Published : 13 Oct 2020 04:17 PM
Last Updated : 13 Oct 2020 04:17 PM
மத்திய அரசு இ-பாஸ் முறையைத் தளர்த்தினாலும், மலைப்பகுதிகள், மாநிலங்களுக்கிடையே தமிழக அரசு இ-பாஸ் முறையைக் கடைப்பிடிக்கிறது என வழக்குத் தொடரப்பட்டது. மத்திய அரசின் இ-பாஸ் தளர்வுகள் குறித்த விவரங்களைப் பெற்று அதைப் பொதுமக்கள் காணும் வகையில் விளம்பரப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் நிலையில் மாநிலங்களுக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையேயும் மக்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கு இ-பாஸ் ஏதும் தேவையில்லை என கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது.
மத்திய அரசின் இந்த உத்தரவை மீறும் வகையில், வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களும், நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலை ஸ்தலங்களுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த எழில்நதி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். கடந்த முறை நடந்த விசாரணையில் இ-பாஸ் நடைமுறை குறித்து தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கை ஒத்திவைத்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், “தற்போது மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு அமலில் உள்ள இ-பாஸ் நடைமுறைக்குப் பதிலாக, இ-ரிஜிஸ்டர் முறையை அமல்படுத்த ஆலோசித்து வருகிறோம். ஆனால், இறுதி முடிவெடுக்கவில்லை.
மலைப் பகுதிகளில் மருத்துவ வசதிகள் குறைவாக இருக்கும் என்பதாலும், வெளியிலிருந்து அங்கு செல்பவர்கள் மூலமாக மலைப்பகுதி மக்களுக்குத் தொற்று பரவினால் ஆபத்தான சூழல் உருவாகும் என்பதாலும், மாவட்ட பேரிடர் மேலாண்மை அமைப்பு மூலம் கட்டுப்பாடுகளை விதிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, மலைப் பகுதிகளில் இ-பாஸ் நடைமுறைகளைத் தொடர்வது குறித்து மத்திய அரசிடம் மூன்று நாட்களில் விளக்கம் பெற்று, விரிவாக விளம்பரப்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அக்டோபர் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT