Published : 12 Oct 2020 07:37 AM
Last Updated : 12 Oct 2020 07:37 AM
பாஜக அரசின் வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை அழிந்துபோய்விடும் என்று காங்கிரஸ் சார்பில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் சங்கமம் மாநாட்டில் அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டினார்.
பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து காங்கிரஸ் சார்பில், விவசாயிகள் சங்கமம் என்ற மாநில மாநாடு திருவண்ணாமலை அடுத்த அத்தியந்தல் கிராமத்தில் நேற்று நடைபெற்றது.
மாநாட்டுக்கு தலைமை வகித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது: கடந்த 1960-ல் உணவு பஞ்சம் ஏற்பட்டபோது, இந்திரா காந்தியின் பசுமை புரட்சி தீர்வுகண்டது. விவசாயம் மற்றும்பாலில் தன்னிறைவு பெற்றுள்ளோம். இதற்கு, காங்கிரஸ் காரணம்.
புதிய சட்டத்தை கொண்டு வந்து, அதனால் விவசாயிகள் லாபம் அடைவார்கள் என சொல்கிறார்கள். எப்படி லாபம் அடைய முடியும். விவசாயிகளுடன் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒப்பந்தம் போட்டு, இந்த பயிரை சாகுபடி செய்யுங்கள் என கட்டளையிடும். விலையை அவர்களே நிர்ணயம் செய்வார்கள்.
விளைப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்றால், கூடுதலாக விலையை கொடுக்கும் வியாபாரிகளிடம் பொருட்களை விவசாயிகள் விற்பனை செய்வார்கள். அதுதான்விவசாய சுதந்திரம். அதனைமோடி தடுக்கிறார். சிறுவிவசாயிகளை இடைத்தரகர்கள் என பாஜக கொச்சைப்படுத்துகிறது. இனி ஒப்பந்த விவசாயம்தான் செய்ய வேண்டும். மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை பல மாநில அரசுகள் எதிர்க்கும் நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி ஆதரித்தது என்பது மிகப்பெரிய கொடுமை.
தமிழகத்தில் பாஜக பரவலாக காட்சி அளிக்கிறது என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். எதிர்மறையான தத்துவங்களை பேசி மக்களை ஒன்று திரட்ட பாஜக முயற்சிக்கிறது. அது நிச்சயம் வெற்றி பெறாது. இவ்வாறு கே.எஸ்.அழகிரி பேசினார்.
மாநாட்டில் மாவட்டத் தலைவர் செங்கம் ஜி.குமார் வரவேற்றார். மாநில செயல் தலைவர் கே.ஜெயகுமார் தொடக்க உரையாற்றினார். பாஜக அரசின் விவசாய விரோத சட்டங்களை ஏன் எதிர்க்கிறோம் என்ற நூலை அகில இந்திய செயலாளர் சிரிவெல்லா பிரசாத் வெளியிட, ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா பெற்றுக் கொண்டார்.
மாநாட்டில், ‘3 வேளாண் சட்டங்களை இயற்றியதன் மூலம் மாநில அரசுகளின் உரிமைகள் மீது பாஜக அரசு தாக்குதல் நடத்தி உள்ளது. இத்தகைய விவசாய விரோத செயல்களுக்கு அதிமுக துணை போயிருக்கிறது. இதை இந்த மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.
ஹாத்ரஸ் இளம்பெண் படுகொலை சம்பவத்தில் நீதி கேட்டு, தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வரும் 17-ம் தேதி மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன குரல் எழுப்ப வேண்டும்ட என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், எம்.பி. ஜோதிமணி, எம்.எல்.ஏ. விஜயதாரணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT