Last Updated : 11 Oct, 2020 05:18 PM

2  

Published : 11 Oct 2020 05:18 PM
Last Updated : 11 Oct 2020 05:18 PM

அதிமுக கூட்டணியில்தான் பாஜக உள்ளது; முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான்: கூட்டணி சர்ச்சைக்கு பொன்.ராதாகிருஷ்ணன் முற்றுப்புள்ளி

நாகர்கோவில்

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில்தான் பாஜக உள்ளது. எங்கள் கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவிலில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

''நவராத்திரி விழாவிற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரம் கொண்டு செல்லப்படும் சுவாமி விக்ரகங்கள் பாரம்பரிய முறைப்படிதான் கொண்டு செல்லவேண்டும். விக்ரகங்கள் பவனியை வெறும் ஊர்வலமாக மட்டும் கருதக்கூடாது. வழக்கமான முறையை மாற்றாமல் தமிழக, கேரள அரசுகள் இணைந்து கரோனா விதிமுறைகளின்படி சுவாமி விக்ரகங்களைப் பாரம்பரியம் மாறாமல் கொண்டு செல்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை வகிக்கிறது. அதிமுக கூட்டணியில்தான் நாங்கள் உள்ளோம். எங்கள் கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். பாஜக அங்கம் வகிக்கும் அதிமுகவில் ஏற்பட்ட பிரச்சினை சுமுகமாக முடிக்கப்பட்டுள்ளது.

நான் சொந்த தொகுதியில் செல்வாக்கு இழந்திருப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருக்கிறார். யாருக்கு எங்கெல்லாம் செல்வாக்கு இருக்கிறது என்பதை யாரும் முடிவு செய்ய முடியாது. குமரியில் வரும் 14-ம் தேதி ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கும் தமிழக முதல்வர் பழனிசாமியைச் சந்திக்கவுள்ளேன்''.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பேட்டியின்போது குமரி மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ், மற்றும் பாஜகவினர் உடனிருந்தனர்.

பின்னணி என்ன?

கடந்த 7-ம் தேதி பாஜக, அதிமுக கூட்டணி குறித்தும், கூட்டணி முதல்வர் வேட்பாளர் குறித்தும் பொன் ராதாகிருஷ்ணன் கூறிய கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

''வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்பு எவ்வித சந்தேகமும் இன்றி தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது பாஜகவில் அங்கம் வகிக்கும் கூட்டணியே என்பது உறுதி. இது சூழ்நிலையைப் பொறுத்தது. எப்படி இருந்தாலும் தேர்தலுக்குப் பின்பு பாஜக அங்கம் வகிக்கும் அரசாகவே தமிழக அரசு இருக்கும்.

பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி திமுகவோடும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். எப்படி வேண்டுமானாலும் அமையலாம் தற்போதைய கூட்டணி மாறுவதற்கும் வாய்ப்புள்ளது'' என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார்.

இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''பொன்.ராதாகிருஷ்ணன் பாஜகவின் தலைவர் இல்லை. பாஜகவும், தொகுதி மக்களும் அவரை ஒதுக்கிவிட்டதாக அவர் விரக்தியில் இருப்பதாகத் தெரிகிறது. அவரது பேச்சைக் கருத்தில் கொள்ள வேண்டாம். கூட்டணி குறித்து பாஜக மேலிடம் தெரிவிக்க வேண்டும் அல்லது பாஜகவின் தலைவர் கூற வேண்டும். இங்கே பாஜக தலைவராக முருகன் உள்ளார். இந்தக் கூட்டணி தொடரும் என்று அவர் சொல்லியிருக்கிறார்'' என்று தெரிவித்தார்.

கிருஷ்ணகிரியில் நேற்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசும்போது, ''அதிமுக கூட்டணியில் இபிஎஸ்தான் முதல்வர் வேட்பாளர். ஒரு குறிப்பிட்ட கட்சியை நாங்கள் குறிப்பிட்டுப் பேச விரும்பவில்லை. அது தேசியக் கட்சியாக இருந்தாலும், மாநிலக் கட்சியாக இருந்தாலும் எங்களுடைய கூட்டணிக்கு வரும்போது எங்கள் தலைமையில் நாங்கள் அறிவித்த முதல்வர் வேட்பாளரை ஏற்றுக்கொள்பவர்கள்தான் எங்களோடு கூட்டணியில் இருக்க முடியும். ஏற்றுக்கொள்ளாதவர்கள் எங்களோடு கூட்டணியில் இருக்க முடியாது'' என்று தெரிவித்தார்.

இந்நிலையில், ''தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை வகிக்கிறது. அதிமுக கூட்டணியில்தான் நாங்கள் உள்ளோம். எங்கள் கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான்'' என்று பொன்.ராதாகிருஷ்ணன் இன்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் சில நாட்களாக நிலவிவந்த கூட்டணி குறித்த சர்ச்சைக்கு பொன்.ராதாகிருஷ்ணன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x