Published : 13 Oct 2020 11:41 AM
Last Updated : 13 Oct 2020 11:41 AM

கயத்தாறு அருகே தொழிலாளியை காலில் விழவைத்த 7 பேர் கைது: வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பாய்ந்தது

கோவில்பட்டி 

கயத்தாறு அருகே ஆடு மேய்க்கும் சம்பவத்தில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்க வைத்து வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கயத்தாறு அருகே ஓலைக்குளத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ் (55). தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 8-ம் தேதி திருமங்கலக்குறிச்சி காட்டுப் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது இவருக்கு சொந்தமான ஒரு ஆடு, ஓலைக்குளம் கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்த சிவசங்கு (60) என்பவர் மேய்த்துக் கொண்டிருந்த ஆடுகளுக்கு இடையே புகுந்தது.

இதனால் பால்ராஜ் மற்றும் சிவசங்கு ஆகியோருக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த சிவசங்கு தனது உறவினர்களுடன் சேர்ந்து பால்ராஜை அவதூறாக பேசினார்.

மேலும், அவரை காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். இதனை செல்போனில் படம் பிடித்து வாட்ஸ்அப்பில் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பவும் செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பால்ராஜ் அளித்த புகாரின் பேரில் கயத்தாறு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில், கோவில்பட்டி டிஎஸ்பி கலைக்கதிரவன் தலைமையின் கயத்தாறு காவல் ஆய்வாளர் முத்து, உதவி ஆய்வாளர் அரிகண்ணன், சிறப்பு சார்பு ஆய்வாளர் நாராயணசாமி, தலைமைக் காவலர்கள் முருகன் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட தனிப்படை பால்ராஜை மன்னிப்பு கேட்க வைத்தவர்களையும், அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டவர்களையும், தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிவசங்கு, அவரது மகன் சங்கிலி பாண்டி (19), கார்த்தி (24), பெரியமாரி (47), அவரது சகோதரர் வீரையா(42), பெரியமாரி மகன் மகேந்திரன் (20), சங்கிலி பாண்டி மகன் மகாராஜன் (24) ஆகிய 7 பேரை கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் 7 பேரும் கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதற்கிடையே இன்று காலை கயத்தாறு காவல் நிலையம் வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளைக் கைது செய்த போலீஸாரை பாராட்டினார். மேலும், எஸ்.பி. ஜெயக்குமார், டிஎஸ்பி கலை கதிரவன் ஆகியோர் பால்ராஜ் வீட்டுக்குச் சென்று அவரிடம் விசாரணை நடத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x