Published : 21 Jan 2014 10:48 AM
Last Updated : 21 Jan 2014 10:48 AM
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது. கருணாநிதி, மு.க.ஸ்டாலின் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழகத்தில் உள்ள கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தை மற்றும் வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன. வேட்பாளர் தேர்வுக்காக கட்சியினரிடம் விருப்ப மனுக்களை வாங்கி வருகின்றன. திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர், மனு அளிக்கலாம் என்றும் பொதுத் தொகுதிக்கு ரூ.25 ஆயிரம், தனித் தொகுதி மற்றும் மகளிர் தொகுதிக்கு ரூ.10 ஆயிரம் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் கட்சித் தலைமை அறிவித்திருந்தது.
அதன்படி, அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்கள் விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் விருப்ப மனுவை, தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் பெற்றார். அவர் தென்சென்னை அல்லது மத்திய சென்னை தொகுதியில், திமுக தலைவர் கருணாநிதி அல்லது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு செய்தார்.
மத்திய சென்னையில் ஸ்டாலின் போட்டியிடக் கோரி மா.பா.அன்புதுரை மனு செய்தார்.
முதல்நாள் என்பதால் கூட்டம் குறைவாகவே இருந்தது. வரும் 30-ம் தேதி மாலை 6 மணி வரை மனுக்களை தரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 30-ம் தேதி அமாவாசை என்பதால், அன்றைய தினம் பெரும்பாலானோர் விருப்ப மனு செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT