Published : 12 Oct 2020 01:39 PM
Last Updated : 12 Oct 2020 01:39 PM
நீதித்துறைக்குக் களங்கம் கற்பிக்கும் விதமாக வழக்குத் தொடர்ந்த வழக்கறிஞருக்கு ரூ.5 லட்ச ரூபாய் அபராதம் விதித்து மனுவைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு அவமதிப்பு வழக்குத் தொடர்ந்துள்ளது. முன்னரே செய்தி வெளியிட்ட ஊடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
வழக்கறிஞர் சதீஷ்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
அவரது மனுவில், “தமிழ்நாடு நீதித்துறை பணியில் கடந்த 2011-ம் ஆண்டு மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் சேர்ந்த பூர்ணிமா தற்போது சென்னை உயர் நீதிமன்ற விஜிலென்ஸ் பதிவாளராக இருந்து வருகிறார். விதிப்படி, இவர் பத்தாம் வகுப்பு முடித்தவுடன் 12-ம் வகுப்பை முடிக்காமல் தொலைதூரக் கல்வி மூலம் பி.காம். படிப்பை முடித்து அதன் பின்னர், எல்.எல்.பி. படிப்பை மைசூரு கல்லூரியில் படித்திருக்கிறார்.
வழக்கறிஞராக பூர்ணிமா பதிவு செய்யும்போது தமிழ்நாடு பார் கவுன்சில் இதனை ஆராயத் தவறிவிட்டது. தற்போது சென்னை உயர் நீதிமன்ற விஜிலென்ஸ் பதிவாளராக பதவி வகிக்கும் பூர்ணிமா, பள்ளிப்படிப்பை ரெகுலர் முறையில் முடித்தற்கான ஆவணங்கள் இல்லை என்பதால், அப்பணியில் இருந்து அவரை நீக்க வேண்டும். எதன் அடிப்படையில் பணியில் நீடிக்கிறார் என்பதை அவர் விளக்க வேண்டும்” என மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி ஏ.பி சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், “10-ம் வகுப்பு படிக்காமல் திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பும், பின்னர் மைசூருவில் சட்டப்படிப்பும் முடித்து பூர்ணிமா நீதித்துறை பணியில் சேர்ந்திருப்பதாகவும், தமிழக அரசாணையின்படி அவர் பதவியில் நீடிக்கத் தகுதியில்லை” எனவும் வாதிடப்பட்டது.
இதையடுத்து தலைமை நீதிபதி சாஹி, பதிவுத்துறையிலிருந்து பெறப்பட்ட சான்றிதழ்களைச் சுட்டிக்காட்டி விஜிலென்ஸ் பதிவாளர் பூர்ணிமா, 1984-ல் 12-ம் வகுப்பை 711 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருப்பதாகத் தெரிவித்து, அந்தச் சான்றிதழைக் காணொலியில் காட்டினார்.
இந்த வழக்கு மூலமாக நீதித்துறைக்குக் களங்கம் கற்பிக்கும் விதமாக மனுதாரரான வழக்கறிஞர் சதீஷ்குமார் வழக்குத் தொடர்ந்துள்ளார் என்றும், அற்பக் காரணங்களுக்காக வழக்குகள் தொடர்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டி, மனுதாரருக்கு ரூ.5 லட்ச ரூபாய் அபராதம் விதித்து நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்தனர். இந்த அபராதத் தொகையை வசூலிக்க மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட்டனர்.
மேலும், மனுதாரர் சதீஷ்குமார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எடுத்துள்ள தலைமை நீதிபதி அமர்வு, அந்த வழக்கில் அக்டோபர் 20-ம் தேதி மனுதாரர் சதீஷ்குமார் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடியும் வரை எந்த நீதிமன்றத்திலும் அவர் வழக்கறிஞராக ஆஜராகக்கூடாது எனவும் உத்தரவிட்டது.
மேலும், இந்த மனு விசாரணைக்கு வரும் முன்பே பூர்ணிமாவுக்கு எதிராகத் தொடரப்பட்ட பொய் வழக்கைச் செய்தியாக வெளியிட்ட பத்திரிகை மற்றும் ஊடகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT