Published : 15 Oct 2020 11:30 AM
Last Updated : 15 Oct 2020 11:30 AM
திமுக விவசாய அணியின் திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடை பெற்றது.
இதில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கலந்து கொண்டு பேசியது: விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ஏற்கக்கூடிய முதல் மாநிலமாக தமிழகம் உள்ளது. இங்குள்ள அதிமுக அரசுக்கு விவசாயிகள் நலனில் அக்கறை இல்லை.
வரக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையில் விவசாயிகள் நலன்சார்ந்த பல திட்டங்கள் இடம்பெறும். விவசாயம் மற்றும் விவசாயிகள் முன்னேற் றத்துக்கான புதுமையான யோசனைகள், திட்டங்கள் இருந்தால் அதுகுறித்து தெரியப் படுத்தலாம் என்றார்.
அதைத்தொடர்ந்து, விவசாயகளுக்கு எதிராக இருக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் உடனடியாக கொள்முதல் செய்து, நெல்லுக்குரிய பணத்தை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும். தமிழகத்திலுள்ள அனைத்து சர்க்கரை ஆலைகளும் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுப்பதுடன், கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும். கரும்பு உற்பத்தியை அதிகரிப்பதற்கான உதவிகளை விவசாயிகளுக்கு வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும்.
நாடு முழுவதும் 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை குத்தகை விவசாயிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். ஆறுகள், குளங்கள், வாய்க்கால்களை முறையாக தூர் வாரி விவசாயத்தை மேம்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள், உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் திமுக விவசாய அணி மாநிலச் செயலாளர்கள் ஏ.கே.எஸ் விஜயன், சின்னசாமி, முன்னாள் எம்எல்ஏ வேதரத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT