Published : 15 Oct 2020 07:28 PM
Last Updated : 15 Oct 2020 07:28 PM

அமமுக பொருளாளர் வெற்றிவேல் காலமானார்

வெற்றிவேல்: கோப்புப்படம்

சென்னை

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

காங்கிரஸ் கட்சியில் தன் அரசியல் வாழ்வை தொடங்கிய வெற்றிவேல், பின்னர் அதிமுகவில் இணைந்தார். 2011 சட்டப்பேரவை தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு எம்எல்ஏவானார். பின்னர், 2014-ல் சிறை சென்று வந்த ஜெயலலிதா, மீண்டும் போட்டியிடுவதற்காக, ஆர்.கே.நகர் தொகுதியை விட்டுக்கொடுத்து, ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவரானார். இதையடுத்து, 2016 சட்டப்பேரவை தேர்தலில், பெரம்பூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அதிமுக இரண்டாக பிரிந்தபோது, சசிகலா அணியை வெற்றிவேல் ஆதரித்தார். பின்னர் தினகரனுக்கு ஆதரவாக 18 எம்எல்ஏக்கள் பிரிந்தபோது, அதில் வெற்றிவேலும் இடம்பெற்றிருந்தார். இதனால் எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து, அமமுகவுக்கு ஆதரவாக இருந்த வெற்றிவேலுக்கு அக்கட்சியின் பொருளாளர் பதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து சசிகலாவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார்.

இந்நிலையில், அவருக்குக் கடந்த வாரம் கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வெற்றிவேலின் உடல்நிலை கடந்த சில தினங்களாக மோசமானது. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று (அக். 15) மாலை காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x