Published : 16 Oct 2020 02:36 PM
Last Updated : 16 Oct 2020 02:36 PM
வாழ்விடம், இரையின்றிப் பாறு கழுகு இனங்கள் அழிவின் விளிம்பில் உள்ளதால், மனிதர்களுக்கும், இயற்கைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சுகாதாரப் பணியாளன்
தென் அமெரிக்காவில் மஞ்சள் காமாலை, ஆப்பிரிக்கா மற்றும் இந்தியப் பகுதிகளில் சிக்குன் குனியா, ஆப்ரிக்காவில் எபோலா, தெற்கு ஆசியாவில் நிபா வைரஸ், தென்கிழக்கு ஆசியாவில் சார்ஸ், உலக அளவில் ரேபிஸ், தென்கிழக்கு ஆசியாவில் மலேரியா போன்ற வைரஸ்கள் காடுகளைச் சார்ந்தே உருவாகியுள்ளன. அதேபோல 1947-ம் ஆண்டு உகாண்டாவில் உள்ள ஜிகா என்ற காட்டில் இருந்து 'ஜிகா' வைரஸ் உருவானது.
காடுகளில் உள்ள இறந்த விலங்குகளை மட்டுமே உண்டு மனிதர்களுக்கும், பிற விலங்குகளுக்கும் நோய் பரவாமல் காக்கும் பணியில் ஈடுபட்டு வருபவை பாறு கழுகு என்ற பிணந்தின்னிக் கழுகுகள். இவை காட்டின் 'சுகாதாரப் பணியாளர்' என்று இயற்கை ஆர்வலர்களால் அழைக்கப்படுகிறது.
இவை நோயால் பாதிக்கப்பட்டு இறந்த விலங்குகளை உண்டு, அதன் மூலம் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தி வருவது ஓர் இயற்கைச் சுழற்சியாகும். இப்படிக் காக்கும் பணியில் ஈடுபடும் கழுகுகள் தற்போது அழிவின் விழிம்பில் நிற்பது மனித குலத்திற்கும் இயற்கைக்கும் ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அழிவின் விளிம்பில் கழுகுகள்
இதகுறித்து இயற்கை ஆர்வலரும் அருளகம் சுற்றுச்சூழல் அமைப்பின் செயலருமான பாரதிதாசன் கூறும்போது, ''உலகமெங்கும் 23 பெருங்கழுகு இனங்கள் உள்ளன. இந்தியாவில் 9 வகைகளும் தமிழகத்தில் வெண்முதுகு பாறு, கருங்கழுத்து பாறு, செம்முகப் பாறு, மஞ்சள் முகப்பாறு ஆகிய 4 சிறப்பினங்களும் காணப்படுகின்றன. இவை 99 விழுக்காடு அழிந்துவிட்டன என்பது வேதனைக்குரிய தகவல். தமிழகத்தில் காணப்படும் 4 வகைகளுமே தற்போது அழியும் தருவாயில் உள்ளன.
மாடுகளுக்குச் செலுத்தும் வலி நிவாரண மருந்துகள், இறந்த விலங்குகளின் மீது தெளிக்கப்படும் விஷம் ஆகியவற்றால் ஏற்பட்ட இரைப் பற்றாக்குறை இதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. கழுகுகளின் அழிவு சுற்றுச்சூழலைச் சிதைத்து, இயற்கையை அழிவுப் பாதைக்குக் கொண்டுசெல்லும்'' என்றார்.
வாழ்விடமும், இரையும்
கழுகு ஆராய்ச்சியாளர் எஸ்.சந்திரசேகரன் கூறும்போது, ''அழிவின் விளிம்பில் உள்ள பாறு கழுகுகள் தென்னிந்தியாவிலேயே தமிழகத்தில், நீலகிரி மாவட்டத்தில்தான் அதிகம் உள்ளன. குறிப்பாக இவை மாயாறு பகுதியைத்தான் தங்களது வாழ்விடமாகத் தேர்ந்தெடுத்துள்ளன.
இவை கூடு கட்டும் மரங்கள் பட்டுப் போய் உள்ளதைக் கவனிக்க வேண்டும். வனத்திற்குள் சீமைக் கருவேலம் போன்ற அடர்ந்த மரங்களை அகற்ற வேண்டும். கழுகுகள் கூடு கட்டுவது, இனப்பெருக்கம் செய்வதன் விவரங்களைச் சேகரிக்க வேண்டும்.
பாறு கழுகுகளுக்கு இரை கிடைக்கும் வகையில் காட்டில் இறக்கும் விலங்குகளை உடற்கூறாய்வு செய்யக்கூடாது. இறந்த விலங்குகளுக்குத் தொற்று இல்லாதபட்சத்தில் அவற்றைப் புதைக்கவோ, எரிக்கவோ கூடாது. மழைக் காலம், வெயில் காலம், குளிர் காலம் போன்ற காலங்களில் பாறு கழுகுகளின் வாழ்வியல் முறை எப்படி உள்ளது? என்பதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். பாறு கழுகுகளின் வாழ்விடமான நீர் மத்தி மரங்களை அதிகரிக்க வனத்திற்குள் நீர் வழிப்பாதைகளை ஏற்படுத்தி பசுமையைக் காக்க வேண்டும்'' என்றார்.
மனிதர்களால் இடையூறு
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ''பாறு கழுகுகள் மாயாறு, சீகூர் வனப்பகுதிகளில் அதிகம் உள்ளன. ஆகவே, இந்தப் பகுதிக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுத்து பாறு கழுகுகளைப் பாதுகாக்கும் வகையில் கண்காணிப்புப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். அதேபோல இனப்பெருக்கத்தின் விவரங்களையும் சேகரித்து வருகிறோம்.
ஆண்டுதோறும் மாணவர்களை வைத்து இந்தக் கழுகின் முக்கியத்துவத்தைப் பொதுமக்களுக்கு உணர்த்தி வருகிறோம். மேலும் மனிதர்கள் கழுகுகளுக்கு இடையூறுகள் செய்வதையும் தடுத்து வருகிறோம். கழுகால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்'' என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT