Published : 15 Oct 2020 06:15 PM
Last Updated : 15 Oct 2020 06:15 PM

கரோனா முடிந்தும் திறக்கப்படாத மகால், காந்தி மியூசியம்: மதுரை வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை

கரோனா ஊரடங்கு தளர்வால் சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டாலும், மதுரையில் பார்ப்போரை கவரும் கட்டிடக்கலைக்கு புகழ்பெற்ற திருமலைநாயக்கர் மகாலும், மாணவர்கள் முதல் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வரை ஈர்க்கும் காந்திமியூசியம் இதுவரை திறக்கப்படவில்லை.

கரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் முதல் சுற்றுலா ஸ்தலங்கள், கோயில்கள் மூடப்பட்டன. அதனால், சார்ந்து இயங்கிய தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். தற்போது கரோனா ஒரளவு கட்டுக்குள் வந்தநிலையில் தமிழகத்தில் சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டன.

ராமேசுவரம், மீனாட்சியம்மன் கோயில், திருப்பரங்குன்றம், பழனி போன்ற ஆன்மீகத் தலங்களில் சுற்றுலாப்பயணிகள், பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

கொடைக்கானலிலும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படுகின்றனர்.

ஆனால், பார்ப்போரை வியக்க வைக்கும் புகழ் பெற்ற கட்டிடக்கலையை கொண்ட திருமலை நாயக்கர் மகால், காந்திமியூசியம் போன்றவை இதுவரை திறக்கப்படவில்லை.

கடந்த சில ஆண்டாக மகால் சுவர்கள் சேதமடைந்து அதன் வளாகம் முழுவதும் சுகாதாரமில்லாமல் சுற்றுலாப்பயணிகள் முகம் சுழிக்கும் வகையில் காணப்பட்டன. அங்கு செல்லும் காதலர்கள், அங்குள்ள பிரம்மாண்ட சுவர்களில் தங்கள் பெயர்களை கிறுக்கி வைத்தனர்.

மேலும், மேற்கூரைகள் சிதலமடைந்து மழைநீர் உள்ளே ஒழுகின. புறாக்கள் போடும் எச்சத்தால் தூர்நாற்றம் வீசின. அதனால், சமீப காலமாக இந்த இரு சுற்றுலா தலங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்திருந்தன.

தற்போது கரோனா ஊரடங்கில் மகாலில் சேதமடைந்த கட்டிடங்கள் பராமரிப்பு செய்யப்பட்டு பழமை மாறாமல் அதனை புதுப்பிக்கும் பணிகள் நடந்தன. தற்போது இப்பணிகள் நிறைவுற்றுள்ளன.

ஆனால், இந்த மையங்கள் திறக்கப்படாததால் ஏற்கெனவே சுற்றுலாப்பயணிகள் வராமல் வெறிச்சோடி காணப்பட்டிருந்த மகால் தற்போது திறக்காமல் வைப்பதால் மதுரை வரும் சுற்றுலாப்பயணிகள் மகால், காந்திமியூசியம் வராமல் செல்கின்றனர். அதனால், இந்த இரு சுற்றுலா தலங்களும் சுற்றுலா மைய அந்தஸ்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து காந்திமியூசியம் நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘நாடுமுழுவதும் அருங்காட்சியகங்கள், காந்தி மியூசியங்கள் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கிவிட்டன. ஆனால், தமிழக அரசு இன்னும் அனுமதி வழங்காததால் எங்களால் திறக்க முடியவில்லை. அரசு ஒப்பதல் வழங்கியதும் திறக்கப்படும், ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x