Published : 14 Oct 2020 07:04 PM
Last Updated : 14 Oct 2020 07:04 PM

அண்ணாமலை, குஷ்பு வரிசையில் பாஜகவில் இணைகிறேனா?- நடிகர் கருணாஸ் சிறப்புப் பேட்டி

குஷ்புவைத் தொடர்ந்து தமிழகத்தின் தென்கோடியில் இருக்கும் திமுக, காங்கிரஸ் கட்சிகளின் எம்எல்ஏக்கள் இருவர், நடிகர்கள் விஷால், கருணாஸ் உள்ளிட்டோரும் கமலாலயத்தின் கதவுகளைத் தட்டவிருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் தடதடக்கும் நிலையில், “இறுதி மூச்சு வரை எனது சமுதாய மக்களின் நலனுக்காக முக்குலத்தோர் புலிப்படை இயக்கத்தை நடத்துவேன், அதைக் கலைத்துவிட்டு இன்னொரு இயக்கத்தில் சேர்வது என்ற பேச்சுக்கே இடமில்லை” எனச் சூளுரைக்கிறார் கருணாஸ் எம்எல்ஏ.

இதுகுறித்து 'இந்து தமிழ்'இணையதளத்துக்கு அவர் அளித்த பேட்டியில் இருந்து...

குஷ்புவைத் தொடர்ந்து பாஜகவுக்குப் படையெடுக்கும் நட்சத்திரப் பட்டாளத்தில் உங்களது பெயரும் உரக்கக் கேட்கிறதே... நெருப்பு இல்லாமலா புகையும்?

நடிகர்கள் குஷ்பு, வடிவேலு மாதிரிக் கூட்டம் சேர்ப்பதற்காகத் தேடப்படும் சினிமா நடிகன் இல்லை நான். முக்குலத்தோர் சமுதாய மக்களின் அரணாக முக்குலத்தோர் புலிப்படை என்ற இயக்கத்தை நடத்திக் கொண்டிருப்பவன். எனது கடந்த கால செயல்பாடுகளைப் பார்த்துவிட்டுத்தான் பிற முக்குலத்தோர் கட்சிகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு எனக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தார் ஜெயலலிதா. குஷ்பு, வடிவேலு போல நான் தனிப்பட்ட நடிகனாக மட்டும் இருந்திருந்தால் நமக்கும் ஏதோ ஒன்று கிடைக்கும் என நினைத்து எளிதாக இன்னொரு கட்சிக்குப் போய்விட முடியும். ஆனால், நான் அப்படிப் போக முடியாது. அப்படி இன்னொரு கட்சியில் இணைவதற்கான அவசியமோ நிர்ப்பந்தமோ எனக்குத் துளியும் கிடையாது. எனது இறுதி மூச்சுவரை எனது இயக்கத்தை நடத்தி எனது சமுதாய மக்களுக்கான நலன்களை வென்றெடுப்பேன்.

அப்படியானால் ‘பாஜகவில் இணைகிறார் கருணாஸ்’ என்ற செய்தி எங்கிருந்து கிளம்பியது?

கடந்த ஒரு வருட காலமாகவே பாஜக தலைவர்கள் பலரும் என்னைத் தொடர்புகொண்டு பேசி வருகிறார்கள். அதிலும் முக்கியமாகத் தென் மாநிலப் பொறுப்பில் இருப்பவர்கள் என்னுடன் அடிக்கடி பேசினார்கள். ஒரு அரசியல் கட்சியை வளர்க்க நினைப்பவர்கள் எங்களைப் போன்ற பத்து பேரைத் தங்கள் இயக்கத்தில் இணைக்க நினைப்பது இயல்பான ஒன்றுதான். அதுதானே அவர்களது வேலை.

அப்படி என்னை டெல்லிக்கு அழைத்தவர்களிடம் “ஐயா... எனக்கென்று மூன்று முக்கியக் கோரிக்கைகள் இருக்கின்றன. மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் தேவர் பெயரைச் சூட்ட வேண்டும் என்பது முக்குலத்து மக்களின் நீண்ட நாளைய கோரிக்கை. அதுபோல, நந்தனத்தில் தேவர் சிலையைத் திறந்துவைத்த ஜெயலலிதா, கள்ளர், மறவர், அகமுடையார் சாதிகளை ஒருங்கிணைத்து தேவர் சமூகம் என அறிவித்தார். இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டும் அது நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கிறது.

அந்த ஆணை நடைமுறைக்கு வந்திருந்தால் முக்குலத்தோர் இளைஞர்களுக்குக் கல்வி - வேலைவாய்ப்பில் உள் இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும். இதை நடைமுறைப்படுத்த மாநில அரசுக்கு மத்திய அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். அடுத்ததாக, வெள்ளையர்களை எதிர்த்து 16 ஆண்டு காலம் ஆயுதம் ஏந்திப் போராடிய மருது சகோதரர்களைக் கவுரவிக்கும் விதமாக நாடாளுமன்ற வளாகத்தில் அவர்களின் திருவுருவச் சிலை நிறுவப்பட வேண்டும்.

இந்த மூன்று கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டிய இடத்தில் மத்திய அரசு இருக்கிறது. எனவே, இது தொடர்பான கோரிக்கை மனுவை அளிக்க உள்துறை அமைச்சர் உள்ளிட்ட பாஜக தலைவர்களை நான் எந்த நேரத்திலும் சந்திக்கத் தயாராய் இருக்கிறேன்” என்று தெளிவாகச் சொன்னேன். ‘தாராளமாய் வந்து உங்கள் கோரிக்கைகளை மனுவாகக் கொடுங்கள்’ என்றார்கள். ஆனால், அப்படிச் சொன்னவர்கள்தான், நான் பாஜகவில் இணையப் போவதாகத் திரித்து செய்தி பரப்பிவிட்டார்கள்.

உங்களை டெல்லிக்கு அழைத்த அந்தத் தலைவர் யார்?

பாஜகவின் தென் மாநிலப் பொறுப்பில் இருப்பவர்தான். அவரின் பெயரை நான் சொல்வது நாகரிகமாக இருக்காது. இருந்தாலும் இப்படிச் செய்திகள் வெளியானதுமே சம்பந்தப்பட்ட மனிதரை போனில் அழைத்து, “உங்கள் தரம் இவ்வளவு தானா” என்று சற்றுக் கோபமாகவே பேசிவிட்டேன். அதற்கு, “இந்த செய்திக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றார்கள். அவர்களால் அப்படித்தானே சொல்ல முடியும்.

ஆளும் அதிமுக அரசு மீது மக்கள் மத்தியில் பெரிதாக அதிருப்தி ஏதும் இல்லை என்று சொல்லி இருக்கிறீர்களே..?

உண்மைதான்... ஐந்து ஆண்டுகள் ஆட்சி நடந்தாலே ஆளும்கட்சி மீது மக்களுக்கு அலுப்பும் சலிப்பும் வந்து விடும். ஆனால், தமிழகத்தில் கிட்டத்தட்டப் பத்து ஆண்டுகளாகத் தொடரும் அதிமுக அரசு மீது மக்களுக்குப் பெரிதாக அதிருப்தி ஒன்றும் இல்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து.

அப்படியானால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் இந்த ஆட்சியே தொடரும் என்கிறீர்களா?

அதை நிச்சயமாகச் சொல்ல முடியாது. ஏனென்றால் இப்போதுள்ள அரசியல் களம் அப்படி இருக்கிறது. அதிகாரத்தைப் பிடிக்க நினைப்பவர்கள் என்ன விலை கொடுத்தாவது அதை அடைய நினைக்கிறார்கள். “தேசத்துக்காகக் கொடுப்பவன் தேசியவாதி... தேசத்திலிருந்து எடுப்பவன் அரசியல்வாதி” என்று தேவர் அன்றே சொன்னார். அதை நாம் இப்போது கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

லஞ்ச லாவண்யத்தை எழுதப்படாத சட்டமாகவே ஆக்கிவிட்டார்கள். இதில் யாரும் சளைத்தவர்கள் இல்லை. இவர்களுக்கு அவர்கள் தேவலாம் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறதே தவிர யாரையும் தேசத்தை நேசிக்கும் தேசியவாதிகளாக நினைத்துப் பொறுப்பை ஒப்படைக்க முடியவில்லை. இதனால் சட்டப்பேரவை உறுப்பினர்களாகிய எங்களாலேயே நியாயப்படி வேலை செய்ய முடியவில்லை. எனவே, எதிர்கால அரசியல் எப்படிப் போகும் என்று இப்போதைக்கு எனக்குச் சொல்லத் தெரியவில்லை.

இபிஎஸ் அரசை ஆதரிக்கும் நீங்கள் சசிகலாவுக்கு ஆதரவாகவும் கருத்துகளைத் தெறிக்க விடுகிறீர்களே?

முக்குலத்தோர் சமூகத்தைச் சார்ந்த எம்எல்ஏ, எம்.பி.க்கள் அவர்களின் கட்சிக்குக் கட்டுப்பட்டுத்தான் பேசுவார்கள். தனது சமுதாய மக்களுக்கு ஒன்று என்றால்கூட அவர்களால் வெளிப்படையாக ஆதரவுக் குரல் எழுப்ப முடியாது. ஆனால், நான் அப்படி அல்ல. எனது சமுதாய மக்கள் எந்த இடத்தில் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காகக் குரல் கொடுப்பேன். திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளிலும் இருக்கும் மக்கள் பிரதிநிதிகளின் நியாயமான கோரிக்கைகளுக்காக இந்த கருணாஸ் தயங்காமல் குரல் கொடுப்பான்.

அந்த வகையில், முக்குலத்தோர் சமுதாயத்தின் முக்கிய அடையாளமாக இருக்கும் சின்னம்மாவுக்கு முக்குலத்தோர் புலிப்படை என்றைக்கும் ஆதரவாக இருக்கும். எனக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்து என்னையும் ஒரு எம்எல்ஏவாக்கியது ஜெயலலிதாவாக இருந்தாலும் என்னை முன்னிலைப்படுத்தியதில் சின்னம்மாவின் பங்கும் இருக்கிறது.

சசிகலா விடுதலையாகி வெளியில் வந்தால் அதிமுக அவரது கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும் என்று சொல்லப்படுவது பற்றி..?

கிரிக்கெட் விளையாட்டில் நல்ல விளையாட்டு வீரர்கள் மட்டும் இருந்தால் போதாது. அவர்களை வழிநடத்தத் திறமையான கேப்டனும், ஆடுவதற்கு ஏற்ற களமும் அமைய வேண்டும். எனவே, வரக்கூடிய காலங்களில் களம்தான் சின்னம்மாவுக்கான இடத்தைத் தீர்மானிக்கும். அதேசமயம், “சசிகலா அதிமுகவின் ரத்த அணுக்களில் கலந்திருக்கிறார்” என்று சுப்பிரமணியன் சுவாமி சொன்னதை மறுக்க முடியாது.

ஜெயலலிதா இருக்கும் காலத்திலேயே முக்கிய முடிவுகளை எடுக்கும் இடத்தில் சின்னம்மா இருந்தார் என்பது இன்றைக்கு இருக்கும் பலருக்கும் தெரியும். சின்னம்மா அதிமுக பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டதைப் புகழ்ந்து பேசியவர்களை எல்லாம் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் இப்போது மாற்றிப் பேச வைத்திருக்கிறது. நாளைக்கே சின்னம்மா விடுதலையாகி வெளியில் வந்து கட்சி சம்பந்தமாக ஒரு முடிவை எடுத்தால் அதற்குப் பெரிய அளவில் வரவேற்பு இருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

முக்குலத்தோர் புலிப்படையின் எதிர்காலத் திட்டம்தான் என்ன?

சராசரி அரசியல்வாதிகளைப் போல் இல்லாமல் மற்ற சமுதாயங்களையும் அரவணைத்து முக்குலத்துச் சமூகத்துக்கான நலன்களை சாதித்துக் கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களது ஒரே லட்சியம். சுருக்கமாகச் சொல்வதானால், மூச்சு நின்ற பிறகும் வாழவேண்டும். ஒரு மனிதன் இறந்த பிறகும் பேசப்பட வேண்டும் என்றால் அதற்கான சாதனையைச் செய்திருக்க வேண்டும். அப்படி ஏதாவது சாதிக்க, சிதறுண்டு கிடக்கும் எனது முக்குலத்துச் சொந்தங்களை எல்லாம் ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் பணிகளை முன்னெடுக்க இருக்கிறோம்.

இவ்வாறு கருணாஸ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x