Published : 14 Oct 2020 12:10 PM
Last Updated : 14 Oct 2020 12:10 PM
வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் திமுகவுக்கான தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க திமுக மூத்த தலைவர்கள் அடங்கிய 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதன் முதல் கூட்டம் இன்று கூடியது. திமுக தலைவர் ஸ்டாலின் அதற்கு தலைமை வகிக்கிறார்.
தேர்தல் நேரத்தில் மக்கள் அபிமானத்தைப் பெற்று ஆட்சியைப் பிடிக்க பெரிதும் பயன்படுவது தேர்தல் அறிக்கையே. அதை வைத்துதான் தேர்தல் பிரச்சாரமே நடக்கும். தேர்தல் அறிக்கை தயாரிப்பதில் ஆட்சிக்கு வரத்துடிக்கும் கட்சிக்கும், ஆட்சியில் தொடரத் துடிக்கும் கட்சிக்கும் பெரிய போட்டி இருக்கும்.
அக்கட்சிகள் தேர்தல் அறிக்கை தயாரிப்பில் மிகவும் கவனம் செலுத்தும். அந்த வகையில் திமுக முந்திக்கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்க குழுவை அமைத்தது. மூத்தத் தலைவர்கள் 8 பேர் அடங்கிய தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை நியமித்து கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.
1. டி.ஆர்.பாலு, (பொருளாளர்), 2. சுப்புலட்சுமி ஜெகதீசன் (துணைப் பொதுச்செயலாளர்), 3. ஆ.ராசா (துணைப் பொதுச்செயலாளர்), 4. அந்தியூர் ப.செல்வராஜ் (துணைப் பொதுச்செயலாளர்), 5. கனிமொழி, எம்.பி.,(திமுக மக்களவைக் குழு துணைத் தலைவர்), 6. திருச்சி சிவா, எம்.பி. (கொள்கைப் பரப்புச் செயலாளர்), 7. டிகேஎஸ் இளங்கோவன், எம்.பி. (செய்தித் தொடர்புச் செயலாளர்), 8.பேராசிரியர் அ.ராமசாமி. ஆகிய 8 பேர் தேர்தல் தயாரிக்கும் குழுவில் உள்ளனர்.
அதன் முதல் ஆலோசனைக்கூட்டம் கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்க உள்ளதாக ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.பாலு அறிவித்தார். அதன்படி இன்று காலை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. தேர்தல் அறிக்கைக்குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் இந்தக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பொருள் குறித்தும், பிரதான விஷயம் குறித்தும், தேர்தல் அறிக்கை தயாரிக்க வெளியிலிருந்து நிபுணர்கள், ஆர்வலர்கள், கல்வியாளர்கள், பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்டோர் ஆலோசனையைப் பெறுவது, பயன்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
தமிழகத்தில் உள்ள மாவட்ட அளவிலான, மாநில அளவிலான உள்ள மக்கள் பிரச்சினைகள், மாநிலத்துக்கும், தேசிய அளவிலும் எழும் பிரச்சினைகள் உள்ளிட்டவை குறித்து தேர்தல் அறிக்கையில் கொண்டுவரும் அம்சங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட உள்ளது.
இதேப்போன்று தேர்தல் அறிக்கைக்கு வெளியிலிருந்து நிபுணர்கள், ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்களை பயன்படுத்துவது குறித்தும், கூடுதலாக உறுப்பினர்கள் இணைப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் எனத்தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT