Published : 03 May 2014 09:39 AM
Last Updated : 03 May 2014 09:39 AM
தீவிரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்க சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் ஆயுதம் ஏந்திய கமாண்டோ படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று சென்னை ரயில்வே கோட்ட முதுநிலை பாதுகாப்பு ஆணையர் காந்தி கூறியுள்ளார்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை காலை 2 குண்டுகள் வெடித்ததில் ஒரு பெண் உயிரிழந்தார். 14 பேர் காயமடைந்தனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் பயணிகளின் உடமைகள் முழுவதுமாக பரிசோதிக்கப்படுகிறது. அதனால், பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்து கொள்ளமாட்டோம் என்று ரயில்வே பாதுகாப்பு படையினர் உறுதியாக உள்ளனர்.
சென்னை ரயில்வே கோட்டத்தில் செய்யப்பட்டுள்ள கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதுநிலை பாதுகாப்பு ஆணையர் காந்தி ‘தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது:-
சென்னை சென்ட்ரலில் குண்டுகள் வெடித்த சம்பவத் தைத் தொடர்ந்து சென்னை ரயில்வே கோட்டம் முழுவதும் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள் ளோம். சென்னை ரயில்வே கோட்டத்தின் எல்லை, சென்ட்ரலில் இருந்து ஜோலார்பேட்டை வரையிலும், சென்ட்ரலில் இருந்து கூடூர் வரையிலும், எழும்பூரில் இருந்து விழுப்புரம் வரையிலும், சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரையிலும், அரக்கோணத்தில் இருந்து ரேணிகுண்டா வரையிலும் பரந்து விரிந்துள்ளது.
சென்னை கோட்டத்தில், சென்ட்ரல், எழும்பூர் உள்பட 165 ரயில் நிலையங்கள் உள்ளன. ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 1750 போலீஸ்காரர்கள் ரயில் நிலையங்களையும் ரயில்களையும் கண்காணித்து வருகிறார்கள். அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு போட முடியாது. இந்தியன் ரயில்வேயில் எங்குமே, ‘அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு’ என்ற நடைமுறை இல்லை. சென்னை கோட்டத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையில் பற்றாக்குறை இல்லை. அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் போதிய பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை கோட்டத்தில், 30 எக்ஸ்பிரஸ் ரயில்களிலும், 96 புறநகர் மின்சார ரயில்களிலும், 6 பெண்கள் சிறப்பு ரயிலிலும் ரயில்வே பாதுகாப்புப் படையி னர் பாதுகாப்புப் பணியை மேற்கொள்கின்றனர். 16 புறநகர் ரயில்களில் உள்ள மகளிர் பெட்டிகளில் பெண் போலீசாரே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புறநகர் ரயில்களில் பெண்கள் பாதுகாப்புக்காக ‘சக்தி படை’ என்ற பெயரில் தனிப்படை சமீபத்தில் அமைக்கப்பட்டது.
சென்ட்ரல் வந்து போகும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் சோதனை நடத்துவதற்காக கூடுதல் போலீஸாரை நியமித்துள்ளோம். 24 மணி நேரமும் 3 ஷிப்டுகளாக அவர்கள் சோதனை மேற்கொள்வார்கள். பார்சல்களில் “சீல்” வைக்கப்பட்டிருக்கிறதா என்பதை கண்காணிக்கும் போலீஸார், இனி எஸ்.எல்.ஆர் (லக்கேஜ் வேன்) பெட்டிகளையும் 24 மணி நேரமும் முழுமையாக சோதனை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம்.
சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குள் நுழையும் வழி, வெளியேறும் வழிகளில் கூடுதல் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். ரயில்கள் போகும் வழியில் உள்ள ரயில் நிலையங்களில் ஏறுவோரின் கைப்பைகளை சோதனையிடவும், ரயில் பெட்டிகளில் உள்ள பயணிகளின் உடைமைகளையும் கட்டாயம் சோதனையிட வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது. அதனால் கேட்பாரற்றுக் கிடக்கும் பைகளை கண்டறிய முடியும்.
தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க சென்னை கோட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் ஆயுதம் ஏந்திய கமாண்டோ படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இவ்வாறு காந்தி கூறினார்.
ரிப்பன் மாளிகைக்கு கூடுதல் பாதுகாப்பு
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து சென்னையில் உள்ள முக்கிய இடங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையிலும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ரிப்பன் மாளிகையில் பொது மக்கள் நுழைவதற்கு இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. இருப்பினும் பாதுகாப்பு கருதி ஒரு நுழைவாயிலில் மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப் படுகிறார்கள். மற்றொரு வாயிலில் வாகனங்கள் மட்டுமே உள்ளே செல்ல முடியும். வாயிலில் உள்ள காவலர்கள் ரிப்பன் மாளிகைக்கு வரும் அனைவரையும் சோதித்துப் பார்த்தே உள்ளே அனுமதிக்கின்றனர்.
அதே போன்று, ரிப்பன் மாளிகையின் தரைதளத்திலும் பாதுகாவலர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர். மாநகராட்சி ஊழியர்கள் தவிர மற்றவர்கள் அங்குள்ள நுழைவு பதிவேட்டில் பதிந்த பிறகே, உள்ளே செல்ல அனுமதிக்கப் படுகின்றனர். மாளிகைக்குள் வரும் வாகனங்களும் தீவிர சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT