Published : 14 Oct 2020 06:24 PM
Last Updated : 14 Oct 2020 06:24 PM
வசந்தகுமார் மறைவால் காலியாக உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கு வரும் பிப்ரவரிக்குள் தேர்தல் நடத்தப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இதற்கிடையில் குமரி தொகுதி பாஜகவில் யாருக்கு ஒதுக்கப்படும் என அக்கட்சி மட்டத்தில் காரசார விவாதம் நடந்து வருகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வசந்தகுமார் வெற்றி பெற்றார். 2,59,933 வாக்குகள் வித்தியாசத்தில் இந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி, வெற்றி வாகை சூடியது. இரண்டாவது இடத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் வந்தார். இந்நிலையில் இடைத் தேர்தலில் மீண்டும் சீட் பெற்றுவிட பொன்.ராதாகிருஷ்ணன் கடும் முயற்சிகளைச் செய்துவருகிறார். இதனிடையே புதுவரவாகப் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை ஆகியோர் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவிக்கும் தொண்டர்களும் இருக்கிறார்கள்.
முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனும் சில வாரங்களுக்கு முன்பு, கட்சித் தலைமை வாய்ப்பு கொடுத்தால் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுவேன் எனப் பேட்டி கொடுத்திருந்தார். இருந்தும் குமரி தொகுதியில் சீட் ரேஸில் வழக்கம்போல் பொன்.ராதாகிருஷ்ணனே முன்வரிசையில் உள்ளார். கடந்த 8 முறையாக இதே தொகுதியில் போட்டியிட்டு மக்கள் மத்தியில் நன்கு பரிச்சயம் ஆகியிருக்கும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு இப்போது 69 வயது ஆகிறது. 70 வயதைக் கடந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பதில்லை என்பது பாஜகவின் நிலைப்பாடு. கேரளத்தின் ஓ.ராஜகோபால், கர்நாடகாவின் எடியூரப்பா உள்ளிட்ட வெகு சிலருக்கே இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
அதனால் இந்த இடைத்தேர்தலில் சீட் வாங்கியே தீரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன். அவருக்கு மீண்டும் வாய்ப்புக் கிடைக்க ஐம்பது சதவிகிதம் வாய்ப்பு இருப்பதாகத் தொகுதிக்குள் பேச்சு நிலவுகிறது. அதேநேரம், பாஜக மேலிடத்தில் இருந்து ஒரு குழுவினர் கன்னியாகுமரி தொகுதிக்குள் ரகசிய சர்வே எடுத்துள்ளனர். அந்த சர்வேயில் பாஜக தொண்டர்கள் சிலர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். மத்திய அமைச்சராக இருந்த போது, கட்சிக்காரர்களுக்கு பெரிதாக எதுவும் செய்யவில்லை எனவும் புலம்பியிருக்கிறார்கள். இருந்தும் பொன்.ராதாகிருஷ்ணனை விட்டால் அதே சமூகத்தில் வலுவான வேட்பாளர் யாரும் இல்லாததால் பொன்னாருக்கே வழக்கம்போல் வாய்ப்பு கிடைக்கும் என்று ஆரூடம் சொல்கிறார்கள் பாஜகவின் மூத்த நிர்வாகிகள்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக சார்பில், மிசோரம் மாநில கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கும்மனம் ராஜசேகரன் எதிர்கொண்டார். அதேபோல் கன்னியாகுமரி இடைத்தேர்தலில் தமிழிசை செளந்தரராஜன் ஆளுநர் பதவியை விட்டுவிட்டு வந்து எதிர்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை வைப்பவர்களும் இருக்கிறார்கள்.
குமரி நாடாளுமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை மத அடிப்படையிலேயே வாக்குகள் விழுவது தொடர்கதையாக இருக்கிறது. குமரி நாடாளுமன்றத் தொகுதியில் பெரும்பான்மையாக நாடார் சமூகம் உள்ளது. அந்த சமூகத்திற்கு வெளியே இருந்து வேட்பாளரை நிறுத்தும்பட்சத்தில் அதுவும் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாகிவிடும் எனவும் பரிசீலனை செய்கிறது பாஜக. இதையெல்லாம் கூட்டி, கழித்துத்தான் பொன்னாருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் சொல்கின்றனர்.
பாஜக சார்பில் யாருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்னும் இறுதித் தகவல் இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT