Published : 12 Oct 2020 10:09 AM
Last Updated : 12 Oct 2020 10:09 AM
பாஜகவில் சேர டெல்லி சென்றதாகத் தகவல் பரவிய நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில் நடிகை குஷ்பு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. பின்னர் வாய்ப்புகள் மங்கிய நிலையில் திமுகவில் இணைந்தார். அங்கு திமுக தலைமைக்குள் குஷ்புவால் பிரச்சினை ஏற்பட்ட நிலையில் அவர் திடீரென காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸில் அவருக்கு மிக உயர்ந்த பதவியான தேசிய செய்தித் தொடர்பாளர் பதவியில் அமர்த்தப்பட்டார்.
காங்கிரஸ் கட்சியில் குஷ்பு இருந்தாலும் அவர் அடிக்கடி பாஜக கொள்கைகளை ஆதரித்து வந்ததால் சர்ச்சையில் சிக்கினார். பொது சிவில் சட்டத்தை தான் ஆதரிப்பதாக குஷ்பு பேட்டி அளித்தார். அது சர்ச்சையானது. அப்போதைய காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அது அவரது சொந்தக்கருத்து. காங்கிரஸ் கருத்து அல்ல எனத் தெரிவித்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அதன் பின்னரும் சில நிகழ்வுகளில் பாஜகவுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்ததும் அது சர்ச்சையானதும் தொடர்கதையானது. இந்நிலையில் குஷ்பு பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாகத் தகவல் பரவத் தொடங்கியது. அப்போது அவர் அதை மறுத்து வந்தார். கடந்த வாரம் அவர் டெல்லி சென்றார் அப்போது அவர் பாஜகவில் இணையப்போவதாக வரும் தகவல் உண்மையா எனக்கேட்டபோது அவர் அதை மறுத்தார்.
பாஜகவில் சேருவதாக தன்னைப் பற்றி ட்விட்டரில் எழுதுபவர்கள் பணம் வாங்கிக்கொண்டு செய்தி போடுகிறார்கள் எனக் கடுமையாகச் சாடினார். அதே வாரத்தில் ஹாத்ரஸ் பாலியல் சம்பவம் சம்பந்தமான காங்கிரஸ் கண்டனக் கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். ராகுல் போல் தைரியமாக சம்பவ இடத்துக்குப் போக துணிவிருக்கா என்கிற பாணியில் பேசியதால், குஷ்பு குறித்த செய்தி வதந்தி என அனைவரும் நம்பினர்.
இந்நிலையில் குஷ்பு நேற்று திடீரென டெல்லிக்கு கிளம்பிச் சென்றார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்க முடியாது என மறுத்தார். காங்கிரஸில் இன்னும் இருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு அந்தக் கேள்விக்கு பதிலளிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
இன்று மதியம் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் குஷ்பு அக்கட்சியில் இணைய உள்ளதாகச் செய்தி பரவிய நிலையில், அவரை தேசிய செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து நீக்கியுள்ளது காங்கிரஸ்.
இதுகுறித்து காங்கிரஸ் தலைமைத் தொடர்பாளரும் அகில இந்தியச் செயலாளருமான ப்ரனவ் ஜா வெளியிட்ட அறிவிப்பில், காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து உடனடியாக குஷ்பு விடுவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
குஷ்பு நீக்கப்பட்ட சில நிமிடங்களில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக குஷ்பு சோனியாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT