Published : 12 Oct 2020 06:38 PM
Last Updated : 12 Oct 2020 06:38 PM
புதுச்சேரி மாநிலப் பகுதிகளில் தமிழக அரசுப் பேருந்துகள் பயணிகளை ஏற்றி, இறக்க அனுமதிக்க வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து முன்னாள அமைச்சரும், காரைக்கால் திமுக அமைப்பாளருமான ஏ.எம்.ஹெச்.நாஜிம் இன்று (அக். 12) செய்தியாளர்களிடம் கூறுகையில், "புதுச்சேரி மாநிலப் பகுதிகளுக்குள் வரும் தமிழக அரசுப் பேருந்துகள் புதுச்சேரி, காரைக்காலுக்கு உட்பட்ட பகுதிகளில் பயணிகளை ஏற்றி, இறக்க அனுமதி இல்லை என்ற அறிவிப்பை மாநில அரசு செய்துள்ளது.
இதனால் காரைக்கால் மாவட்டத்தைப் பொறுத்தவரை, தமிழக அரசுப் பேருந்துகளில் வரக்கூடிய பயணிகள் காரைக்கால் மாவட்ட எல்லைப் பகுதிகளிலேயே இறக்கிவிடப்படுகின்றனர். அங்கிருந்து புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மூலம் காரைக்கால் மாவட்டத்துக்குள் பயணிக்கும் நிலை உள்ளது. இதனால் பயணிகளுக்குக் காலதாமதம், இரட்டிப்புச் செலவு ஏற்படுகிறது.
முக்கியமாக, புதுச்சேரி அரசுப் பேருந்துகளில் தனிமனித இடைவெளியின்றி மக்கள் நெரிசலாக செல்லும் நிலை உள்ளது. இதனால் கரோனா நோய்த் தொற்று பரவல் ஏற்படும் அபாயம் உள்ளது. அரசே இந்நிலையை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது.
இது எந்தவகையிலும் மக்களுக்குப் பாதுகாப்பானதாகவும் இல்லை, சலுகை தரக்கூடியதாகவும் இல்லை. அரசு நிர்வாகம் மக்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. உபத்திரவமாக அமையக் கூடாது.
இனியும் மக்களை அலைக்கழிக்கும் நிலையை அரசு அனுமதிக்கக் கூடாது. எனவே, புதுச்சேரி அரசு தனது முடிவு குறித்து உடனடியாக மறு பரிசீலனை செய்ய வேண்டும்" என திமுக சார்பில் வலியுறுத்துவதாக நாஜிம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT