Published : 15 Oct 2020 04:09 PM
Last Updated : 15 Oct 2020 04:09 PM
'ஸ்மார்ட் சிட்டி' திட்டப் பணிகள் விவேகமின்றி செயல்படுத்தப்படுவதால், மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் செல்லும் பாதைகள் அனைத்தும் மிக மோசமாக சேதமடைந்து கிடக்கின்றன. சுமார் ஓராண்டிற்கும் மேலாக இந்த நிலை தொடர்வதால், மீனாட்சியம்மன் கோயிலுக்குப் பக்தர்கள் செல்வது சிரமமான காரியமாக மாறிவிட்டது.
மீனாட்சியும் மதுரையும்
உலகப் புகழ்பெற்றதும், பழமையானதுமான மதுரை மீனாட்சியம்மன் கோயில் மதுரை நகர் மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புடையது. பிள்ளைகளின் காது குத்து தொடங்கி திருமண நிகழ்ச்சி, வளைகாப்பு நிகழ்ச்சிகள் வரையில் மீனாட்சியம்மன் கோயிலுக்குள்ளே நடைபெறுவது வழக்கம். அப்படியே கோயிலைச் சுற்றியுள்ள ஏதாவது உணவகத்தில் டோக்கன் வாங்கிக் கொடுத்து விருந்தையும் முடித்துவிடுவார்கள்.
7 ஆண்டுகளுக்கு முன்பு பாதுகாப்புக் காரணங்களுக்காக உள்ளூர் மக்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், இதுபோன்ற நிகழ்ச்சிகள் பெருமளவு குறைந்தன. அதன் பின்னர் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்வதற்குத் தடைவிதிக்கப்பட்டது. இதனால், வேலை நிமித்தமாக மீனாட்சியம்மன் கோயில் பகுதிகளுக்குச் சென்றுவிட்டு, அப்படியே போய் சாமி தரிசனம் செய்யும் வாய்ப்பும் பறிபோனது. பாதுகாப்பகத்தில் போனைக் கொடுத்துவிட்டு, கோயிலுக்குள் சென்றால் அலுவலக அழைப்புகளைத் தவறவிட்டு வேலையை இழக்க நேரிடும் என்பதால் கோயிலுக்குச் செல்வதையே தவிர்த்தார்கள் உள்ளூர் மக்கள். ஆனால், அமைச்சர்கள், அரசியல்வாதிகள், திரையுலகினர், நீதிபதிகள் மட்டும் செல்போனுடன் கோயிலுக்குச் செல்வதும், அதில் புகைப்படம் எடுத்துக்கொள்வதும் இன்னமும் தொடர்கிறது.
ஸ்மார்ட் சிட்டி சொதப்பல்
இந்தச் சூழலில் கடந்த 2016-ம் ஆண்டில் மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சேர்த்துக்கொள்ளப்பட்டது. சுற்றுலா வளர்ச்சி, நகர் மேம்பாடு என்று எந்தத் திட்டம் வந்தாலும் முதலில் மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி வேலைகளைச் செய்வது மதுரை மாநகராட்சியின் வழக்கம். கடந்த 15 ஆண்டுகளில் சுமார் 7 முறை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி திரும்பத் திரும்ப இந்த மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருகின்றன. நன்றாக இருந்த 'பேவர் பிளாக்' கற்கள் மட்டுமே சுமார் 3 முறை இவ்வாறு மாற்றப்பட்டன. எந்த ஆட்சியாக இருந்தாலும் சரி, பக்தர்களின் சிரமங்களைத் துளியும் பொருட்படுத்தாமல், அரசு நிதியைச் செலவழிப்பது, அதன் மூலம் காண்ட்ராக்டர்களும், அரசியல்வாதிகளும் லாபம் சம்பாதிப்பது என்ற நோக்கத்தோடே வேலைகள் நடந்து வந்தன. அந்த வரிசையில் இப்போது 'ஸ்மார்ட் சிட்டி' திட்டமும் சேர்ந்து கொண்டது.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி சித்திரை வீதிகளில் அழகாக இருந்த 'பேவர் பிளாக்' கற்களை மாற்றிவிட்டு, சிறிய கருங்கற்களைப் பதிக்கும் பணி முதலில் நடந்தது. அது முடிவதற்குள் கோயிலைச் சுற்றியுள்ள மாசி வீதிகளிலும், கோயிலுக்கு வருகிற அனைத்து சந்துகளிலும் 'பேவர் பிளாக்' பதிக்கிறோம் என்று தோண்டினார்கள் காண்ட்ராக்டர்கள். அது அப்படியே கிடக்கிற சூழலில், வெளிவீதிகளிலும் சாக்கடை, மழைநீர் மற்றும் மின்சார வயர்கள் செல்வதற்கென மூன்று கால்வாய்கள் கட்டுவதற்காகப் பாதிச் சாலையைத் தோண்டினார்கள்.
இன்னொரு பக்கம் மீனாட்சியம்மன் கோயில் அருகில் உள்ள பேருந்து நிலையமான பெரியார் நிலையத்தையும், இடித்துவிட்டு புதிதாகக் கட்ட ஆரம்பித்தார்கள். இதில் எந்த வேலையும் இதுவரையில் முழுமை பெறவில்லை. இதனால், மீனாட்சியம்மன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் பள்ளம், மழைநீர், புழுதி என்று பல தடைகளைத் தாண்டி, திருக்கோயில் நிர்வாகத்தின் விதிமுறைகளையும் தாண்டித்தான் சாமி தரிசனம் செய்ய வேண்டியிருக்கிறது.
தடைபட்ட தேரோட்டம்
இதுகுறித்து மதுரை பாண்டிய வேளாளர் கோயில் தெருவைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம் கூறுகையில், "மாசி வீதிகளை இவர்கள் தோண்டிப் போட்டு இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. இன்னமும் வேலைகள் முடியவில்லை. கடந்த ஏப்ரல் மாதத்தில், மாசி வீதிகள் இப்படிக் கிடக்கிறதே, எப்படித் தேரோட்டம் நடக்கப் போகிறதோ என்று அச்சப்பட்டோம். கரோனாவைக் காரணம் காட்டி தேரோட்டத்தையை ரத்து செய்து, தாங்கள் செய்த தவறுகளை மூடி மறைத்துவிட்டார்கள் அரசியல்வாதிகள். அழகர் கோயிலில்கூட விழாக்களை ரத்து செய்யாமல், பக்தர்களுக்காக நேரடி ஒளிபரப்பு செய்தனர். ஆனால், மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பல விழாக்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. விழாக்களின் நகர் அந்தப் பெருமையை இழந்துவிட்டது. இப்படியே போனால், மீனாட்சியம்மன் கோயில் என்பது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும், வசதி படைத்த வெளியூர் பக்தர்களுக்கும் மட்டும்தான் சொந்தம், உள்ளூர் மக்களுக்கும் கோயிலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றாகிவிடும்" என்றார்.
இது ஒரு புறமிருக்க 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தால், மதுரையில் அரசியல் ரீதியான மோதல்களும் வலுத்துள்ளன. "ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு" என்று சு.வெங்கடேசன் எம்.பி. தொடங்கி பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் எம்எல்ஏ வரையில் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். அவர்கள் குற்றம் சாட்டும் போதெல்லாம் மாநகராட்சி நிர்வாகம் பதில் தருகிறதோ இல்லையோ, உள்ளூர் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேரடியாக ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளைப் பார்வையிட்டு அங்கிருந்தபடியே, "பணிகள் சிறப்பாக நடக்கின்றன. எந்தப் புகாரும் இல்லை. அடுத்த ஆண்டே பணிகள் நிறைவடைந்துவிடும்" என்று பதில் பேட்டி கொடுப்பதும் வழக்கமாக இருக்கிறது.
விடிவு எப்போது?
கடந்த வாரம் பெருமழை காரணமாக மீனாட்சியம்மன் கோயில் பகுதியில் தண்ணீர் தேங்கி, பக்தர்களும் பொதுமக்களும் பள்ளங்களில் தவறி விழுந்து காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அந்தப் பகுதிகளைப் பார்வையிட்டு, வழக்கம் போல இத்திட்டத்தில் ஊழல் என்று குற்றம் சாட்டினார். அதைத் தொடர்ந்து செல்லூர் ராஜூவும் அதனைப் பார்வையிட்டு, "பணிகள் சிறப்பாக நடக்கின்றன" என்று கூறினார்.
உடனே, பழனிவேல் தியாகராஜன் எம்எல்ஏ, "செல்லூர் ராஜூவின் அரசியல் செயல்பாடுகள் பல அபத்தமாக இருந்தாலும் நான் அதனை விமர்சித்தது இல்லை. ஆனால், என்னுடைய தொகுதியான மதுரை மத்தியில் மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி நடக்கிற முறைகேடுகள் குறித்து நான் குற்றம் சாட்டினால், அந்தத் தொகுதிக்குச் சம்பந்தமே இல்லாத செல்லூர் ராஜூ ஏன் வந்து தேவையில்லாமல் பதில் தருகிறார்? அப்படியானால் தவறுகளுக்கு அவரும் உடந்தையா?" என்று அறிக்கை விட்டார்.
இப்படி அமைச்சர், எம்.பி., எம்எல்ஏக்கள் அனைவரும் மாறிமாறி குற்றம் சாட்டிக் கொள்கிறார்களே தவிர, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தை விரைவுபடுத்தவும், குறைந்தபட்சம் மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி மட்டுமாவது பணிகளை விரைந்து முடிக்கவும் முயற்சிப்பதில்லை என்று புழுங்குகிறார்கள் மதுரை மக்கள்.
மீனாட்சி அம்மன் கோயிலுக்கு விடிவு எப்போது?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT