Published : 14 Oct 2020 01:04 PM
Last Updated : 14 Oct 2020 01:04 PM
அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கக்கூடாது என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (அக். 14) வெளியிட்ட அறிக்கை:
"பொறியியல், தொழில்நுட்பம், கட்டிடக்கலை மற்றும் பல்துறை அறிவியல் கல்வியில் அண்ணா பல்கலைக்கழகம், இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்குகிறது. 1978-ல் தமிழக அரசு தொடங்கிய இப்பல்கலைக்கழகம், ஒருமை பல்கலைக்கழகமாக கிண்டி உள்ளிட்ட நான்கு வளாகங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 552 கல்லூரிகள் இயங்கிவருகின்றன. மேலும், இந்த பல்கலைக்கழகம் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பலரையும் தலைசிறைந்த விஞ்ஞானிகளாக உருவாக வழியமைத்துள்ளது.
இப்பல்கலைகழகத்திற்கு சூரப்பா துணைவேந்தராக நியமிக்கப்பட்டதிலிருந்து, தொடர்ந்து சர்ச்சைகள் எழுகின்றன. தமிழக அரசு, அண்ணா பல்கலைக்கழகத்தைப் பிரித்து, உயர் சிறப்பு கல்வி நிறுவனம் என்றும், இணைப்புக் கல்லூரிகளை உள்ளடக்கி அண்ணா பல்கலைக்கழகம் என்றும் இரண்டாக பிரித்திட சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றியிருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தினை இரண்டாகப் பிரிப்பது வளர்ச்சிக்கு உதவாது. இந்த முடிவினை ஆசிரியர்களும், மாணவர்களும், கல்வியாளர்களும் மிகக்கடுமையாக எதிர்க்கிறார்கள்.
மத்திய அரசால், அண்ணா பல்கலைக்கழகத்தின் நான்கு வளாகங்கள், உயர் சிறப்பு கல்வி நிறுவனம் என அறிவிக்கப்பட்டால் ரூ.1,000 கோடி நிதி கிடைக்கும். ஆனால், மத்திய அரசின் நெறிமுறைகளையே பின்பற்ற வேண்டும். மேலும், இதற்கு மாநில அரசும் இணையாக நிதிப் பங்களிப்புச் செலுத்த வேண்டும். மத்திய அரசின் நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் பின்பற்றினால், மாநிலத்தில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டை அமலாக்க முடியாது.
உயர் சிறப்புக் கல்வி நிறுவனம் என்று குறிப்பிடுவதே கல்வி வணிகமய, தாராளமய நடவடிக்கையின் வெளிப்பாடாகும். உயர் சிறப்புக் கல்வி நிறுவனத்திற்கான மத்திய அரசின் நெறிமுறைகள் வெளிநாட்டு ஆசிரியர்களை நேரடியாக நியமனம் செய்ய வழிவகுக்கிறது, இதனால் இந்தியாவில் உள்ள சிறந்த ஆசிரியர்களின் வாய்ப்புகளும் பறிபோகும்.
ஏற்கெனவே நீட் தேர்வின் மூலமாக தமிழக மாணவர்களின் மருத்துக் கனவுகளை பாழாக்கிய மத்திய அரசு, தற்போது பொறியியல் கல்வியிலும் கைவைக்கிறது. மத்திய அரசின் நெறிமுறைகள் அமலானால் அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்விக்கட்டணம் உயர்த்தப்பட்டு, ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்த மாணவர்களுடைய பொறியியல் கல்வி கேள்விக்குறியாகும்.
பொதுப்பட்டியலில் உள்ள கல்வியில், புதிய கல்விக்கொள்கை மூலம் மாநில அரசின் உரிமைகளை பறிக்கின்ற அடிப்படையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. மாநில உரிமைகளை பாதுகாப்பதற்கு பதிலாக, அதிமுக அரசு மாநில உரிமைகளை காவு கொடுக்கிறது
இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா மாநில அரசை கலந்தாலோசிக்காமல் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார். மாநில அரசின் நிதி தேவையில்லை என்றும் கல்விக்கட்டணம் உள்ளிட்டு பல்வேறு வகைகளில் நிதி திரட்டிக்கொள்ளலாம் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மாநில அரசைக் கலந்தாலாசிக்காமல் மத்திய அரசுக்குக் கடிதம் எழுத, துணைவேந்தருக்கு எந்த அதிகாரமும் இல்லை. அவ்வாறு செயல்பட்ட துணைவேந்தர் சூரப்பாவை உடனடியாக பதவியிலிருந்து நீக்கிட வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பது என்ற முடிவினை மாநில அரசு கைவிடுவதுடன். உயர் சிறப்புக் கல்வி நிறுவனம் என்ற மத்திய அரசின் முடிவையும், மத்திய அரசின் நெறிமுறைகளையும் ஏற்கக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது".
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT