Published : 12 Oct 2020 07:25 AM
Last Updated : 12 Oct 2020 07:25 AM
இந்திய அஞ்சல் துறையின்கீழ் இயங்கும், இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கிக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கரோனா ஊரடங்கு காலத்தில் மட்டும் தமிழகம் முழுவதும் 10.18 லட்சம் ஐபிபிபி கணக்குகள் தொடங்கப்பட்டு, ரூ.50 கோடிக்கும் அதிகமான வைப்புத் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல் துறை தலைவர் பா.செல்வகுமார் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:
இந்தியாவில் வங்கி இல்லாத மற்றும் வங்கிச் சேவை எளிதில் கிடைக்கப் பெறாத வாடிக்கையாளர்களுக்கு நிதி சார்ந்த சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், இந்திய அஞ்சல் துறையின்கீழ், இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி (ஐபிபிபி) கடந்த 2018 செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளில் இந்த வங்கியின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 3.6 கோடியைக் கடந்துள்ளது. ரூ.38,500 கோடி மதிப்பிலான நிதிப் பரிவர்த்தனைகளை செய்துள்ளது.
குறிப்பாக, கரோனா ஊரடங்கு காலத்தில் அஞ்சல் துறையும், இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியும் வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற சேவைகளை வழங்கி வந்தன. இதனால், வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
கரோனா ஊரடங்கு காலத்தில் மட்டும் தமிழகம் முழுவதும் 10.18 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டு ரூ.50 கோடிக்கும் அதிகமான வைப்புத் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஊரடங்கு காலத்தில் மின்னணு (டிஜிட்டல்) பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், ரூ.258.12 கோடி மதிப்பிலான 23.90 லட்சம் ஆதார் சார்ந்த பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அத்துடன், ரூ.138.16 கோடி மதிப்பிலான 15.84 லட்சம் நேரடி நன்மை பரிமாற்ற பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதைத் தவிர, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 5.92 லட்சம் ஐபிபிபி கணக்குகள் தொடங்கப்பட்டு, அதன்மூலம் ரூ.45 கோடி மதிப்பிலான தமிழக அரசு அறிவித்த கரோனா நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டது.
பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் மூலம், மாற்றுத் திறனாளிகள், முதியோர் ஓய்வூதியம் பெறுவோர், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு உதவித் தொகைகள், ஆதார் சார்ந்த பரிவர்த்தனைகள் மூலம் பயனாளிகளின் வீட்டு வாசலுக்கே கொண்டு சென்று வழங்கப்பட்டன.
மேலும், சீல் வைக்கப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் முகாம்களுக்கு நேரடியாக சென்று வங்கி சேவைகள் வழங்குவதில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது. இதனால், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசித்த பொதுமக்களின் பணம் எடுக்கும் தேவை பூர்த்தி செய்யப்பட்டது.
இவ்வாறு செல்வகுமார் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT