Published : 14 Oct 2020 02:01 PM
Last Updated : 14 Oct 2020 02:01 PM
வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெறவேண்டிய அம்சங்கள், மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆலோசனை அளிக்கலாம் என திமுக தலைமை தெரிவித்துள்ளது.
தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் 2021-மே மாதத்தில் முடிவடைய உள்ளது. அதற்கு முன்னரே மார்ச், ஏப்ரலில் தேர்தல் திருவிழா தொடங்கிவிடும். தேர்தல் நேரத்தில் போட்டியிடும் கட்சிகள் தங்கள் வாக்குறுதிகளாக வாக்காளர்களிடம் ஆட்சிக்கு வந்தால் இந்த வகையிலான திட்டங்கள், சலுகைகள், மானியங்கள் அளிப்போம் என வாக்குறுதி அளிப்பார்கள்.
கட்சியின் கொள்கையை விளக்கும் விதத்தில் அறிக்கை இருக்கும். இதில் தேர்தலில் ஒவ்வொரு கட்சியின் தேர்தல் அறிக்கைக்குள் பெரிய போட்டியே இருக்கும். ஐந்தாண்டுகளில் மக்களின் முன் உள்ள பிரச்சினைகள் பெரிதும் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும். அந்த வகையில் தேர்தல் அறிக்கையில் நிபுணர்கள், ஆர்வலர்கள், கல்வியாளர்கள், பொதுப்பிரிவினர் ஆலோசனையை ஏற்று அறிக்கை தயாரிப்பதில் புதிய முறையை கடந்த சில தேர்தல்களில் திமுக அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு அறிக்கை தயாரிக்க குழு அமைக்கப்பட்டு அதன் முதல் கூட்டமும் இன்று நடந்தது. அந்தக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி கட்சி நிர்வாகிகள், கட்சியின் தொண்டர்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெறவேண்டிய தங்கள் மாவட்ட பிரச்சினை, பொதுவான அம்சங்கள் குறித்து ஆலோசனை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான மின்னஞ்சலும் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:
2021ல் நடைபெற உள்ள சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலையொட்டி திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினரிடம் தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய பொது அம்சங்கள் குறித்தும் - தங்கள் மாவட்டத்தில் பிரச்சினைகள் குறித்தும் இடம்பெற வேண்டிய சாரம்சங்களை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ தெரிவிக்க விரும்பும் கட்சி நிர்வாகிகள் - கட்சித் தொண்டர்கள் தலைமைக்கு அனுப்பி வைக்கலாம்.
அத்துடன், மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க விரும்புவோர் “ manifesto2021@dmk.in ” என்ற மின்னஞ்சல் (email id) முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT