Last Updated : 25 Sep, 2015 04:41 PM

 

Published : 25 Sep 2015 04:41 PM
Last Updated : 25 Sep 2015 04:41 PM

சேலத்தில் 21 கிராமங்களில் தொடரும் தடை உத்தரவு: வேலையின்றி வாடும் தொழிலாளர்கள்

சேலம் அருகே சிவன் கோயில் கும்பாபிஷேக விழா தொடர்பாக இரு பிரிவினருக்கு ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து 21 கிராமங்களில் கடந்த 6 மாதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், வேலைவாய்ப்பின்றி தொழிலாளர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம், சித்தர் கோயில் அடுத்த திருமலைகிரி தோப்புக்காடு பகுதியில் சைலகிரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த மார்ச் 4-ம் தேதி நடத்த ஒரு தரப்பினர் ஏற்பாடு செய்திருந்தினர். அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு தரப்பினர், விழாவில் தாங்களும் கலந்து கொள்வோம் என்று தெரிவித்தனர்.

இதற்கு மற்றொரு பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு ஏற்பட்ட பதற்றத்தை தொடர்ந்து கும்பாபிஷேக விழா நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக வருவாய் துறை அதிகாரிகள் இரு தரப்பினரிடையே நடத்திய அமைதி பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோயிலுக்கு சீல் வைத்ததோடு, கோயில் அமைந்து இருக்கும் தோப்புக்காடு, திருமலைகிரி, சிவதாபுரம், வேடுகாத்தாம்பட்டி, கந்தம்பட்டி, பனங்காடு, சேலத்தாம்பட்டி, சூரமங்கலம், காட்டூர், கீரபாப்பம்பட்டி, அரியாகவுண்டம்பட்டி உள்ளிட்ட 21 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பித்தனர்.

கடந்த ஆறு மாதமாக தடை உத்தரவு நீடிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த 21 கிராமங்களிலும் எந்தவித பொது நிகழ்ச்சிகள், அரசியல் கட்சியினர் கூட்டம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ஓரிடத்தில் நான்கு பேருக்கு மேல் கூடி நிற்க கூடாது. அரசு திட்டப்பணிகள் சம்பந்தப்பட்ட கிராமங்களில் செயல் படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

21 கிராமங்களிலும் ஒரு லட்சத்துக்கும் மேல் பொதுமக்கள் வசிக்கின்றனர். இதில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் அதிக அளவில் உள்ளனர். குறிப்பாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 100 நாள் வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வருகின்றனர்.

தற்போது, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் இரு சமூகத்தை சேர்ந்தவர்களும் ஓரிடத்தில் பணியாற்ற முடியாத சூழலில் இப்பணிகள் முடங்கியுள்ளது.

இதே போல் 21 கிராமங்களிலும் தினக்கூலி வேலைக்கு செல்பவர்கள் வேலைவாய்ப்பின்றி, வருவாயின்றி அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பலர் வெளியூர்களில் வேலைக்கு சென்றாலும் தொடர் வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ளனர்.

சிவன் கோயில் பிரச்சினையில் இரு பிரிவுக்கு உள்ள கருத்துவேறுபாட்டை விரைந்து அதிகாரிகள் கலைந்து, சுமூக தீர்வு காண வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x