Last Updated : 12 Oct, 2020 11:50 AM

 

Published : 12 Oct 2020 11:50 AM
Last Updated : 12 Oct 2020 11:50 AM

கன்னியாகுமரியைக் காண சுற்றுலா பயணிகள் விருப்பம்: அரசின் அனுமதிக்காக ஆர்வமுடன் காத்திருப்பு - பல்லாயிரம் பேர் இழந்த வாழ்வாதாரம் மீண்டெழுமா?

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் நீராட வசதியாக கைப்பிடிச் சுவர்களுடன் படித்துறை அமைக்கப்பட்டுள்ளது. படம்: எல்.மோகன்

நாகர்கோவில்

இந்தியாவின் கடைகோடியில் உள்ள கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலா மையமாக திகழ்கிறது. ஆண்டுக்கு 86 லட்சம் சுற்றுலா பயணிகள் உலகம் முழுவதும் இருந்து இங்கு வருவது தனிச் சிறப்பு. இதுவரை இல்லாத வகையில் கடந்த மார்ச் மாதம் கரோனா ஊரடங்கு தொடங்கியதில் இருந்து ஆறரை மாதமாக கன்னியாகுமரியில் சுற்றுலா மையங்கள் அனைத்தும் முடங்கி கிடக்கின்றன. படகு இல்லம், அரசு தங்கும் விடுதிகள், சுற்றுலாத்துறை என அரசுத்துறைகள் மற்றும் நடைபாதை வியாபாரிகள், பிற வர்த்தகர்கள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகளுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால், ஊரடங்கு காலத்தில் மத்திய அரசின் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் இருந்து சூரிய அஸ்தமன மையம் வரை ரூ.9 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று, கடற்கரை பகுதிகள் தற்போது புதுப்பொலிவு பெற்றுள்ளன. மக்களின் 70 ஆண்டுகால கோரிக்கையான முக்கடல் சங்கமத்தில் கைப்பிடிச் சுவருடன் படித்துறை அமைக்கப்பட்டுள்ளது.

5 படகுகள் தயார்

சூரிய உதயத்தை பார்க்க திறந்தவெளி காட்சிக் கூடம், மின் விளக்கு, இருக்கை வசதி, அலங்கார தரைத்தளத்துடன் கூடிய கடற்கரை பூங்காக்கள் அமைக் கப்பட்டுள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு விவே கானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்ல மேலும் இரு அதிநவீன படகுகள் வந்துள்ளன. சேவையாற்ற 5 படகுகள் தற்போது தயாராக உள்ளன.

பேருந்துகள் இயங்கத் தொடங்கியதில் இருந்து பிற மாவட்டங்களில் இருந்து கன்னியாகுமரியில் உள்ள பகவதியம்மன் கோயிலுக்கு மக்கள் வருகின்றனர். ஆனால், சுற்றுலா மையங்களை அவர்களால் கண்டுகளிக்க முடியவில்லை. தமிழகத்தில் உதகை, கொடைக் கானல் போன்ற பிற சுற்றுலா மையங்களில் கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அது போன்று கன்னியாகுமரியிலும் முறையான அனுமதியை அரசு வழங்க வேண்டும் என, சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.

அனுமதிக்காக காத்திருப்பு

அவர்கள் கூறும்போது, “ கன்னியாகுமரி மட்டுமின்றி திற்பரப்பு, மாத்தூர் தொட்டிப் பாலம், பத்மநாபபுரம் அரண்மனை போன்ற மையங்களையும் பார்க்க முடியவில்லை. சமூக இடைவெளியுடன் சுற்றுலா பயணிகளை அனுமதிக்கலாம். அரசின் முறையான அனுமதிக்காக காத்திருக்கிறோம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x