Published : 13 Oct 2020 05:19 PM
Last Updated : 13 Oct 2020 05:19 PM
காரைக்குடி நகராட்சிப் பகுதியில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளைக் குறித்த காலத்திற்குள் முடிக்காதது குறித்து சிவகங்கை தொகுதியின் எம்.பி. கார்த்தி சிதம்பரம், இன்று காலையில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை அழைத்து ஆய்வு நடத்தினார்.
காரைக்குடி நகராட்சிப் பகுதிகளில் பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பைக் கடந்த 2011-ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தார் அப்போதைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா. இதன்படி காரைக்குடி நகராட்சிப் பகுதியில் பாதாளச் சாக்கடைகள் அமைக்கத் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. எனினும் பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளியை இறுதி செய்வதில் ஆளும் கட்சிக்குள் அதிகாரப் போட்டி நடந்ததால் உடனடியாகத் திட்டப் பணிகளைத் தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டது.
இந்த நிலையில், அடுத்த தேர்தலும் முடிந்து அதிகாரப் புள்ளிகள் மாறியதால் ஒருவழியாக ஒப்பந்தப் புள்ளி இறுதி செய்யப்பட்டு நகர எல்லைக்குள் மொத்தம் 152 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாதாளச் சாக்கடைகள் அமைக்க 112.53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டது. இதையடுத்து 2017-ம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்ட பாதாளச் சாக்கடை அமைக்கும் பணிகள் கடந்த நவம்பரில் முடிந்திருக்க வேண்டும். ஆனால், திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் பணிகளை முடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
இதனிடையே, பாதாளச் சாக்கடைகள் அமைக்கப்பட்ட பகுதிகளில் சாலைப் பணிகளைச் செய்து முடிப்பதற்குக் கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் என ஒப்பந்ததாரர் தரப்பில் கோரப்பட்டது. இதையடுத்து, கூடுதலாக 27.6 கோடி ரூபாய்க்குத் திட்ட மதிப்பீடு உயர்த்தப்பட்டது. அப்படியிருந்தும் நகரின் பல பகுதிகளில் பணிகள் முடியாமல் சாலைகள் குண்டும் குழியுமாகவே காட்சி அளிக்கின்றன. மழைக்காலம் தொடங்கிவிட்டதால் அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன.
இதனால் காரைக்குடி மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வரும் நிலையில், கடந்த சில தினங்களாகத் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் நிறுவப்பட்ட உயர் கோபுர மின் விளக்குகளைத் திறந்து வைத்து வருகிறார் தொகுதி எம்.பி.யான கார்த்தி சிதம்பரம். இதற்காகக் காரைக்குடி பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அவரிடம், ஆண்டுக்கணக்கில் இழுபட்டுக் கொண்டிருக்கும் பாதாளச் சாக்கடைத் திட்டத்தின் அவலநிலை குறித்துப் பொதுமக்கள் தரப்பிலிருந்து புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இன்று காலையில் மானகிரி தோட்டத்தில் உள்ள தனது வீட்டில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை அழைத்து காரைக்குடி பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார் கார்த்தி சிதம்பரம். அவருக்கு, குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாகப் பொறியாளர் மாரியப்பன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் தாமதத்திற்கான காரணத்தை விளக்கினர்.
கடந்த 6 மாத காலமாக நிலவி வரும் கரோனா அச்சம் உள்ளிட்ட காரணங்களால் பணிகள் தாமதமாவதாகத் தெரிவித்த அதிகாரிகள், தீபாவளிக்குள் காரைக்குடி நகரின் அனைத்துப் பகுதிகளிலும் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, புதிதாகச் சாலைகள் அமைக்கப்படும் என்று எம்.பி.யிடம் உறுதியளித்துச் சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT