுத்துவிட முயல்கின்றனர், அவர் ஒருவர்தான் இவர்களுடைய கனவுகளைக் கலைப்பவராக இருக்கிறார், இவர்கள் ஊதிப் பெரிதாக்கும் எந்த அவதூறும் அவரைப் பாதிப்பதில்லை என தமிழருவி மணியன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து தமிழருவி மணியன் இன்று வெளியிட்ட அறிக்கை:
“ஒருவரைப் பற்றி ஒரு செய்தி வெளியானால் அதைப் பற்றி அடுத்த கணமே அழுக்கு வார்த்தைகளால் அருவருப்பான நடையில் விமர்சனம் செய்து தங்கள் மன வக்கிரத்தை வெளிப்படுத்தும் ஒரு கூட்டம் சமூக ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்தி வருகிறது.
இதற்குப் பின்னால் சில அரசியல் கட்சிகள் இருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது. எதையாவது ஒரு கருத்தை ஊடகங்களில் வெளிப்படுத்தும் போது விருப்பு வெறுப்பின்றி அக்கருத்து அமைவதுதான் நலன் பயக்கும். உடனே ஒரு செய்திக்கு எதிர்வினை ஆற்றியே ஆகவேண்டும் என்ற கட்டாயமில்லை.
ரஜினியைப் பற்றிய செய்தி எதுவாயினும் ஆழ்ந்த வெறுப்புணர்வுடன் தமிழ்ப் பற்றாளர்களும், இனப் போராளிகளும் தரக்குறைவான மொழியில் விமர்சிப்பதையே தங்கள் வாழ்க்கை முறையாக வகுத்துக் கொண்டனர். இந்த மொழி, இனப் பற்றாளர்களில் பலருக்கு எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் பெயர்களைக்கூடச் சொல்லத் தெரியாது என்பதுதான் பரிதாபத்திற்கு உரியது.
ரஜினி கடந்த ஆறு மாதங்களாகச் செயற்படாத தன்னுடைய திருமண மண்டபத்திற்கு ரூ.6.50 லட்சம் வரி விதித்ததை எதிர்த்து நீதிமன்றம் சென்ற செய்தியைக் கொச்சைப்படுத்தி, இவர்தான் அடுத்த முதல்வரா? என்று மொழிப் பற்றாளர்களும் இனப் போராளிகளும் போர்க்கோலம் பூண்டுப் பொங்கியெழுந்துவிட்டனர். ரஜினி தன் உழைப்பில் உருவாக்கிய சொத்து குறித்த பிரச்சினை அது. ஊர் சொத்தை ரஜினி கொள்ளையடிக்கவில்லை.
மக்களுடைய பொதுச் சொத்தைச் சூறையாடி தன் குடும்பத்திற்கு அவர் சேர்த்து வைக்கவில்லை. கடந்த ஐம்பதாண்டுகளில் இரண்டு திராவிட கட்சிகளின் தலைவர்களும் ஆட்சியதிகாரத்தைப் பயன் படுத்தி மக்களின் பொதுச் சொத்துகளைச் சூறையாடி மாபெரும் கோடீஸ்வரர்களாகப் பவனி வருவதை இந்தச் சமூகம் செயலற்றுப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறது.
அரசியலில் அடியெடுத்து வைத்தபோது அடுத்த வேளை உணவுக்கு வழியின்றி வாடியவர்கள் இன்று பங்களாக்களும், பண்ணை வீடுகளும், ஆடி கார்களுமாக நம் கண்முன்பு எந்தச் சமூகக் கூச்சமுமின்றி வலம் வருவதை நாம் மவுனப் பார்வையாளர்களாகப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். இரண்டு திராவிட கட்சித் தலைவர்களில் ஒருவராவது அறவழியில் பொருள் சேர்த்ததுண்டா? இவர்களை அரசியல் களத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டியது நம் முதல் சமூகக் கடமை இல்லையா.
இதை யாரால் செய்ய முடியும்? பல்வேறு குழுக்களாகப் பிரிந்து இரண்டு மூன்று விழுக்காடு வாக்குகளை வைத்திருக்கும் தமிழ்த் தேசியர்களால் இது இயலுமா. சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபட்டு இரண்டு திராவிட கட்சிகளுடன் கூட்டணியமைத்துத் தங்கள் சொந்த நலனைப் பெருக்கிக்கொள்ளும் கட்சித் தலைவர்களால் இதைச் சாதிக்கக்கூடுமா.
இதற்குத்தான் ரஜினி நமக்குத் தேவைப்படுகிறார். இன்று ரஜினியளவுக்கு மக்களிடையே பேராதரவு பெற்ற மனிதர் ஒருவருமில்லை. அவருடைய அபரிமிதமான மக்கள் செல்வாக்கை மாற்று அரசியல் அரங்கேறப் பயன் படுத்திக்கொள்வதே விவேகமானது. இதுதான் என் நிலை.
இன்று இரண்டு திராவிட கட்சித் தலைவர்களும் எதைச் செய்தாவது ரஜினியின் அரசியல் பிரவேசத்தைத் தடுத்துவிட முயல்கின்றனர். அவர் ஒருவர்தான் இவர்களுடைய கனவுகளைக் கலைப்பவராக இருக்கிறார். இவர்கள் ஊதிப் பெரிதாக்கும் எந்த அவதூறும் அவரைப் பாதிப்பதில்லை. சொத்து வரி விவகாரத்தில் உயர்நீதி மன்றத்தின் பரிந்துரைக்குத் தலை வணங்கி ரூ. 6.5 லட்சம் ரூபாயை மாநகராட்சிக்குச் செலுத்தியதுடன், தவறைத் தவிர்த்திருக்கலாம்.
அனுபவமே பாடம் என்று வெளிப்படையாகப் பதிவிட்டிருக்கிறார். தவறு செய்வதும், செய்தபின் அதைத் தவிர்த்திருக்கலாம் என்று எண்ணுவதும் மனித இயல்பு. ஆனால், அதை வெளிப்படையாக அறிவித்ததுடன், அனுபவமே பாடம் என்று பதிவிட்டிருப்பதில்தான் அவருடைய உயர்பண்பு புலப்படுகிறது.
மீண்டும் சொல்கிறேன், இழிந்த அரசியல்வாதிகளைப் போல் அவர் பொதுச் சொத்தைக் கொள்ளையடித்தவரில்லை. மூடப்பட்ட மண்டபத்திற்கு வரியும் அபராதமும் விதிக்கப் படுவதற்கு எதிராக நிவாரணம் தேடுவதில் எந்த நியாயக் குறைவும் இல்லை. இந்த நல்ல மனிதரின் வரவைத்தான் ஆரோக்கிய அரசியலை விரும்புவோர் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்”.
இவ்வாறு தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT