Published : 18 Sep 2015 03:33 PM
Last Updated : 18 Sep 2015 03:33 PM
கலையம்சம் மிக்க ஒரு மரச் சிற்பத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பரிசளிப்பதற்காக கடந்த 2 ஆண்டுகளாக காத்திருக்கிறார் கேரளத்தை சேர்ந்த கலைஞர் உண்ணிகிருஷ்ணன்.
பாலக்காடு மாவட்டம் பரலி, கினாவலூரு, வடக்குவீட்டில் வசித்துவரும் இவருக்கு வயது 44. 10-வது வரை படித்துள்ளார். என்ன சிற்பம்? எதற்காக பரிசு என்பது குறித்து அவர் கூறியதாவது:
என் அப்பா கோலார் தங்கச் சுரங்கத்தில் பணியாற்றியவர். நான் பிறந்தபோது கேரளத்துக்கு வந்தார். நான் 10-வது படிக்கும்போது இறந்துவிட்டார். என் அண்ணன்கள் இருவரும் தச்சுவேலையில் ஈடுபட, நானும் அந்த வேலைக்குப் போக ஆரம்பித்தேன். தச்சு வேலையில் மாதத்தில் பாதி நாட்களுக்கு பணி கிடைக்காது.
அதனால் என் மனம் போன போக்கில் கிடைத்த மரங்களில் கலைச் சிற்பங்கள் வடிக்க ஆரம்பித்தேன். அப்படி நூற்றுக்கணக்கான சிற்பங்களை செய்திருக்கிறேன்.
அதில் முதன்முதலாக நடிகர் மோகன்லால் உருவத்தை செதுக்கி அவருக்கு அளித்தேன். அவர் மிகவும் பாராட்டினார். நடிகை மீனா உருவத்தை சிற்பமாக வடித்துக் கொடுத்தேன்.
இதேபோல் முதல்வர் உம்மன்சாண்டி, முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், உலகக் கோப்பை பெற்ற ரொனால்டு, முன்னாள் குடியரசுத் தலைவர்கள் அப்துல்கலாம், பிரதீபாபாட்டீல், சங்கீத வித்வான் தட்சிணா மூர்த்தி என நாற்பதுக்கும் மேற்பட்ட விஜபிகளின் உருவம் பொறித்த சிற்பங்களை மரத்தில் செதுக்கி கொடுத்துள்ளேன். 2002-ல் பாலக்காட்டில் நடந்த கிரேஸ் எக்ஸ்போவிலும், பாலக்காடு நாட்டரங்கு கேந்திராவிலும் சிறந்த சிற்பத்துக்கான பாராட்டுச் சான்றிதழும், பரிசும் பெற்றேன்.
அப்துல்கலாம் கோவைக்கு வந்தபோது அவரை நேரில் சந்தித்து சிற்பத்தை கொடுக்க முயற்சித்தேன், அவரின் உதவியாளர் அனுமதிக்காததால் சிற்பத்தை அவருக்கு அனுப்பிவைத்தேன். அவர் பாராட்டுக் கடிதமும், அக்கினிச் சிறகுகள், வழி வெளிச்சம் ஆகிய நூல்களையும் பரிசாக அனுப்பினார்.
முதல்வர் ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோரை மரத்தில் சிற்பமாக வடித்துள்ளேன்.
ஜெயலலிதாவை நேரில் சந்தித்து கொடுக்க உள்ளேன். அப்படி முடியாவிட்டால் பார்சலில் அனுப்புவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT