Published : 15 Oct 2020 11:22 AM
Last Updated : 15 Oct 2020 11:22 AM
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை நீக்க கோரி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து என்ற பெயரில் மத்திய அரசுக்கு துணைவேந்தர் சூரப்பா கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதம் அவரால் தன்னிச்சையாக அனுப்பப்பட்டுள்ளது எனவும், இதனால், அண்ணா பல்கலைக்கழகத்தில் 69% இடஒதுக்கீடு பாதிக்கப்படும் எனவும், மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் பல்கலைக்கழகம் சென்றுவிடும் எனவும், திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்தன.
இதனால், தன்னிச்சையாக கடிதம் எழுதிய சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, தமிழ்நாட்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் முன்பாக இன்று (அக். 15) திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி அறிவித்தார்.
அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில், கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் முன்பு, உதயநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும், அப்பல்கலைக்கழகம் மாநில கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து செயல்பட வேண்டும் எனவும், வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, "இந்த ஆட்சியின் அவலம் இது. அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற போட்டியில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவும் இருப்பார் என நினைக்கின்றேன். அவர் நிழல் முதல்வர் போன்று செயல்படுகிறார். தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கிறார். இதுகுறித்து அமைச்சர் தெரியாது என்கிறார். இது அதிமுக ஆட்சி போடும் இரட்டை வேடம்.
அண்ணா பெயரிலான கட்சியைத்தான் பாஜகவிடம் அடகு வைத்தார்கள் என்றால், இப்போது அண்ணா பல்கலைக்கழகத்தையும் அடகு வைக்கின்றனர். மாணவர்கள் குழப்பமான நிலையில் இருக்கின்றனர். அரியர் வைத்துள்ள மாணவர்களும் தேர்ச்சி என்பதில் குழப்பம் நிலவுகிறது. மாணவர்களை தமிழக அரசு குழப்ப நிலையிலேயே வைத்துள்ளது" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT