Published : 12 Oct 2020 06:06 PM
Last Updated : 12 Oct 2020 06:06 PM
குஷ்பு பாஜகவில் சேருவதற்கு எந்த அடிப்படையும் இல்லை. அவரது கணவர் சுந்தர்.சியின் நெருக்கடியே இந்தத் தவறான முடிவுக்குக் காரணம் என்கிறார் காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவுத் தலைவர் கோபண்ணா.
'இந்து தமிழ்' இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி வருமாறு...
பாஜகவில் சேர்ந்தேவிட்டார் குஷ்பு. ஆனாலும், உங்களால் அதை நம்பவே முடியவில்லையே. ஏன்?
குஷ்புவைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். என் மீது அன்பாக இருந்தவர். நட்பாகப் பழகியவர். என் மீது மரியாதை வைத்திருந்தவர். பெரிய நடிகை என்கிற ஈகோ எல்லாம் இல்லாதவர். அவருக்கென்று ஒரு ஐடியாலஜி உண்டு. அவர் இதுவரையில் ஆணாதிக்கத்துக்கு எதிராகவும், வகுப்புவாதத்திற்கு எதிராகவும் பேசியது வெறுமனே அரசியலுக்காகவும், ட்விட்டருக்காகவும் பேசியது அல்ல. உண்மையிலேயே அவர் முற்போக்கானவர். அவ்வளவு சுலபமாக அவரால் அந்தக் கருத்துகளை எல்லாம்விட்டுவிட முடியாது.
திமுகவில் இருந்து கருத்து வேறுபாடு காரணமாக வெளியேறியபோது கூட, அந்தத் தேர்தலில் தோல்வியடைந்திருந்த கட்சியான காங்கிரஸில்தான் இணைந்தார். காரணம், அவரது மதச்சார்பற்ற, நாட்டின் பன்முகத் தன்மையை மதிக்கிற, சமூக நீதியைப் பேணுகிற, பெண்ணுரிமையை வலியுறுத்துகிற இன்னொரு கட்சி காங்கிரஸ்தான் என்பதை அவர் அறிந்திருந்தார். எனவேதான், அவரால் தடுக்கவே முடியாத ஏதோ நிர்பந்தம் காரணமாகத்தான் அவர் கட்சி மாறியிருக்கிறார் என்று சொல்கிறேன்.
அவர் பாஜகவில் இணைய சுந்தர்.சி.தான் காரணம் என்று இன்று சொன்னீர்கள். எந்த அடிப்படையில் அப்படிச் சொல்கிறீர்கள்?
உ.பி. பாலியல் வன்முறையைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில், மிகக் கடுமையாக பாஜகவை விமர்சித்தவர் குஷ்பு. கடந்த 25-ம் தேதி மேலிடப் பார்வையாளர் தினேஷ் குண்டுராவின் பத்திரிகையாளர் சந்திப்பில் கூடக் குஷ்பு பங்கேற்றார். கடந்த 5 நாட்களுக்கு முன்பு கே.சி.வேணுகோபாலைப் பார்ப்பதற்காக டெல்லி சென்றார் குஷ்பு.
அப்போது கூட, "பாஜகவில் இணையப் போகிறீர்களாமே?" என்று பத்திரிகையாளர்கள் அவரிடம் கேட்டார்கள். அதற்கு அவர், "நான் காங்கிரஸ் கட்சியில்தான் இருக்கிறேன். இங்கே மனநிறைவோடு, மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் பாஜகவில் சேர வேண்டிய அவசியமே இல்லை. 2 ரூபாய்க்கு ட்ரோல் பண்ணுகிற சிலர்தான் என்னைப் பற்றி இப்படி அவதூறான கருத்துகளைப் பரப்புகின்றனர்" என்று குஷ்பு சொன்னார்.
அந்த வீடியோ என்னிடம் இருக்கிறது. அப்படிச் சொல்லிவிட்டு டெல்லி போய்வந்தவர், அடுத்த 5-வது நாள் பாஜகவில் சேர்கிறார் என்றால் என்ன அர்த்தம்? கடந்த 20 நாட்களுக்கு முன்பு தமிழக பாஜக தலைவர் முருகனும், சுந்தர்.சி.யும் பொதுவான நண்பர் வீட்டில் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். சினிமா இயக்குநரும், தயாரிப்பாளருமான சுந்தர்.சி.க்கு சில பிரச்சினைகள் இருந்திருக்கலாம். இந்தச் சந்திப்பின்போது, கட்சியில் இணைவதற்கு அவர் சில நிபந்தனைகளைச் சொன்னதாகவும், அவற்றை முருகன் மேலிடத்தில் சொல்லிப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒரு முடிவு அறிவிக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.
இப்படி சுந்தர்.சி திரைமறைவுப் பேச்சுவார்த்தை நடத்தினாலும் கூட, குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருக்கவே விரும்பினார். தன்னுடைய கொள்கைக்குக் காங்கிரஸ்தான் சரியாக வரும், பாஜக ஒத்துவராது என்று தயக்கமும் தெரிவித்திருக்கிறார். ஆனால், சுந்தர்.சி.யின் அழுத்தத்தின் பேரிலேயே, அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார். என்னைப் பொறுத்தவரை குஷ்பு என்ற ஆளுமையின் மிகப்பெரிய வீழ்ச்சியாகவே இதனைப் பார்க்கிறேன்.
தமிழக காங்கிரஸ் கட்சியில் அவருக்கு உரிய மரியாதை கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே? குறிப்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் மாநிலத் தலைவர் பொறுப்பைவிட்டுப் போனபிறகு...
காங்கிரஸ் கட்சியில் இணைந்த உடனேயே, குஷ்புவுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைக் கட்சி வழங்கியது. தேசிய செய்தித் தொடர்பாளர் பதவி தரப்பட்டது. தேசிய ஊடகங்களில் கட்சியின் சார்பில் விவாதங்களில் கலந்துகொண்டார். 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் கூடக் கட்சிக்காகத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார். தமிழக காங்கிரஸ் தலைவராகத் திருநாவுக்கரசர் பொறுப்பேற்றதுமே, குஷ்புவின் வேகத்தில் தொய்வு ஏற்பட்டது. 2019 தேர்தலில் ஓரளவிற்குப் பிரச்சாரம் செய்தார். கே.எஸ்.அழகிரி தலைவரானதும், இன்னும் தன்னுடைய செயல்பாட்டைக் குஷ்பு குறைத்துக் கொண்டார்.
நானே குஷ்புவை வீடு தேடிச் சென்று, பார்த்துப் பேசினேன். தலைவர் கே.எஸ்.அழகிரியையும் சந்திக்கச் சொன்னேன். அவரும் போய்ப் பார்த்துப் பேசினார். "என்னைக் கட்சி நிகழ்ச்சிகளுக்குக் கூப்பிடுவதில்லை. முக்கியத்துவம் தரவில்லை. தகவல் தருவதில்லை" என்பது மாதிரியான குற்றச்சாட்டுகளைச் சொன்னார்.
நான் தெளிவாகச் சொன்னேன், "உங்களை அழைப்பதற்கென்று ஒரு மேடை வேண்டும். மற்ற யாராவது பேட்டி கொடுப்பதற்கு உங்களை அழைத்தால், நீங்கள் சும்மாதான் உட்கார்ந்திருக்க வேண்டியதிருக்கும். நீங்களே ஏதாவது பிரச்சினை பற்றி பிரஸ் மீட் கொடுப்பது என்றால் சொல்லுங்கள், ஊடகப் பிரிவுத் தலைவர் என்ற முறையில் நானே அதற்கு ஏற்பாடு செய்கிறேன்" என்று சொன்னேன். ஆனால், அவரும் சொல்லவில்லை. நானும் ஏற்பாடு செய்யவில்லை.
ஏதாவது பேச விரும்பினால், தேசிய ஊடகங்களில் பேசுவாரே தவிர, சென்னையில் பிரஸ் மீட் வைப்பதோ, பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுப்பதோ இல்லை. அவரே விலகியிருந்துவிட்டு, கட்சி ஒதுக்கி வைத்ததுபோலப் பேசுவது சரியல்ல.
காங்கிரஸ் இனி மேல் ஆட்சிக்கே வராது என்ற எண்ணத்தில்தான், வடக்கே நிறைய பேர் விலகுகிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரையில், அற்ற குளத்து அறுநீர்ப் பறவையா குஷ்பு?
அப்படி எல்லாம் கிடையாது. இன்றைக்காவது பாஜகவுக்கு 302 எம்.பி.க்கள்தான். 1984 தேர்தலில் 414 எம்.பி.க்களுடன் ஆட்சியைப் பிடித்தவர் ராஜீவ் காந்தி. ஆனால், அடுத்த 5-வது ஆண்டில் அவர் ஆட்சியில் இல்லை. அந்த இடத்திற்கு வி.பி.சிங் வந்துவிட்டார். இப்போது நாடு முழுக்க மத்திய அரசுக்கு எதிரான கோப அலை வீசுகிறது. ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பு நடவடிக்கை, மதவாதப் பிரச்சினைகள், உ.பி. பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினைகளுடன், கரோனா காலத்தில் அரசு கைவிட்ட கோபம் மக்களிடம் இருக்கிறது. இந்த ஆட்சி ரொம்ப காலம் நீடிக்காது. எனவே, இந்தக் கேள்வியே தவறானது.
கூட்டம் கூட்டும் திறன்பெற்ற ஒரு நட்சத்திரப் பேச்சாளரை இழந்திருக்கிறது காங்கிரஸ். பாஜகவுக்கு இது கூடுதல் பலம்தானே?
குஷ்பு நட்சத்திர பேச்சாளர்தான். ஆனால், கட்சி வளர்ச்சிக்கு அவர் பெரிய பங்களிப்பு ஆற்றியவர் இல்லை. மேடையில் உட்காருவார், பேசுவார், போய்விடுவார். மற்றபடி கட்சியை வளர்க்க அவர் எதுவும் செய்ததில்லை. அவரால் காங்கிரஸுக்கு ஏற்படும் இழப்பைவிட, காங்கிரஸில் இருந்து விலகியதால் அவருக்குத்தான் பெரிய இழப்பு. சினிமா நடிகர்களில் துணிச்சலானவர், சிந்திக்கத் தெரிந்தவர், பெண்ணுரிமைக்காக குரல் கொடுப்பவர், வகுப்புவாதிகளுக்கு எதிராகத் துணிந்து பேசியவர், பாஜகவில் அப்படிச் செயல்பட முடியுமா? அந்தச் சித்தாந்தம்தான் அவரை அப்படிப் பேச அனுமதிக்குமா? ஆர்.எஸ்.எஸ். ஐடியாலஜி உள்ளவர்களை மட்டுமே உண்மையான பாஜககாரனாகப் பார்க்கிற கட்சி அது. பாவம் அங்கே போய் அவர் மாட்டிக்கொண்டார்.
வட மாநிலங்களில் விவசாயிகள் தன்னெழுச்சியாகப் போராடுகிறார்கள். இங்கே காங்கிரஸ் கட்சியே முன்னின்று போராடியும்கூட கூட்டமே வரவில்லையே ஏன்?
தமிழகத்தில் இன்னமும் கரோனா பீதியில் இருந்து மக்கள் மீளவில்லை. வடமாநிலங்களைவிட இங்கே நோய் குறித்த விழிப்புணர்வு கூடுதலாக இருக்கிறது. அந்தக் கூட்டத்திற்கு நான் சென்றதற்கே என் வீட்டில் கடுமையான எதிர்ப்பு. அதை மீறித்தான் போனேன். இங்கே கூட்டம் இல்லை என்பதற்காக பாஜகவுக்கும், விவசாயச் சட்டங்களுக்கும் எதிர்ப்பு இல்லை என்று கருதிவிட முடியாது.
சமீபத்திய செயல்பாடுகளின் அடிப்படையில், ராகுலை விட ஆளுமைமிக்கவர் பிரியங்கா என்கிற எண்ணம் எழுந்திருக்கிறதே? உங்கள் கருத்து என்ன?
அந்தக் குடும்பத்தை முழுமையாக அறிந்தவன் நான். நேருவின் வாழ்க்கை வரலாற்றை எழுவதற்காகவும், அவரது 7,000 அரிய புகைப்படங்களைச் சேகரிப்பதற்காகவும் 10 ஆண்டுகளைச் செலவழித்தவன். அப்போது இன்னும் கூடுதலாக ராஜீவின் குடும்பத்தைப் பற்றி அறிய வாய்ப்பு கிடைத்தது. ராகுலின் அணுகுமுறை வேறு. பிரியங்காவின் அணுகுமுறை வேறு. பிரியங்கா இந்திரா காந்தி போல, துணிச்சலாக, அதிரடியாகத்தான் இருப்பார்.
மக்களுடன் நெருங்கிப் பழகுகிற தன்மை ராகுலிடம் உண்டு. மக்களிடம் ராகுலைப் பற்றி தவறான புரிதல் இருக்கிறது. பாஜகவும் அவரைப் பற்றி தவறான மதிப்பீடுகளைப் பரப்பிவிட்டது. ஆனால், ராகுல் மிகப்பெரிய ஆளுமை. அவரது முழுத் திறமையும் உரிய காலத்திற்குள் வெளிப்படும். அப்போது மக்களே வியந்து பாராட்டுவார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு கோபண்ணா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT