Published : 13 Oct 2020 06:26 PM
Last Updated : 13 Oct 2020 06:26 PM
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் ஒரு வருடத்திற்கு 50 ஆயிரம் ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது ரூ.2 லட்சமாக உள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சென்றால், இதே கட்டண உயர்வு, இட ஒதுக்கீட்டுக்குப் பாதிப்பு அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் ஏற்படும் என கே.எஸ்.அழகிரி எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கை:
“சமூக நீதிக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது துணைவேந்தரின் செயல். சிறப்பு அந்தஸ்து என்ற பெயரில் 69 சதவீகித இட ஒதுக்கீடும், ஏழை, எளிய மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் பொறியியல் பட்டதாரி ஆவதை கேள்விக்குறியாக்குகிறது.
அண்ணா பல்கலைக்கழகம் 1978இல் தொடங்கப்பட்டு, உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகமாக வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆளும் மத்திய பாஜக அரசு, துணைவேந்தர் சூரப்பா மூலம் பல்கலைக்கழகத்தை நேரடியாக மத்திய அரசின் கீழ், கொண்டுவர முயற்சி நடந்து கொண்டிருக்கிறது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சென்றால், பல்கலைக்கழக நிர்வாகம், ஆசிரியர்கள் சேர்ப்பது, கட்டண முறை போன்ற அனைத்தும் மத்திய அரசிற்கு சென்றுவிடும். இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகுதான் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் ஒரு வருடத்திற்கு 50 ஆயிரம் ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது ரூ.2 லட்சமாக உள்ளது. இதே நிலைதான் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் ஏற்படும்.
தமிழ்நாட்டில் உள்ள உழைக்கும் மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்தவிதத்திலும் பயனில்லாமல் போய்விடும். மாநிலக் கல்விப் பட்டியலில் உள்ள பல்கலைக்கழகத்தை மத்திய அரசு கபளீகரம் செய்யப் பார்க்கிறது. அதற்கு ஆளும் மாநில அரசு துணை போகிறது.
சமூக நீதிக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது துணைவேந்தரின் செயல். சிறப்பு அந்தஸ்து என்ற பெயரில் 69 சதவீகித இட ஒதுக்கீடும், ஏழை, எளிய மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் பொறியியல் பட்டதாரி ஆவதை கேள்விக்குறியாக்குகிறது.
மத்திய அரசு கொடுப்பதாகச் சொன்ன ரூ.1,500 கோடியையும், பல்கலைக்கழகத்திலேயே வசூலித்துத் தருவோம் என்று சூரப்பா சொல்கிறார். இதனால் பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்ந்து ஏழை, எளிய மாணவர்களின் பொறியியல் கனவு என்பது எட்டாக்கனியாகி விடும்.
உலகத்தரம் வாய்ந்த அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து ஆளும் பாஜக அரசு முடிவெடுத்திருக்கிறது. இது பல்கலைக்கழகத்தின் தரத்தைக் குறைக்கும் செயலாகும். மேலும் இதற்கு, பல்கலைக்கழகப் பேராசிரியர்களும், மாணவர்களும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து போராடி வருகின்றனர்.
எப்படி நம் மாணவச் செல்வங்களின் மருத்துவக் கனவை நீட் தேர்வின் மூலம் மத்திய பாஜக அரசினர் சிதைத்தார்களோ, அதே போல பொறியியல் கனவும் அழித்தொழிக்க முயற்சி செய்கின்றனர். இதையும் அண்ணாவின் பெயரில் உள்ள அடிமை அதிமுக அரசு பதவி சுகத்திற்காக கைகட்டி வேடிக்கை பாக்கிறது.
ஏழை, எளிய மக்களின் உயர் கல்வி கனவு என்பது கல்வி கண் திறந்த காமராஜரின் கனவு. அதை நிறைவேற்றியும் காட்டினார். இதற்கு பங்கம் வந்தால் முதல் குரல் காங்கிரஸின் குரலாகத்தான் இருக்கும். அவ்வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தை எந்த வகையிலும் மத்திய அரசு கல்விப் பட்டியலில் சேர்க்கக் கூடாது. தன்னிச்சையாக செயல்படும் துணைவேந்தர் சூரப்பா உடனடியாக பதவி விலக வேண்டும்''.
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT