Published : 16 Oct 2020 03:29 PM
Last Updated : 16 Oct 2020 03:29 PM
60 சதவீதம் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீடு இல்லை என்பதா என, மத்திய அரசுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, கி.வீரமணி இன்று (அக். 16) வெளியிட்ட அறிக்கை:
"நீட் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் பட்டியல் இன்னமும் வெளியாகாத நிலையில், அகில இந்திய தொகுப்புக்கு மாநிலங்களிலிருந்து மருத்துவக் கல்விக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் அதிமுக சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
இந்த ஆண்டுக்கு மட்டும் 27 சதவீதத்தின் அடிப்படையில் தரலாமே...
இந்த மனுக்கள் கடந்த 13 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, மருத்துவப் படிப்புக்காக தமிழகத்தால் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை நடப்புக் கல்வியாண்டான இந்த ஆண்டிலேயே அமல்படுத்த முடியுமா? என்றும், மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருப்பதைப் போலவாவது 27 சதவீத இட ஒதுக்கீட்டையாவது இந்த ஆண்டு மாணவர்களுக்கு ஒதுக்க முடியுமா? என்றும் உயர் நீதிமன்றம் கேட்டது.
சமூக நீதிப் பறிப்பு உணர்வை மத்திய அரசு காட்டியுள்ளது
ஆனால், நேற்றைய விசாரணையில் மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இந்தக் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையில், 50 சதவீத அடிப்படையிலோ அல்லது 27 சதவீத அடிப்படையிலோ கூட தருவதற்கு வாய்ப்பே இல்லை என்று வாய்மொழி மூலம் முதலில் கூறி, பிறகு அதை எழுத்துபூர்வமாக, தாக்கல் செய்யுங்கள் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறிய பிறகே, அதனை எழுத்து மூலமாகத் தந்து, தங்களது சமூக நீதிப் பறிப்பு உணர்வை மத்திய அரசு காட்டியுள்ளது.
அரசியலமைப்புச் சட்டப்படியும், உயர் நீதிமன்றத் தீர்ப்புப்படியும் ஒரு தீர்ப்பை அமலாக்க திட்டமிட்டே மறுப்பது, இல்லாத ஊருக்குப் போகாத பாதையைக் காட்டுவது என்பது மத்தியில் உள்ள பாஜக அரசின் சமூக நீதிக்கு எதிரான போக்கை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமையவில்லையா?
கணினி மூலம் பட்டியலைத் திருத்தி மாற்றி வெளியிட சில மணி நேரம் போதுமே!
மாணவர் தேர்வுப் பட்டியல் வெளியாகாத நிலையில், தமிழ்நாட்டுப் பட்டியலில், 50 விழுக்காடு அடிப்படை அல்லது 27 சதவிகித இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு செய்வது என்பது என்ன அவ்வளவு பெரிய சிக்கலான பிரச்சினையா? கணினி மூலம் பட்டியலைத் திருத்தி மாற்றி வெளியிட சில மணி நேரம் போதுமே!
10 சதவிகித இட ஒதுக்கீடு, பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினருக்கு என்ற ஒரு சமூக நீதி பறிப்புச் சட்டத்தினை, அதிவேகமாக நிறைவேற்றியது நாட்டு மக்களுக்கு மறந்துவிட்டது என்ற நினைப்பா மத்திய அரசுக்கு?
நாட்டின் மக்கள்தொகையில் 60 விழுக்காட்டுக்குமேல் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்குள்ள இட ஒதுக்கீட்டை முதல் கட்டமாக ஒழித்துவிட்டால், மூலச் செங்கல்லை கட்டிடத்திலிருந்து உருவிவிட்டால், மற்றவற்றை எஸ்.சி., எஸ்.டி., போன்ற இட ஒதுக்கீடுகளை அடுத்தகட்டமாக ஒழித்து, பொருளாதார அடிப்படை என்று கூறி, மீண்டும் ஏகபோக சாம்ராஜ்ஜியத்தை உருவாக்குவதுதானே இவர்களின் திட்டம். இது நம் மக்களுக்குப் புரியவேண்டும்.
மத்திய அரசுக்கு வாய்ப்பு இருக்கிறதா? என்று உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளபோது, மிகவும் அலட்சியம் காட்டி, வாய்மொழி மூலம் 'இயலாது' என்று கூறுவது எப்படிப்பட்டது? உச்ச நீதிமன்றம் வலியுறுத்திய பிறகு, எழுத்து மூலம் பிரமாணம் தாக்கல் என்றால், எத்தகைய மனப்போக்கு மத்திய அரசிடம் நிலவுகிறது?
சட்டப்படி தமிழ்நாட்டுக்குள்ள உரிமையை...
'மயிலே மயிலே இறகு போடு' என்று கேட்பதற்குப் பதிலாக, நியாயத்தின் அடிப்படை - சட்டப்படி தமிழ்நாட்டுக்குள்ள உரிமையை உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் திட்டவட்டமாக ஆணையிடுவதுதான் நீதியின் மேல் மக்களுக்கு உள்ள நம்பிக்கையைப் பெருக்குவதாக அமையும்.
கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் போகலாமா?
அரசியலமைப்புச் சட்டப்படி உள்ள உரிமையை நிலைநாட்டவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாட்டின் அத்தனை கட்சிகளும், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் இணைந்து நடத்திய வழக்குகளில் பெற்ற தீர்ப்பு மூலம், கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் போகலாமா?
அடுத்தகட்டம் பற்றி அனைவரும் இணைந்து போராட யோசிக்கும் நிலையை இதன் மூலம் மத்திய அரசு தமிழ்நாட்டின் மீது திணித்துள்ளது என்பதே பளிச்சென தெரியும் சுவர் எழுத்து ஆகும்".
இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment