Published : 13 Oct 2020 08:02 AM
Last Updated : 13 Oct 2020 08:02 AM
படப்பை அருகே ஒரத்தூர் ஊராட்சியில் ஆக்கிரமிப்பாளர்களால் சேதமான அம்மணம்பாக்கம் ஏரிக்கரையை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குன்றத்தூர் ஒன்றியம், படப்பை அருகே, ஒரத்தூர் ஊராட்சியில் உள்ள அம்மணம்பாக்கம் ஏரி,குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒரத்தூர் ஆரம்பாக்கம் நீர்தேக்கத்தில் இருந்து ரூ.5.50 கோடியில் 600 கன அடி தண்ணீர் வரும் வகையில் 1,100 மீட்டர் நீளம் கால்வாய் அமைக்கப்பட்டு அம்மணம்பாக்கம் ஏரிக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அம்மணம்பாக்கம் ஏரியைப் பயன்படுத்தி, 50 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது. இந்த ஏரியை ஆக்கிரமித்து, ஏராளமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஏரியை ஆக்கிரமித்துள்ளோர், ஏரிகளின் கரையை சேதப்படுத்திவிட்டதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: அம்மணம்பாக்கம் ஏரியை ஆக்கிரமித்து வீடு கட்டியோருக்கு, ஒரத்தூர் ஊராட்சி நிர்வாகத்தால் சாலை, குடிநீர், மின்சார வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன. 2019-ம் ஆண்டுமழைக்காலத்தில் ஏரி விரைவாக நிரம்பியதையடுத்து ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளில் தண்ணீர் தேங்கியது,
இதனால் ஆக்கிரமிப்பாளர்கள் ஏரிக்கரையை உடைத்து ஏரிநீரை வெளியேற்றினர். உடைக்கப்பட்ட ஏரிக்கரை இதுவரை சரிசெய்யப்படவில்லை. இதனால், மழைநீரை தேக்கிவைக்க முடியவில்லை. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் உடைந்த ஏரிக்கரைகளை, குன்றத்தூர் ஒன்றிய நிர்வாகத்தினர் சரிசெய்ய வேண்டும். ஆனால் ஒன்றிய நிர்வாகமும் பொதுப்பணித் துறையும் எங்கள் கட்டுப்பாட்டில் இந்த ஏரி இல்லை என்கின்றனர். எனவே காஞ்சி மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT