Last Updated : 11 Oct, 2020 08:43 PM

 

Published : 11 Oct 2020 08:43 PM
Last Updated : 11 Oct 2020 08:43 PM

ஏலகிரி மலையில் தாவரவியல் பூங்கா, உள்விளையாட்டு அரங்கம் விரைவில் அமைக்கப்படும்: அமைச்சர் கே.சி.வீரமணி 

ஏலகிரி மலையில் ரூ.2.81 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட நிரந்தர கோடை விழா அரங்கை வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி இன்று திறந்து வைத்தார்.

ஏலகிரி

ஏலகிரி மலையில் தாவரவியல் பூங்கா மற்றும் உள் விளையாட்டு அரங்கம் விரைவில் அமைக்கப்படும் என அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.

ஏலகிரி மலையில் ரூ.2.81 கோடி செலவில் கட்டப்பட்ட நிரந்தர கோடை விழா கலையரங்கை வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி இன்று (அக்.11) திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்தார். எஸ்பி விஜயகுமார் முன்னிலை வகித்தார்.

தமிழக வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி புதிய கோடை விழா கலையரங்கைத் திறந்து வைத்துப் பேசியதாவது:

''திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலையில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் கோடை விழா நடத்தப்படும். இதற்காக இங்கு நிரந்தரக் கலையரங்கம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ரூ.2.81 கோடி செலவில் புதிய கலையரங்கம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் சுமார், 1,500-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் அமர்ந்து கலைநிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.

ஏலகிரி மலைவாழ் மக்களுக்குத் தேவையான வசதிகள் ஒவ்வொன்றாகச் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இங்கு தடையில்லா மின்சாரம் வழங்க துணை மின் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோடைகாலத்தில் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க குடிநீர் திட்டப்பணிகள் விரைவாக தொடங்கப்படும்.

தமிழக முதல்வர் அறிவித்தப்படி ஏலகிரி மலையில் தாவரவியல் பூங்கா, உள் விளையாட்டு அரங்கம், அரசு அலுவலர்களுக்காக மேம்படுத்தப்பட்ட பயிற்சி அரங்கம் விரைவில் அமைக்கப்படும்''.

இவ்வாறு அமைச்சர் வீரமணி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் மகேஷ்பாபு, ஆவின் தலைவர் வேலழகன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அருண்குமார், திருப்பத்தூர் சார் ஆட்சியர் அப்துல்முனீர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஹரிஹரன், உதவி இயக்குநர் (தணிக்கை) பிச்சையாண்டி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேம்குமார், சங்கரன், திருப்பத்தூர் வட்டாட்சியர் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x