Last Updated : 14 Oct, 2020 05:39 PM

1  

Published : 14 Oct 2020 05:39 PM
Last Updated : 14 Oct 2020 05:39 PM

ஆட்சியில் பங்கு கேட்குமா விடுதலை சிறுத்தைகள்?- எம்.பி. ரவிக்குமார் சிறப்புப் பேட்டி

ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்கிற தங்கள் முழக்கத்தை 2021 தேர்தலிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துமா? என்ற கேள்விக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான ரவிக்குமார் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக 'இந்து தமிழ் திசை' இணையதளத்துக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி...

தேவேந்திரகுல வேளாளர் மற்றும் அருந்ததியர் அல்லாத, பட்டியலின சாதிகள் அனைவரும் ஆதிதிராவிடராய் ஒன்றிணைவோம் என்ற உங்களது கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் தொடர்ந்து குரல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அந்தக் கருத்தில் இப்போதும் உறுதியாக இருக்கிறீர்களா?

ஆமாம். அதன் பிறகுகூட, ஆதிதிராவிடர் அரசாணையின் நூற்றாண்டையொட்டி இணையவெளிக் கூட்டம் நடத்தினோம். இந்தக் கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக வருகிற 17-ம் தேதி மதுரையில் ஒரு கூட்டம் நடைபெறுகிறது. அதிலும், 1 கோடி மக்கள் தொகை கொண்ட ஆதிதிராவிடர்களுக்கு அரசியலில் உரிய பிரதிநிதித்துவம் கோரித் தீர்மானம் நிறைவேற்ற இருக்கிறார்கள்.

"மதப் பெரும்பான்மைவாதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்யும் பாஜகவை எதிர்ப்பவர்கள் சாதிப் பெரும்பான்மையை முன்னிறுத்த முயல்வது முரண்பாடு அல்லவா?" என்று 'தலித் முரசு' ஆசிரியர் புனித பாண்டியன் உள்ளிட்டோர் கண்டித்திருக்கிறார்கள். அதனை ஏற்கிறீர்களா?

நாங்கள் என்ன சொல்கிறோம் என்று புரியாமல் அவர்கள் இப்படிப் பேசுகிறார்களா அல்லது வேண்டுமென்றே பேசுகிறார்களா என்று தெரியவில்லை. சாதி ஒழிப்பை முன்மொழிவதற்கும், சாதிப் பெருமிதத்தைத் தூக்கிப் பிடிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. ஆதிதிராவிடர் என்பது சாதி அடையாளம் அல்ல. சாதி கடந்த அடையாளம். சனாதான எதிர்ப்பின் அடையாளம் என்று நாங்கள் சொல்கிறோம். ஆனால், அதைச் சாதிய அடையாளம் என்று அவர்கள் சித்தரிக்க முயல்கிறார்கள். பட்டியல் பிரிவில் இருந்துகொண்டே, யார் சாதியப் பெருமிதம் பேசுகிறார்களோ, யார் சனாதனத்துக்குச் சேவை செய்கிறார்களோ அவர்களிடம் பேச வேண்டியதை எல்லாம் இவர்கள், சாதி ஒழிப்புக்காக வேலை செய்யும் எங்களைப் பார்த்துப் பேசுகிறார்கள்.

அவர்களைப் பற்றிப் பேசுவதைத் தவிர்ப்பதன் மூலம் அவர்களைப் பாதுகாக்கிறார்கள். வெளிப்படையாகவே சொல்கிறேன், தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைப் பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று சொல்கிறவர்களிடம் இவர்கள் ஏன் பேசுவதில்லை? டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோரின் சனாதன அரசியலை இவர்களும் மறைமுகமாக ஆதரிக்கிறார்களோ என்றுதான் தோன்றுகிறது.

மற்றவர்களின் எதிர்ப்பை விடுங்கள். உங்களது கோரிக்கையை உங்கள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆதரிக்கிறாரா?

இதுவரையில் அவர் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.

அதிமுக வழிகாட்டுதல் குழுவில் ஆதிதிராவிடருக்கு இடமில்லை என்று விமர்சிக்கிறீர்கள். ஆனால் கடலூர் மாவட்டத்தில், பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவரைத் தரையில் அமர வைத்த திமுகவைச் சேர்ந்த பஞ்சாயத்து துணைத் தலைவரை நீங்கள் விமர்சிக்கவில்லையே? பாஜககூட அதை விமர்சித்திருக்கிறது...

அந்தச் சம்பவத்தைக் கண்டித்து நானும் சரி, எங்கள் தலைவரும் சரி, பேசியிருக்கிறோம். ஊராட்சி அமைப்புகளில் கட்சியே கிடையாது. அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சுயேச்சையாகத்தான் போட்டியிட வேண்டும் என்பது விதி. எனவே, ஏன் திமுகவைத் திட்டவில்லை என்று கேட்பது உள்நோக்கம் கொண்ட கேள்வி. இந்தச் சம்பவத்தை விமர்சித்த பாஜக, ஏன் தூத்துக்குடி மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை ஆதிக்க சாதிக்காரரின் காலில் விழ வைத்த சம்பவத்தைக் கண்டிக்கவில்லை?

தெற்கு திட்டை ஊராட்சித் தலைவரைப் போய்ப் பார்த்தவர்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவரை ஏன் போய்ப் பார்க்கவில்லை? முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருக்கின்றதே, அதனை ஏன் இவர்கள் கண்டிப்பதில்லை?

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் குறைவாகப் பேசினாலும் அதிகமாகச் செயல்படுகிறார் என்கிறார்கள். சமீபத்தில் குஷ்புவை பாஜகவுக்கு அழைத்து வந்ததும் அவர்தான். பட்டியலினத்தைச் சேர்ந்த அவரது தலைமையை, ஆளுமையை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஊடகங்கள் பாஜகவுக்கு ஆதரவாகச் செய்திகளை வெளியிடுவதால் அவர் சிறப்பாகச் செயல்படுவது போலத் தோன்றுகிறது. திரைப்பட நட்சத்திரங்கள் பாஜகவில் சேர்த்துக் கொள்ளப்படுவது ஒன்றும் புதிது கிடையாது. அங்கே பெரிய நட்சத்திரப் பட்டியலே இருக்கிறது. அந்த வரிசையில் இன்னொருவர் சேர்ந்துள்ளார் என்பதற்காக, முருகன் சிறப்பாக செயல்படுகிறார் என்று சொல்வது சரியல்ல. அவர் தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராகிவிட்டார் என்பதாலேயே, பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிகாரம் கிடைத்துவிட்டது என்றும் சொல்ல முடியாது. அந்தச் சமூகத்திற்கு அதனால் கூடுதல் பாதுகாப்பு கிடைத்துள்ளது என்றும் சொல்ல முடியவில்லை. தலித்துகள் மீதான வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.

உலகத்தையே கொந்தளிக்க வைத்த ஹாத்ரஸ் தலித் பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை உச்ச நீதிமன்றமே கண்டித்துவிட்டது. இவர் கண்டித்தாரா? பாஜக தலித் மக்களுக்கு ஆதரவாக இருக்கிற கட்சி என்று போலியாக காட்டிக் கொள்வதற்காகத்தான் அவரைத் தலைவராக்கி இருக்கிறார்களே தவிர, வேறு ஒன்றும் இல்லை. தேசிய பட்டியல் சமூக ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்த இவரை, பாஜக தலைவராக்கியவர்கள், காலியாக உள்ள அந்த இடத்தை ஏன் இன்னும் நிரப்பவில்லை?

தேசிய ஆணையத்தின் கமிஷனர், இயக்குநர் பதவிகளும் காலியாக இருக்கின்றன. தமிழகத்திலும் இன்னும் எஸ்சி ஆணையம் அமைக்கப்படவில்லையே ஏன்? இதுகுறித்து மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சருக்கு நான் கடிதம் எழுதியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவர்களது கூட்டணியில் இருக்கிற அதிமுகவின் ஆட்சிதானே தமிழகத்தில் இருக்கிறது? தலித்துகள் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால் அவர்களிடம் சொல்லி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே?

2015-ம் ஆண்டு, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்தை முன்வைத்து மாநாடு நடத்தியது விடுதலை சிறுத்தைகள் கட்சி. அந்த கோரிக்கையை ஆதரித்த இரு கம்யூனிஸ்ட்டுகள், மதிமுக போன்ற கட்சிகளும் இப்போது திமுக அணியில்தான் இருக்கின்றன. 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் 'தமிழகத்தில் கூட்டணி ஆட்சி' முழக்கத்தை விசிக எழுப்புமா?

அன்றைய சூழல் வேறு, இன்றைய களம் வேறு. நாங்கள் இப்போது திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில் இருக்கிறோம். சனாதன சக்திகளை முறியடிப்போம் என்றுதான் எங்கள் தலைவர் தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கிறார். எனவே, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி முழக்கம் இந்தத் தேர்தலுக்கான முழக்கம் கிடையாது. இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையில் சனாதன சக்திகளைத் தலையெடுக்க விடாமல் தடுப்பதுதான் எங்கள் முதன்மையான நோக்கம்.

இவ்வாறு ரவிக்குமார் எம்.பி. தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x