Published : 12 Oct 2020 06:31 PM
Last Updated : 12 Oct 2020 06:31 PM
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் அதிமுக பிரமுகர் பிறழ் சாட்சியம் அளித்ததால் உதகை மாவட்ட நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சயான், மனோஜ், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி, தீபு, சதீசன், சந்தோஷ்சமி ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கின் விசாரணை உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று (அக். 12) விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு சயான், மனோஜ், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி, தீபு, சதீசன், சந்தோஷ்சமி ஆகிய 10 பேரும் ஆஜராகினர்.
மருத்துவர் வாசன், அதிமுக பிரமுகர் அனுபவம் ரவி, சிசிடிவி காட்சிகள் ஆய்வாளர் ராஜூ மற்றும் ஆய்வாளர் சதாம் உசேன் ஆகியோர் சாட்சியளித்தனர்.
அதிமுக பிரமுகர் அனுபவம் ரவி சாட்சி அளித்தபோது, இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரான இறந்த கனகராஜ், 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ம் தேதி தன்னிடம் தொலைபேசியில் பேசியதாகக் கூறினார்.
இதற்கு குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர் ஆனந்த் கடும் ஆட்சேபனை தெரிவித்தார். 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ம் தேதி கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார் எனக்கூறி, கனகராஜின் இறப்புச் சான்றிதழை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இதுகுறித்து நீதிபதி பி.வடமலை, அனுபவம் ரவியிடம் விளக்கம் கேட்டபோது, தான் தவறுதலாக கூறிவிட்டதாகத் தெரிவித்தார். இதனால், நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
வழக்கு விசாரணையை 16-ம் தேதிக்கு நீதிபதி பி.வடமலை ஒத்திவைத்தார்.
இந்நிலையில், திமுகவைச் சேர்ந்த கூடலூர் எம்எல்ஏவும், வழக்கறிஞருமான திராவிடமணி குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக விசாரணையின்போது ஆஜரானார். வழக்கின் தன்மை குறித்து அறியவும், வழக்கில் உண்மையை வெளிக்கொண்டு வரவும் தான் ஆஜரானதாக திராவிடமணி தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் ஆனந்த், விஜயன் ஆகியோர் கூறும்போது, "கோடநாடு வழக்கில் காவல்துறையினர் உண்மைக்குப் புறம்பானவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். நேரடி சாட்சியான கிருஷ்ண தாபாவுக்கு சிகிச்சை அளித்ததற்கான முறையான பதிவு அல்லாமல், சிகிச்சை விவரங்கள் அடங்கிய துண்டுச்சீட்டை காவல் துறையினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். மேலும், அதிமுக பிரமுகர் அனுபவம் ரவி என்பவர் கனகராஜ் இறந்த பின்னர், கனகராஜ் பேசியதாகக் கூறுகிறார். இவை அனைத்தும் காவல்துறையினர் ஜோடித்த சாட்சிகள்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT