Published : 14 Oct 2020 08:17 PM
Last Updated : 14 Oct 2020 08:17 PM
குன்னத்தூர் ஊராட்சித் தலைவர் கிருஷ்ணன் உட்பட இருவர் கொலையில் துப்பு கிடைத்து, கொலையாளிகளை நெருங்கிவிட்டோம் என, காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் தெரிவித்தார்.
எஸ்.பி. சுஜித்குமார் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:
குன்னத்தூர் ஊராட்சித் தலைவர் கிருஷ்ணன் உட்பட இருவர் கொலையில் துப்பு கிடைத்து, கொலையாளிகளை நெருங்கிவிட்டோம்
இவ்வாண்டு சாராயம், கஞ்சா, மணல் திருட்டு, பாலியல் போன்ற குற்றச்செயல்கள் புரிந்த 20 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல் நிலையங்களுக்கு புகார்தாரர்களை அழைக்காமல் வீடுகளுக்கே சென்று விசாரித்து தீர்வு காணப்படும் திட்டம் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. இதுவரை 300-க்கும் மேற்பட்ட மனுக்களுக்குத் தீர்வு கண்டுள்ளோம். உட்கோட்டம் வாரியாக சிறப்பு முகாம் ஏற்பாடு செய்து மனுக்களை விசாரிக்கப்படுகின்றன.
மாவட்டத்தில் 2019 தொடக்கம் முதல் 2019 அக்.,13 வரை 56 கொலைகளும், 2020 தொடக்கம் முதல் அக்.,13 வரை 54 கொலைகளும் நடந்துள்ளன. இதில் பெரும்பாலானவை குடும்பத் தகராறு, முன்பகை, சொத்துப் பிரச்சினை, காதல் விவகாரம், திருமணத்தை மீறிய உறவு தொடர்பாக நடந்திருப்பது தெரிகிறது. இரு கொலை வழக்கில் இவ்வாண்டு ஆயுள் தண்டனை பெற்று தந்துள்ளோம்.
உசிலம்பட்டி உள்ளிட்ட தேவையான இடங்களில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படும். பொதுமக்களின் வசதிக்கென மேலூர் நகர், தாலுகா காவல் நிலையம் எனப் பிரிக்க, அரசுக்கு கடிதம் எழுதப்படும்.
அணைக்கரைப்பட்டி மாணவர் தற்கொலையில் இரு எஸ்ஐக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்களுக்கு இதுவே பெரிய தண்டனை. பதவி போன்ற சலுகை பாதிக்கும். அவர்களுக்கு எதிராக அணைக்கரைப்பட்டி குறிப்பிட்ட மக்கள் ஆதார் கார்டுகளை திருப்பி ஒப்படைப்பதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்.
எழுமலை அருகில் சூலபுரத்தில் விவசாயி கொலை செய்யப்பட்டது உறுதியாகிறது. அந்த சம்பவம் விசாரணையில் இருப்பதால் அந்த சம்பவம் சாதி ரீதியான மோதல் என, இப்போதைக்குக் கூற முடியாது. தொடர் கொலைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரை மாவட்ட காவல்துறையில் இதுவரை 105 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்தார். 101 பேர் குணமடைந்து பணிக்கு திரும்பினர். வாட்ஸ் ஆப், ஆன்லைன் புகார்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT