Last Updated : 15 Oct, 2020 05:56 PM

 

Published : 15 Oct 2020 05:56 PM
Last Updated : 15 Oct 2020 05:56 PM

புதுச்சேரி கடலில் தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி; காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்த காவலர்களுக்குக் குவியும் பாராட்டு

கடலில் இறங்கி தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை கையில் தூக்கிச் செல்லும் காவலர் பாண்டியன்

புதுச்சேரி

புதுச்சேரி கடலில் தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்த தலைமைக் காவலர், காவலரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

புதுச்சேரி சீகல்ஸ் உணவகத்தின் பின்புறம் இன்று (அக். 15) 63 வயதான மூதாட்டி ஒருவர், கடலில் இறங்கி தற்கொலைக்கு முயன்றார். இதனை அறிந்த ஒதியஞ்சாலை தலைமைக் காவலர் சுரேஷ்குமார், காவலர் பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த மூதாட்டியை காப்பாற்றினர். உடனே காவலர் பாண்டியன் அந்த மூதாட்டியை கையில் தூக்கிக்கொண்டு சென்று அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார்.

இதனிடையே கடலில் தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை காவலர் பாண்டியன் காப்பாற்றி கையில் தூக்கிச்செல்லும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது. இதனை கண்ட பொதுமக்கள் பலரும் காவலர் பாண்டியன், தலைமைக் காவலர் சுரேஷ்குமார் ஆகியோரை பாராட்டி வருகின்றனர்.

இது குறித்து காவலர் பாண்டியன் கூறும்போது, "மூதாட்டி ஒருவர் தற்கொலை செய்து கொள்ள கடலில் இறங்கியுள்ளதாக தகவல் வந்தது. உடனே நானும், தலைமைக் காவலர் சுரேஷ்குமாரும் அங்கு சென்றோம். அதற்குள் கடற்கரையில் இருந்த சித்தூரைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சிலர் கடலில் இறங்கி அந்த மூதாட்டியை காப்பாற்றி கரைக்குக் கொண்டு வந்தனர்.

இருப்பினும், அந்த மூதாட்டி மீண்டும் கடலில் இறங்கி தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து நானும், தலைமைக் காவலரும் அந்த மூதாட்டியை தடுத்து நிறுத்தி காப்பாற்றினோம். அப்போது மயங்கி விழுந்த அவர் சுயநினைவின்றி கிடந்தார். உடனே அவரை கையில் தூக்கிக்கொண்டு வேகமாக சென்று புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தோம்.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த மூதாட்டி புதுச்சேரி தருமாபுரி பகுதியை சேர்ந்தவர் என்பதும், வீட்டில் அவருடைய கணவருடன் ஏற்பட்ட தகராறால் மன உளைச்சல் ஏற்பட்டு கடலில் குதித்துத் தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது" எனத் தெரிவித்தார்.

மூதாட்டியை காப்பாற்றிய காவலர் பாண்டியன் மடுகரை பகுதியையும், தலைமைக் காவலர் சுரேஷ் மணவெளி பகுதியையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x