Published : 12 Oct 2020 05:06 PM
Last Updated : 12 Oct 2020 05:06 PM
மதுரை மாவட்டத்தில் முதன்முதலாக கி.பி.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய வகை ஆசிரியம் கல்வெட்டை, வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் மதுரை விமான நிலையம் அருகே கூடல் செங்குளம் கண்மாயில் கண்டுபிடித்துள்ளனர்.
கூடல் செங்குளம் கிராமத்தைச் சேர்ந்த முதுகலை வரலாற்றுத் துறை மாணவர் ரஞ்சித் குமார் அவ்வூர் கண்மாயில் ஒரு கல்வெட்டு இருப்பதாக அளித்த தகவலின்படி மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் து.முனீஸ்வரன், லட்சுமணமூர்த்தி ஆகியோர் அக்கல்வெட்டை படித்து ஆய்வு செய்ததில் கி.பி.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய வகை ஆசிரியம் கல்வெட்டு எனத் தெரிந்தது.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் து.முனீஸ்வரன் கூறியதாவது: மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் ஊரவர், நாட்டவர், சிற்றரசர், படைப்பிரிவினர் ஆகியோர் அந்தந்தப் பகுதிகளில் படைகளை உருவாக்கி மக்களை பாதுகாத்து வந்தனர்.
மதுரையில் கி.பி.13-14-ம் நூற்றாண்டுகளில் கிராமங்களில் இருந்த நிலச்சுவான்தாரர்கள் அவ்வூர் ஆட்சியாளர்களாகவும் செயல்பட்டுள்ளனர். இவர்கள் ஊர் பாதுகாப்புக்கென ஆள் நியமித்துக்கொள்ளும் வழக்கம் இருந்துள்ளது.
அவ்வாறு செய்வோர் குளம் வெட்டுதல், பாசனத்தை முறைப்படுத்துதல், கோயில் நிர்வாகம், பொதுநிகழ்வுகளை முன்னெடுப்பது தொடர்பான உரிமைகளையும் பெற்றிருந்தனர்.
காவல் செய்யும் பாடிகாவல் உரிமை எந்த ஊருக்கு யார் பெற்றுள்ளார்களோ அவர்கள் அதை உறுதிப்படுத்தி அறிவிப்பதை ஆசிரியம் கொடுத்தல் என்கின்றனர்.
ஆசிரியம் என்ற சொல்லுக்கு பாதுகாப்பு தருதல், அடைக்கலம் தருதல் என்று பொருள். இச்சொல் ஆசிரயம், ஆச்சரயம், ஆஸ்ரீயம் என மாறுபட்ட உச்சரிப்புகளுடன் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. இதுவரை தமிழகத்தில் 75-க்கும் மேற்பட்ட ஆசிரியம் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகம் கிடைக்கும் இவ்வகை கல்வெட்டுகள் சிலவரிகள் கொண்டதாகவும், தனி பலகை கற்களில் பொறிக்கப்பட்டும் காணப்படுகின்றன.
பாடிகாவல் முறையில், கிராமத்தை ஒரு குறிப்பிட்ட குழுவினர் காவல் காத்து வருவதை அனைவருக்கும் அறிவிக்கும் வகையில், கல்வெட்டை ஊரின் எல்லையிலோ, மையப்பகுதியிலோ, கோயில்களிலோ, நட்டு வைப்பது வழக்கம்.
கூடல் செங்குளம் கண்மாயில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டு, 3½ அடி நீளம், 1½ அகலமுள்ள கற்பலகையில், ‘பாடி நகரத்தேவர் கண்டிய தேவராஸ்ரீயம்’ என 5 வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளது.
கல்லின் மேல்பகுதி உடைந்தநிலையில் உள்ளதால் இதன் முதல் வரி சிதைந்துள்ளது. இதில் சொல்லப்படும் பாடி கொம்பாடியாக இருக்கலாம். கொம்பாடி எனும் ஊர் இக்கண்மாயின் தென்பகுதியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் கொம்பாடி என்ற நகரத்துக்கு கண்டியதேவர் என்பவர் பாடிகாவலாக இருந்ததை உறுதிப்படுத்தி ஆசிரியம் கொடுத்துள்ளதை இக்கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.
இதன் கீழ்ப்பகுதியில் முக்காலி மீது பூர்ணகும்பமும், இருபக்கமும் குத்துவிளக்குகளும் பொறிக்கப்பட்டுள்ளன. இது மதுரை மாவட்டத்தில் முதன்முதலாக கண்டெடுக்கப்பட்ட அரிய வகை ஆசிரியம் கல்வெட்டு, என்றார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment