Published : 16 Oct 2020 12:19 PM
Last Updated : 16 Oct 2020 12:19 PM

சூரி அளித்த பண மோசடி புகார்; விஷ்ணு விஷாலின் தந்தை, தயாரிப்பாளரிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்க: மத்திய குற்றப்பிரிவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

நடிகர் சூரி: கோப்புப்படம்

சென்னை

நடிகர் சூரி அளித்த பண மோசடி புகாரில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய குற்றப்பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு சினிமா தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் தயாரிப்பில் 'வீர தீர சூரன்' என்கிற திரைப்படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாகவும் நடிகர் சூரி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் ஒப்பந்தமாகி படப்பிடிப்புகள் நடைபெற்றன.

அப்போது, நடிகர் சூரிக்கு 40 லட்சம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது. எனினும் பேசப்பட்டதன் அடிப்படையில் சம்பளம் தராததால் அதுகுறித்து சூரி கேட்டபோது சம்பளப் பணத்திற்குப் பதிலாக மேலும் சில கோடிகளை கொடுத்தால் நிலம் வாங்கித் தருவதாக படத் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனும் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரமேஷ் குடவாலாவும் கூறியதாகத் தெரிகிறது.

அதன்படி, சென்னையை அடுத்த சிறுசேரியில் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி, ரமேஷ் குடவாலா மற்றும் அன்புவேல் ராஜன் இருவரும் நடிகர் சூரியிடம் பல்வேறு தவணைகளாக ரூ.3.10 கோடி பெற்று நிலத்தை விற்பனை செய்தனர்.

இந்நிலையில், நிலம் வாங்கிய பிறகுதான் பல பிரச்சினைகள் இருப்பது நடிகர் சூரிக்குத் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, நிலத்தைத் திருப்பி வாங்கிக் கொள்வதாகவும் பணத்தைத் திருப்பித் தருதாகவும் ஒப்பந்தம் ஒன்றை சூரியிடம் ரமேஷ் குடவாலா பதிவு செய்ததாகத் தெரிகிறது.

ஆனால், சூரியிடம் வாங்கிய பணத்தில் 40 லட்ச ரூபாய் மட்டும் கொடுத்துள்ளார். மீதித் தொகையான ரூ.2.70 கோடியை சூரிக்குத் தராமல் ஏமாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடிகர் சூரி வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் ரமேஷ் குடவாலா மற்றும் அன்புவேல் ராஜன் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு கடந்த மாதம் உத்தரவிட்டது.

இது தொடர்பாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் சூரி கடந்த 1-ம் தேதி புகார் அளித்தார். ரமேஷ் குடவாலா, திரைப்படத் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் ஆகிய இருவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், ரமேஷ் குடவாலா முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்பதால், அவர் மீதான விசாரணையை மத்திய குற்றப்பிரிவில் இருந்து சிபிஐக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சூரி தொடர்ந்த வழக்கு இன்று (அக். 16) நீதிபதி ரவீந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ரமேஷ் குடவாலா முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்பதால் அவருக்கு எதிராக விசாரணை நடத்தும் அதிகாரிகள் அவருக்குச் சாதகமாகச் செயல்படுவதாக சூரி தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இருவர் மீதான விசாரணையை மத்திய குற்றப்பிரிவில் இருந்து சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து, இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை நவம்பர் இறுதி வாரத்தில் தாக்கல் செய்ய மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையைத் தள்ளி வைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x