Published : 15 Oct 2020 04:52 PM
Last Updated : 15 Oct 2020 04:52 PM
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா நாளை மறுநாள் (அக்.17) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அக்டோபர் 26-ம் தேதி மகிஷாசூரசம்ஹாரம் நடைபெறுகிறது. நிகழ்ச்சிகள் அனைத்தும் யூடியூப் சேனல் மற்றும் உள்ளுர் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்படுகிறது.
மைசூர் தசரா விழாவுக்கு அடுத்தப்படியாக பிரச்சித்தி பெற்றது குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா ஆகும். இந்த ஆண்டு கரோனா ஊரடங்கு காரணமாக தசரா விழாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாளை மறுநாள் (அக்-17) சனிக்கிழமை காலை 10.45 மணிக்கு கொடிபட்டம் எழுந்தருளி தொடர்ந்து கோயில் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது.
பின்பு கொடி மரத்துக்கு பல்வேறு அபிஷேகங்களும், சிறப்பு தீபாராதனையும், தொடர்ந்து அன்னை முத்தாரம்மன்- சுவாமி ஞானமூர்த்திஸ்வரருக்கு சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது.
மாலை 6 மணிக்கு அபிஷேக ஆராதனையும், இரவு 8 மணிக்கு அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் எழுந்தருளலும் நடைபெறுகிறது. 1-ம் திருவிழா முழுவதும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
2-ம் திருவிழாவான அக்டோபர் 18-ம் தேதி முதல் 9-ம் திருவிழாவான அக்டோபர் 25-ம் தேதி வரை தினசரி காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
தினமும் இரவு 8 மணிக்கு அன்னை முத்தாரம்மன் விருச்சிகம், ரிசபம், மயில், காமதேனு, சிம்மம், பூஞ்சப்பரம், கமலம், அன்னம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் விஸ்வகர்மேஸ்வரர், பார்வதி, பாலசுப்பிரமணியர், நவநீதகிருஷ்ணர், மகிஷாசூரமத்தினி, ஆனந்த நடராஜர், கஜலெட்சுமி, கலைமகள் உள்ளிட்ட திருக்கோலங்களில் எழுந்தருளல் நடைபெறுகிறது.
10-ம் திருவிழாவான அக்டோபர் 26-ம் தேதி திங்கள்கிழமை காலை 10.15 மணிக்கு மகா அபிஷேகம், நள்ளிரவு 12 மணிக்கு அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி திருக்கோயிலுக்கு முன்பு மகிஷா சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. 11-ம் திருவிழாவான அக்டோபர் 27-ம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கு உற்சவ மூர்த்தி அம்மனுக்கு அபிஷேகம், காலை 6 மணிக்கு உற்சவ மூர்த்தி அம்மனுக்கு அபிஷேகம், மாலை 5 மணிக்கு உற்சவ மூர்த்தி அம்மன் திருக்கோயிலுக்கு வந்ததும் காப்பு களைதல் ஆகியவை நடைபெறுகின்றன.
1-ம் திருநாளான அக்டோபர் 17-ம் தேதி சனிக்கிழமை, 10-ம் திருநாளான அக்டோபர் 26-ம் தேதி திங்கள்கிழமை,11-ம் திருநாளான அக்டோபர் 27-ம் தேதி செவ்வாய்க்கிழமை ஆகிய மூன்று நாட்களும் எந்த பக்தர்களுக்கும் கோயிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது. 1-ம் திருவிழா முதல் 11-ம் திருவிழா வரை அனைத்து நிகழ்சிகளும் ஆன்லைன் மற்றும் உள்ளுர் டிவிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், எஸ்பி ஆகியோரது நேரடி மேற்பார்வையில் இந்து சமய அறநிலையத் துறையினர் செய்து வருகின்றனர்.
கடற்கரையில் குவியும் பக்தர்கள்:
கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் இந்த ஆண்டு அக்டோபர் 17 முதல் திருவிழா நாட்களில் தசரா குழுவினர், பக்தர்கள் உள்ளிட்ட யாரும் சிதம்பரேஸ்வரர் கடற்கரை பகுதிக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தசரா குழுவினர் காளி பூஜைக்காக புனித நீர் எடுக்க கடந்த 2 நாட்களாக கடற்கரையில் குவிந்து வருகின்றனர்.
கடற்கரையில் பூஜை செய்து தாரை, தப்பட்டையுடன் ஊர்வலமாக கோயில் வருகின்றனர். அங்கு பூஜை செய்துவிட்டு தங்கள் ஊர்களுக்கு செல்கின்றனர். இவ்வாறு கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்து பக்தர்கள் புனித நீர் எடுத்து செல்கின்றனர்.
திருக்காப்பு:
வழக்கமாக தசரா திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் முடிந்ததும் பக்தர்களுக்கு திருக்காப்பு அணிவிக்கப்படும். இந்த ஆண்டு கரோனா பரவலை தடுக்கும் வகையில் 1-ம் திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 2-ம் நாள் முதல் ஆன்லைன் மூலம் பதிவு செய்து வரும் பக்தர்கள் மற்றும் பதிவு செய்த தசரா குழுவினருக்கு திருக்காப்புகள் வழங்கப்படுகின்றன. இதற்காக திருக்காப்பு, விபூதி, குங்குமம் உள்ளிட்டவை பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு தன்னார்வலர்கள் மூலம் தயார்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT