Published : 12 Oct 2020 12:53 PM
Last Updated : 12 Oct 2020 12:53 PM
பள்ளி திறக்கும் போது மாணவர்களுக்கு மதிய உணவில் இயற்கை முறையில் விளைவித்த காய்கறிகளை வழங்கும் நோக்கத் துடன், மத்தூர் அருகே அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் ஒன்றி ணைந்து காய்கறிகள் மற்றும் மூலி கை தோட்டம் அமைத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் எம்.ஒட்டப்பட்டி கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், புளியாண்டப்பட்டி, ஒட்டப்பட்டி, சோனார்அள்ளி, நாகனூர், மாதம்பதி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ஏற்கெனவே 94 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வந்தநிலையில் தற்போது புதிதாக 29 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர்.
கரோனா ஊரடங்கால் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இருப்பினும், மாணவர் சேர்க்கை, சீருடை, புத்தகங்கள், உலர் உணவுப்பொருட்கள் வழங்குதல் உள்ளிட்டவற்றுக்காக ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்குச் சென்று வருகின்றனர். மாணவர்கள் பள்ளிக்கு வராத நிலையில், தங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தி, சத்துணவு சமையலுக்காக இயற்கை முறையில் காய்கறிகளை விளைவிக்க முடிவு செய்தனர்.
இதற்காக காய்கறி மற்றும் மூலிகைத் தோட்டம் அமைக்க பள்ளி வளாகத்தின் ஒரு பகுதியைத் தேர்வு செய்து ஜேசிபி வாகனம் மூலம் அங்கிருந்து புதர்களை அகற்றி இடத்தை சீர் செய்தனர். இதனைத் தொடர்ந்து பள்ளியின் தலைமையாசிரியர் (பொ) வேடியப்பன் தலைமையில் ஆசிரியர்கள் பழனி, வனசுந்தரி, சரஸ்வதி, வித்யா, அருள்குமார், ரமேஷ் ஒன்றிணைந்து செடிகளை நட்டு வளர்த்து வருகின்றனர். செடிகளுக்கு தண்ணீர் கட்டுவது, களை எடுப்பது ஆகிய பணிகளை ஆசிரியர்களே மேற்கொண்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக தலைமை யாசிரியர் வேடியப்பன் கூறியதாவது:
சத்துணவில் சத்தான காய்கறிகள் மாணவ, மாணவி களுக்கு கிடைக்கவும், ரசாயனம் பயன்படுத்தாமல் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி காய்கறிகளை விளைவிக்க தோட்டம் அமைத்துள்ளோம். பள்ளி திறக்கப்படும் போது காய்கறிகள் அறுவடைக்கு தயாராக இருக்கும்.புங்கன், செம்பருத்தி, தூதுவளை, ஆடாதொடா, அத்தி, நெல்லி, நாவல், எலுமிச்சை, முருங்கை, கொய்யா என 20 வகைக்கும் மேற்பட்ட 100 மூலிகைச் செடிகளை நடவு செய்துள்ளோம். இங்கு கிடைக்கும் பழங்கள், காய்கறிகள் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
மேலும், இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களிடமும் நாங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செடிகளை நடவு செய்ய விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT