Published : 15 Oct 2020 05:05 PM
Last Updated : 15 Oct 2020 05:05 PM

சென்னையில் மரங்கள் நிறைந்த சோழிங்கநல்லூர் பழத்தோட்டத்தை தனியார் நிறுவனத்திற்கு தாரைவார்க்கக்கூடாது: அன்புமணி

அன்புமணி: கோப்புப்படம்

சென்னை

சென்னையில் மரங்கள் நிறைந்த சோழிங்கநல்லூர் பழத்தோட்டத்தை தனியார் நிறுவனத்திற்கு தாரைவார்க்கக்கூடாது என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, அன்புமணி இன்று (அக். 15) வெளியிட்ட அறிக்கை:

"சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சோழிங்கநல்லூரில் 7 ஏக்கரில் அமைந்துள்ள பழத்தோட்டம் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த குப்பை அகற்றும் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டிருப்பதாகவும், அங்குள்ள 250-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்படவிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் வருத்தம் அளிக்கின்றன. சென்னையின் சோலைவனத்தை அழிக்க நினைப்பது எந்த வகையிலும் நியாயம் அல்ல.

சென்னை மாநகராட்சியின் 7 மண்டலங்களில் குப்பை அள்ளுவதற்கான ஒப்பந்தம் 'அர்பசெர்' என்ற வெளிநாட்டு நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அந்நிறுவனத்திற்கான அலுவலகங்களை கட்டவும், வாகன நிறுத்துமிடங்களை அமைக்கவும் சென்னை சோழிங்கநல்லூரில் 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள 'சோழிங்கநல்லூர் பழத்தோட்டம்' எனும் இடத்தை வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்திருக்கிறது.

சோழிங்கநல்லூர் பழத்தோட்டத்தில் மாமரம், பனைமரம், வேப்பமரம், ஆலமரம், புங்கன்மரம், முந்திரி, நாவல் என 250-க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. அப்பகுதியில் உள்ள மக்களால் பல ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வரும் மரங்களை வெட்டி வீழ்த்தக்கூடாது; பசுமைப்பகுதியை கான்க்ரீட் கட்டிடங்களாக மாற்றிவிடக் கூடாது. வளர்ச்சிப் பணிகளுக்காகக் கூட மரங்களை வெட்டக்கூடாது என்று உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் வலியுறுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் குப்பை அள்ளும் நிறுவனத்திற்கு அலுவலகம் கட்டுவதற்காக பசுமை வனத்தை அழிக்க அனுமதிப்பை எந்த வகையிலும் ஏற்க முடியாது.

சென்னையில் குப்பை அள்ளும் நிறுவனத்திற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவதில் எந்த தவறும் இல்லை. இன்னும் கேட்டால் அது அத்தியாவசியமான ஒன்று தான். ஆனால், சோழிங்கநல்லூர் பழத்தோட்டம் அமைந்துள்ள பகுதிக்கு அருகிலேயே பழைய மாமல்லபுரம் சாலையில் அரசுக்கு சொந்தமாகவும், மாநகராட்சிக்கு சொந்தமாகவும் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இருக்கும் நிலையில் பழத்தோட்டத்தை தனியார் நிறுவனத்திற்கு வழங்குவது ஏன்? அங்குள்ள 250-க்கும் மேற்பட்ட மரங்களை வெட்ட முனைவது ஏன்? என்பது தான் பாமகவின் கேள்வி.

இந்தியாவில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, ஐதராபாத், பெங்களூரு ஆகிய 6 பெருநகரங்களில் பசுமைப்பரப்பு குறைந்த நகரங்களில் சென்னை தான் மும்பைக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. டெல்லியில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் 41 சதுர மீட்டர் பசுமைப்பரப்பு உள்ள நிலையில், சென்னையில் 13 சதுர மீட்டர் அளவுக்கு தான் பசுமைப்பரப்பு உள்ளது.

சென்னையின் ஒட்டுமொத்த பசுமைப்பரப்பு 14.99% ஆக உள்ள நிலையில், பெருங்குடி மண்டலத்தில் பசுமைப்பரப்பு வெறும் 5.31% மட்டும் தான். இந்த பகுதியில் தான் சோழிங்கநல்லூர் பழத்தோட்டம் உள்ளது. ஏற்கெனவே, மிகவும் குறைவான பசுமைப்பரப்பு கொண்ட இந்த பகுதியில் 7 ஏக்கர் அளவில் அமைந்துள்ள பசுமைப்பரப்பை அழித்தால், அது சென்னையின் பசுமை வளத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் இழைக்கப்படும் கேடு ஆகும்.

சென்னையின் பசுமைவனத்தை அதிகரிப்பதற்காக அடையாறு, வளசரவாக்கம், முகலிவாக்கம் ஆகிய 3 இடங்களில் ஜப்பானின் மியாவாக்கி முறையில் அடர்காடுகளை வளர்க்க சென்னை மாநகராட்சி மேற்கொள்ளும் முயற்சி பாராட்டத்தக்கது. ஒரு புறம் இதை செய்து கொண்டு இன்னொருபுறம் பசுமைப் பரப்பை அழித்தால், சென்னையின் பசுமைப்பரப்பை அதிகரிக்கும் முயற்சி சாண் ஏற முழம் சறுக்கிய கதையாகத் தான் இருக்கும். இதை தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் அனுமதிக்கக் கூடாது.

எனவே, சென்னை சோழிங்கநல்லூர் பழத்தோட்டத்தை தனியார் நிறுவனத்திற்கு தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும். அதற்கு பதிலாக வேறு நிலத்தை ஒதுக்கி விட்டு, சோழிங்கநல்லூர் பழத்தோட்டத்தை மியாவாக்கி முறையில் அடர்வனமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்".

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x