Published : 14 Oct 2020 10:21 AM
Last Updated : 14 Oct 2020 10:21 AM

மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை: 2-வது நாளாக குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு

குற்றாலம் பிரதான அருவியில் நேற்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.

தென்காசி/ திருநெல்வேலி/நாகர்கோவில்

தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக அடவிநயினார் அணையில் 52 மி.மீ. மழை பதிவானது. கருப்பாநதி அணையில் 30 மி.மீ., குண்டாறு அணையில் 21 மி.மீ., ராமநதி அணையில் 20 மி.மீ., தென்காசியில் 11.20 மி.மீ., ஆய்க்குடியில் 7.40 மி.மீ., செங்கோட்டையில் 7 மி.மீ., கடனாநதி அணையில் 3 மி.மீ. மழை பதிவானது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடனாநதி அணை நீர்மட்டம் 73.70 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 62.87 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 67.26 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 36.10 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 129.75 அடியாகவும் இருந்தது.

மலைப் பகுதியில் பெய்த தொடர் மழையால் குற்றாலம் அருவிகளில் 2-வது நாளாக நேற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரோனா தொற்று பரவல் காரண மாக அருவிகளில் குளிக்க கடந்த மார்ச் மாதம் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் 45 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

மாவட்டத்தில் பிற இடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): சேர்வலாறு- 33, மணிமுத்தாறு- 5.2, கொடுமுடியாறு- 30, அம்பாசமுத்திரம்- 2, சேரன் மகாதேவி- 1, ராதாபுரம்- 7, களக்காடு- 1.2.

பாபநாசம் அணைக்கு விநாடி க்கு 1669 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 88.20 அடியாக இருந்த நிலையில், நேற்று ஓரடி உயர்ந்து 89.15 அடியாக இருந்தது. அணையிலிருந்து 604 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 66.90 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 41 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 25 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 109 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 50 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

குமரியில் கொட்டித் தீர்த்த கனமழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த கனமழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகள் மற்றும் பெரும்பாலான குளங்கள் நிரம்பியுள்ளன. 10 நாட்களாக மழை நின்றிருந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக சாரல் பெய்தது. வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக நேற்று முன்தினம் இரவில் தொடங்கிய கனமழை நேற்று பகலிலும் தொடர்ந்தது. சூறைக்காற்றுடன் பெய்த மழையால் மரக்கிளைகள் சாய்ந்து அடிக்கடி மின்தடை ஏற்பட்டது.

நேற்று காலை 8 மணி வரை அதிகபட்சமாக சுருளோட்டில் 48 மிமீ மழை பெய்திருந்தது. கன்னிமாரில் 39 மிமீ, பேச்சிப்பாறையில் 19, பெருஞ்சாணியில் 25, நாகர்கோவிலில் 24, பூதப்பாண்டியில் 25, பாலமோரில் 29, குருந்தன்கோட்டில் 16, ஆனைக்கிடங்கில் 22, புத்தன்அணையில் 24, அடையாமடையில் 14, கோழிப்போர்விளையில் 28, முள்ளங்கினாவிளையில் 31, திற்பரப்பில் 30 மிமீ மழை பதிவாகியிருந்தது. கனமழையால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை நீர்மட்டம் 39 அடியாக உள்ளது. 108 கனஅடி திறந்து விடப்பட்டது. 680 கனஅடி தண்ணீர் வரத்தாகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 70 அடியாக உள்ளது. 1,000 கனஅடி தண்ணீர் வருகிறது. 815 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x