Published : 13 Oct 2020 12:40 PM
Last Updated : 13 Oct 2020 12:40 PM
6 ஆண்டுகளாக கட்சியிலிருந்த ஒருவர் வெளியேறும்போது ஏன் வெளியேறுகிறார் என்று யோசிக்கும் திறமை இல்லாத தலைமைதான் உள்ளது என காங்கிரஸ் கட்சி குறித்து குஷ்பு விமர்சித்துள்ளார்.
டெல்லி சென்று பாஜகவில் இணைந்தபின் இன்று காலை நடிகை குஷ்பு சென்னை திரும்பினார். அவருடன் தமிழக பாஜக தலைவர் முருகனும் உடன் வந்தார். சென்னை விமான நிலையத்தில் குஷ்புவுக்குத் தொண்டர்கள் மலர் மாலை சூட்டி வரவேற்பளித்தனர்.
பின்னர் நடிகை குஷ்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“நிறைய மகிழ்ச்சியோடு டெல்லியில் இருந்து திரும்பியுள்ளேன். தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தது மிகுந்த சந்தோஷமாக உள்ளது. பாஜகவில் இருக்க முக்கியக் காரணம் மாநிலத் தலைவர் முருகன் எடுத்த முக்கிய முயற்சிதான். அவர் எடுத்த முயற்சியால்தான் பாஜகவில் இணைந்துள்ளேன். நன்றி முருகன் சார்.
ஒரு கட்சி பலப்படுவதற்காக ஒரு தலைவர் எல்லோரிடமும் பேசி இந்தக் கட்சிக்கு வாருங்கள் என்று எல்லோருக்கும் புரியவைத்து அழைக்கிறார். இன்னொரு தலைவர் 6 வருடங்களாக அந்தக் கட்சியில் இருந்ததற்குப் பின்னரும் வெறும் நடிகையாகத்தான் பார்த்தேன் என்று சொல்கிறார். காங்கிரஸில் இருக்கிறவர்களுக்கும் மரியாதை கிடையாது. வெளியில் போகிறவர்களுக்கும் மரியாதை கிடையாது.
ஒருவர் வெளியே போகிறார் என்றால், ஏன் போகிறார் என்று யோசிக்கும் திறமையும் கிடையாது. 6 வருடம் கழித்துத்தான் நான் நடிகையாக இருப்பதாகத் தெரிகிறதா? இன்னொன்று சொல்லியிருக்கிறார். நான் பாஜகவுக்குப் போவதால் எனக்கு மூளை இல்லை எனச் சொல்லியிருக்கிறார். இப்போதுதான் எனக்கு மூளை இருக்கிறது என்று அவர் புரிந்துகொண்டார் என்றால் அவருக்கு நன்றி.
என் மீது காங்கிரஸ் சார்பில் வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு கட்சி அலுவலகம் சென்றபின் பதிலளிப்பேன். 6 வருடங்களாக அந்தக் கட்சியில் இருந்து என்னுடைய நேரம், கடினமான உழைப்பு எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு வெளியில் வரும்போது சிந்திக்கிற, மூளை வளர்ச்சியில்லாத ஒரு கட்சியாக காங்கிரஸ் உள்ளது.
திமுகவிலிருந்து வரும்போது நான் குற்றச்சாட்டுகள் வைக்கவில்லை. காங்கிரஸிலிருந்து வெளியே வரும்போதும் குற்றச்சாட்டு வைக்கவில்லை. ஆனால், என்னைப் பற்றி சொல்லும்போது நிச்சயமாக பதிலடி கொடுத்துத்தான் ஆக வேண்டும். கமலாலயம் சென்றபின் உங்கள் கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறேன்”.
இவ்வாறு குஷ்பு பதிலளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...