Last Updated : 18 Sep, 2015 12:01 PM

 

Published : 18 Sep 2015 12:01 PM
Last Updated : 18 Sep 2015 12:01 PM

ஓசூர் சிறப்பு நிலை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த கோரிக்கை

ஓசூர் சிறப்பு நிலை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கர்நாடகா மாநில எல்லையில் அமைந்துள்ளது. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் பெரிய தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இதுமட்டுமின்றி காய்கறி, மலர் சாகுபடியிலும் முன்னிலை வகிக்கிறது. ஓசூர் சுற்று வட்டார பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் ரோஜாக்கள் வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் ஓசூரில் மிகப்பெரிய கால்நடை பண்ணையும் உள்ளது.

இதுபோல பல்வேறு சிறப்பு களைக் கொண்ட ஓசூர் சிறப்பு நிலை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த கடந்த திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. நகராட்சியையொட்டி உள்ள புறநகர் ஊராட்சிகளை இணைத்து வார்டுகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. ஆனால் தரம் உயர்த்தப்படவில்லை.

ஓசூர் நகராட்சியை தரம் உயர்த்தினால் மொத்த பரப்பளவு 180 சதுர கிலோ மீட்டராக அதிகரிக்கும். சிறப்பு மருத்துவமனை, சாலை வசதி, சுகாதாரம் மற்றும் நகரின் பல்வேறு அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்கிற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஓசூர் - பாகலூர் சாலையில் ரூ.10 கோடி மதிப்பில் நகராட்சிக்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஓசூர் சிறு, குறு தொழிற்சாலைகள் சங்க தலைவர் ஞானசேகரன் "தி இந்து"விடம் கூறியதாவது:

ஓசூரில் உள்ள தொழிற்சாலைகள் மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு விற்பனை வரி, சுங்க வரி மூலம் ஆண்டிற்கு ரூ.2,300 கோடி வருமானம் கிடைக்கிறது. இதேபோல் அனைத்து தரப்பு மக்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இயந்திர உதரிபாகங்கள் தயாரிப்பு, ரோஜா மலர் உற்பத்தி, மாங்கூழ், கிரானைட்ஸ் மற்றும் காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

உலக வங்கியும், மத்திய அரசும் ஓசூர் நகரை மாதிரி நகரம், அமுரத் திட்டத்திற்கு தேர்ந்தெடுத்துள்ளது. பல்வேறு சாதகமான அம்சங்கள் கொண்ட ஓசூர் சிறப்பு நிலை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால் பல்வேறு கட்டமைப்புகள் வசதிகள், உற்பத்தி அதிகரிக்கும். இதன் மூலம் அரசுக்கு வருவாய் பெருகும், என்றார்.

நகர்மன்றத் தலைவர் பாலகிருஷ்ணாரெட்டி கூறும்போது, தமிழகத்தில் வளர்ச்சி அடைந்து வரும் நகரமாக ஓசூர் உள்ளது. அரசு பல்வேறு திட்டங்களை இங்கு நிறைவேற்றி உள்ளது. கடந்த 9-ம் தேதி நடந்த நகராட்சி சிறப்பு கூட்டத்தில் அச்செட்டிப்பள்ளி, பேகேபள்ளி, சென்னசந்திரம், கொத்தகொண்டப்பள்ளி, நல்லூர், ஒன்னல்வாடி, தொரப்பள்ளி, பேரண்டப்பள்ளி ஆகிய 8 ஊராட்சிகளை ஓசூர் சிறப்பு நிலை நகராட்சியுடன் இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது, என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x