Published : 16 Oct 2020 01:24 PM
Last Updated : 16 Oct 2020 01:24 PM
கோவிட் -19 வைரஸ் தொற்றுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டவுடன் அப்போலோ மருத்துவமனைகள் குழு, தினமும் 10 லட்சம் கோவிட் - 19 தடுப்பூசிகளை நிர்வகித்து வழங்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் இன்று (அக். 16) வெளியிட்ட அறிவிப்பு:
"கோவிட் - 19 வைரஸ் தொற்றுக்கு எதிரான அரசின் வீரம் நிறைந்த போரை ஆதரிக்கும் முயற்சியாக, தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டவுடன் அப்போலோ மருத்துவமனைகள் குழு, தினமும் 10 லட்சம் கோவிட் - 19 தடுப்பூசிகளை நிர்வகித்து வழங்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள தனது வலுவான இந்தியா வலைப்பின்னலை குளிர்சாதன வசதிகளுடன் இம்முயற்சி செயல்படுத்தப்படும். மேலும், தனது 70 மருத்துவமனைகள், 400-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள், 500 கார்ப்பரேட் சுகாதார மையங்கள், 4,000 மருந்தகங்களுடன் கூடிய ஆம்னி-சேனல் டிஜிட்டல் தளமான அப்போலோ 24*7 உடன் இணைந்து, கோவிட் - 19 தடுப்பூசி நிர்வாகத்தை திறம்பட உறுதி செய்யும் பணியை அப்போலோ மேற்கொண்டுள்ளது.
இந்தியாவில் சுமார் 30 சதவீதம் பேர் அப்போலோ மருந்தகங்களை சுமார் 30 நிமிடங்களுக்குள் அடையும் தொலைவில் உள்ளனர். இதன் மூலம், தடுப்பூசியை பாதுகாப்பான மற்றும் பரவலான முறையில் கொண்டு செல்வதற்கான உத்தரவாதத்தை அளிக்க முடியும். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அப்போலோ ஊழியர்கள் தேவையான பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், தடுப்பூசியை நிர்வகிக்க அப்போலோ மையங்களில் அவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
அனைத்துக் குடிமக்களுக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்வதில் தொழில்நுட்பம் ஒரு பெரிய பங்கை வகிக்கும். தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதுடன் அது எவ்வாறு நிர்வகிக்கப்படும் என்பதை உறுதி செய்வதிலும், தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கத்துடன் இணைந்து பணியாற்றத் தொடங்கிய முதல் சுகாதாரச் சேவை வழங்குநர்களில் அப்போலோ மருத்துவமனையும் ஒன்றாகும்.
கூடுதலாக, அப்போலோ 24*7 கோவிட் - 19 தடுப்பூசி தொடர்பான அனைத்துத் தகவல்களுக்கும் பிரத்யேக தளத்தை ஏற்படுத்தி தகவல்களை வழங்கும். பயனர்கள் தங்களை அப்போலோ 24*7 இல் பதிவுசெய்து, தடுப்பூசி மேம்பாடு பற்றிய சமீபத்திய புதிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியும்.
இந்தத் தளத்தில் பதிவு செய்யும் ஒவ்வொரு பயனருக்கும் தளத்தில் ஒரு தனிப்பட்ட எண் உருவாக்கப்படும். அதைக்கொண்டு என்.டி.ஹெச்.எம். மேற்கொண்டு வரும் அனைத்து முயற்சிகளும் உறுதி செய்யப்படும். இந்தத் தளம் மூலம் பயனர்கள் தடுப்பூசிகளைப் பற்றிய புதிய தகவல்களை உடனடியாகப் பெறுவார்கள்.
தடுப்பூசி தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காகப் பதிவு செய்ய அப்போலோ 24*7 செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம். அல்லது www.apollo247.com என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்''.
இவ்வாறு அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, அப்போலோ குழும மருத்துவமனைகளின் நிர்வாக துணைத் தலைவர் ஷோபனா காமினேனி கூறுகையில், "கொடிய தொற்று நோய்க்கான தடுப்பூசிக்கு முழு நாடும் காத்திருக்கையில், 130 கோடி இந்திய மக்களுக்கு குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு, பாதுகாப்பான மற்றும் முறையான அளவில் தடுப்பூசியை வழங்குவது ஒரு பெரிய சவாலான விஷயம் ஆகும்.
அப்போலோ மருத்துவமனைகள், தனது தடுப்பூசி குளிர் சங்கிலியை வலுப்படுத்துவதோடு, திறமையான மற்றும் விரைவான நிர்வாகத்திற்கான அனைத்து வசதிகளையும் செய்துள்ளது. மேலும் மிக உயர்ந்த பாதுகாப்பு தரங்களுடன், ஒரு நாளைக்கு 10 லட்சம் தடுப்பு மருந்து வரை விநியோகிக்கும் திறனை அப்போலோ பெற்றுள்ளது என்ற தகவலைப் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
நாட்டின் மிகப்பெரிய மற்றும் மிகவும் நம்பகமான, ஒருங்கிணைக்கப்பட்ட சுகாதார செயல்பாட்டு வலைப்பின்னல்களில் ஒன்றாக அப்போலோ திகழ்கிறது. எங்களைப் பொறுத்தவரை கோவிட் - 19-க்கு எதிரான நாட்டின் போராட்டத்தில், இந்தியாவைப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றுவது எங்களது கடமை மற்றும் பொறுப்பு என்று கருதி நாங்கள் பெரும் அர்ப்பணிப்புடன் முனைப்பாகச் செயல்பட்டு வருகிறோம்.
தற்போது வரை நாங்கள் 4 லட்சத்துக்கும் அதிகமானவர்களைப் பரிசோதித்துள்ளோம். மேலும், இரண்டரை லட்சம் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்துள்ளோம். இந்தப் பணியில் மேலும் முன்னோக்கிச் சென்று, அரசுகள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் சுகாதார நிறுவன வலைப்பின்னல்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம்.
இதன் மூலம் தடுப்பூசி கிடைத்தவுடன் அதை ஏராளமான மக்களுக்கு பாதுகாப்பாகவும், துரிதமாகவும், கிடைப்பது உறுதி செய்யப்படும். இந்திய தடுப்பூசி உற்பத்தியாளர்கள் உலகின் பெரும்பாலான தடுப்பூசி விநியோகத்தில் பங்களிப்பார்கள் என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். மேலும், சுகாதார சேவை வழங்குவதற்காக நாங்கள் பாதுகாப்பான மற்றும் விரிவான தடுப்பூசி விநியோகத்தை உறுதி செய்வோம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT