Last Updated : 14 Oct, 2020 02:42 PM

 

Published : 14 Oct 2020 02:42 PM
Last Updated : 14 Oct 2020 02:42 PM

ஆளுநர் மாளிகை முறைகேடு தொடர்பாக புகார் கூறியும் கிரண்பேடி நடவடிக்கை எடுக்காதது ஏன்? - புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கேள்வி

அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் - துணைநிலை ஆளுநர் கிரண்பேடி: கோப்புப்படம்

புதுச்சேரி

ஆளுநர் மாளிகையில் முறைகேடுகள் மலிந்து இடைத்தரகர்கள் ஆதிக்கம் உள்ளது என ஏற்கெனவே புகார் கூறியும் இதுவரை கிரண்பேடி நடவடிக்கையே எடுக்கவில்லை என, புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் புகார் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் செய்தியாளர்களிடம் இன்று (அக். 14) கூறியதாவது:

"மீனவர்களுக்கு ஓய்வூதிய தொகையை உயர்த்த கடந்த ஜனவரியில் ஆளுநர் மாளிகைக்கு கோப்பு அனுப்பினேன். மார்ச் மாதம் வரை காலதாமதம் செய்தார். இதனால் உயர்த்தப்பட்ட தொகையை சரண்டர் செய்ய வேண்டியிருந்தது. ஏப்ரல் மாதம் ஓய்வூதியம் உயர்த்தி வழங்க அனுமதியளித்தார். ஒருமாதம் மட்டும் கொடுத்தோம். மே மாதம் மீண்டும் வழங்க முடியவில்லை. ஏனெனில், கரோனாவால் வரி வருவாயை சுட்டிக்காட்டி நிதி தரமுடியாது என கூறிவிட்டனர். ஓய்வூதியம் பெறும் மீனவ முதியோரின் எண்ணிக்கை 7,855 மட்டும்தான். இதற்கு கூடுதலாக ரூ.2 கோடி மட்டும்தான் தேவை. நான் கடந்த சில மாதங்களாக சம்பளம், இதர சலுகைத்தொகை எதையும் வாங்கவில்லை. ஆட்சிக்காலம் முடியும் வரை வாங்குவதாக இல்லை. இதன்மூலம் சுமார் ரூ.80 லட்சம் கிடைக்கும். இதனை அரசு நிதி தேவைக்கு பயன்படுத்தலாம்.

கடந்த 7 மாதமாக மாளிகையை விட்டே கிரண்பேடி வெளியே வரவில்லை. இதற்கு முன்பு இருந்த ஆளுநர்கள் அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.3 கோடி மட்டும்தான் செலவிடுவார்கள். ஆளுநராக கிரண்பேடி வந்தபிறகு செலவு ரூ.7 கோடியாக உயர்ந்துள்ளது. மக்கள் பணத்தை ஆளுநர் மாளிகை வீணடிக்கிறது. கரோனா காலத்தில் தான் 30 சதவீத செலவை குறைத்துள்ளதாக மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். ரூ.7 கோடியில் 30 சதவீதமாக ரூ.2 கோடியே 10 லட்சம் ஆகிறது. இதனை மீனவர்கள் நலத்திட்டத்திற்கு வழங்கலாம்,

அதேபோல், மீனவர்களுக்கு நலவாரியம் அமைக்க அனுமதி கேட்டு கோப்பு அனுப்பினோம். புதுவை, காரைக்காலில் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க கோரினோம். புதுவை, காரைக்காலில் மீன் அதிகளவில் கிடைக்கிறது. இதனை பதனிட்டு வெளிமாநிலங்களுக்கு அனுப்பலாம். ஆனால், இதற்கு அனுமதி வழங்காமல் புதுவையில் பால் தட்டுப்பாடு உள்ள நிலையில், பால் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கவும், தேன் தயாரிப்பு ஆலைக்கும் அனுமதி வழங்குகிறேன்.

ஆளுநர் மாளிகையில் இடைத்தரகர்கள் ஆதிக்கமும், முறைகேடும் மலிந்து உள்ளது என ஏற்கெனவே புகார் கூறியுள்ளேன். இதற்கு சரியான பதிலும் தெரிவிக்கவில்லை. நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. புகார் பொய்யாக இருந்தால் என்மீது நடவடிக்கை எடுக்கலாம்.

புதுச்சேரியில் துப்புரவு பணி மேற்கொள்ளும் நிறுவனத்தோடு ஆளுநர் கிரண்பேடிக்குத் தொடர்பு உள்ளது. இந்த நிறுவனத்திற்கு நிதியை மட்டும் ஆளுநர் கிரண்பேடி நிறுத்துவது கிடையாது. தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக முதல்வர், அமைச்சரை மீறி செயல்படுவது ஏன் என தெரிவிக்க வேண்டும். அவரது செயல்பாடுகள் தொடர்பாக கேள்வி எழுப்பி ஆறு பக்க கடிதத்தை ஆளுநருக்கு இன்று அனுப்பியுள்ளேன்"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x